திருச்செந்தூர் சென்ற முழு பலனையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?


சொல்ல சொல்ல முருகன் மீது பக்தியும், மனதில் பரவசமும், ஆனந்தமும் ஊற்றெடுக்கும் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். தேவர்கள் பன்னீர் மரங்களாக இருந்து தவம் செய்த தலமாகும். முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பதற்காக குரு பகவான் தவம் செய்த தலம் திருச்செந்தூர். திருச்செந்தூர் தலத்தின் பெருமைகள் பற்றி பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பல வரலாறுகளும், கதைகளும் உள்ளன.


திருச்செந்தூர் சென்று வந்தால் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் திருச்செந்தூருக்கு எப்படி செல்ல வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்பதில் சில முறைகள் உள்ளன. இந்த முறைகள் முருகப் பெருமானே பின்பற்றிய முறைகளாக சொல்லப்படுகிறது. அதே முறையை பின்பற்றி நாமும் வழிபட்டால் மட்டுமே முருகனை தரிசித்த முழு பலனும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.


திருச்செந்தூர் சிறப்பு :


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கக் கூடியது திருச்செந்தூர். இங்கு கடற்கரையில் வீற்றிருந்த முருகப் பெருமான் அருள் செய்கிறார். ஆறு படை வீடுகளிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருச்செந்தூர் என்றே சொல்ல வேண்டும். கந்தசஷ்டி உருவான தலமும், கந்தசஷ்டி கவசம் உருவாவதற்கு காரணமான தலமும் இது தான். பல வகையிலும் சிறப்பு பெற்ற இந்த தலத்திற்கு வரலாற்றையும் முதலில் முழுவதுமாக தெரிந்து கொண்டால் தான், இங்க சென்று வழிபட்ட பலனை முழுமையாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும்.


திருச்செந்தூர் வரலாறு :


சூரபத்மனை வதம் செய்வதற்காக கைலாயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான், ஒவ்வொரு சிவாலயமாக சென்று வழிபட்டு விட்டு கடைசியாக திருச்செந்தூர் வருகிறார். இந்த தலத்திற்கு வந்த போது, சூரபத்மன் மீது போர் தொடுப்பதற்கு முன் கடைசியாக ஒரு முறை தூது அனுப்பி பார்க்கலாமே என முருகப் பெருமானிடம், பிரம்ம தேவர் சொல்ல, உடனடியாக வீரபாகு தேவரை தூதாக அனுப்புகிறார் முருகப் பெருமான். ஆனால் சூரனிடம் பேசி பலனில்லை. போர் செய்து, தங்களின் திருக்கை வேலால் அவனை சம்ஹாரம் செய்வது தான் ஒரே தீர்வு என்று சூரனை சந்தித்து திரும்பிய வீரபாகு தேவர் சொல்கிறார். உடனடியாக சூரன் ஆட்சி செய்த வீரமகேந்திரபுரி நோக்கி, முருகன் படையுடன் செல்கிறார். வீரமகேந்திர புரியை முருகன் நெருங்கும் போது, தங்களின் திருவடி படுவதற்கு ஏற்ற இடம் இது கிடையாது என பிரம்ம தேவர் கூறியதால், கதிர்காமம் சென்று படைவீடு அமைத்து தங்குகிறார் முருகப் பெருமான்.


முருகன் அமைத்த தீர்த்தம் :


முருகன், போர் கோலத்தில், கோபமாக காட்சி தருவதாலேயே கதிர்காமத்தில் தற்போதும் திரை வடிவிலேயே முருகனை தரிசனம் தருகிறார். அங்கிருந்து சூரபத்மனை போரிட்டு வதம் செய்த முருகன், வீரமகேந்திரபுரியை கடலோடு கடலாக அழிந்து போகும் படி செய்கிறார். பிறகு மீண்டும் திருச்செந்தூர் திரும்பிய முருகன், போரில் பலரையும் வதம் செய்த பாவம் தீர, சிவ பூஜை செய்ய நினைக்கிறார்கள். இதற்காக பஞ்சலிங்கங்கள் எனப்படும் 5 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்கிறார். முதலில் சமுத்திர ஸ்நானம் செய்த பிறகு, நன்னீரில் நீராடி விட்டு தான் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக முருகப் பெருமான் தன்னுடைய வேலால் உருவாக்கிய தீர்த்தம் தான் நாழி கிணறு என சொல்லப்படும், கந்த புஷ்கரணி தீர்த்தம்.


திருச்செந்தூர் மூலவர் திருக்கோலம் :


நாழி கிணற்றில் நீராடி விட்டு முருகன் சிவ பூஜை செய்து கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் ஓடி வந்து, "சுவாமி" என அழைத்ததும் கையில் பூஜைக்காக எடுத்த பூஜை கூட கீழே வைக்காமல், கையில் பூவுடன் அப்படியே திரும்பி, தேவர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதனால் தான் இன்றும் திருச்செந்தூர் மூலவரான முருகன் கையில் பூவுடன் காட்சி தருகிறார். இவருக்கு பூஜா மூர்த்தி என்று பெயர். "பூ" என்றால் பூர்த்தி செய்தல், "ஜா" என்றால் உண்டாக்குதல் என்று பொருள். மல,மாய,கன்மங்களை பூர்த்தி செய்து, சிவ ஞானத்தை உருவாக்கக் கூடிய தெய்வமாக திருசெந்தூர் ஆண்டவன் விளங்குகிறார்.


​முருகன் கடற்கரையில் கோவில் கொள்ள காரணம் :

கயிலைக்கு இணையான திருத்தலம் என அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருச்செந்தூர் சென்ற முழு பலனையும் அடைய வேண்டும் என்றால், முன்னோர்களால் வகுக்கப்பட்ட முறையில் சென்று வழிபட்டால் மட்டும் முழுமையான பலனையும் பெற முடியும். திருச்செந்தூரில் முருகப் பெருமான் கடலை பார்த்தப்படி காட்சி தருகிறார். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்த நம்மை காப்பாற்றுவதற்காகவும், கடல் அலை போல் மீண்டும் மீண்டும் ஆசை அலைகளில் சிக்கி, நெருப்பை போன்ற துன்பத்தை அனுபவிப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் கடற்கரையில் அமர்ந்து அருள் செய்வதால் அவருக்கு செந்தில் ஆண்டவர் என்றும், திருச்செந்தூர் ஆண்டவர் என்றும் பெயர்.


திருச்செந்தூர் சென்ற பலனை பெற செய்ய வேண்டியவை :


திருச்செந்தூர் சென்ற முழு பலனையும் அனுபவிக்க முதலில் வதனாரம்பத்துறை எனப்படும் கோவிலுக்கு எதிரே உள்ள கடலில் நீராடி விட்டு, பிறகு நாழி கிணற்றில் நீராடி விட்டு, அப்படியே தங்கும் இடத்திற்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும். முதலில் துந்துகை விநாயகரை தரிசித்து நம்முடைய குறைகளை சொல்லி முறையிட வேண்டும். அதற்கு பிறகு கோவிலுக்குள் சென்று செந்தில் ஆண்டவரை வழிபட வேண்டும். விநாயகரை வழிபடாமல் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கு முழு பலனும் கிடைக்காது. அதனால் திருசெந்தூர் செந்தில் ஆண்டவனின் அருளை முழுவதுமாக பெற வேண்டும் என்றால், முதலில் துந்துகை விநாயகரை வழிபட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.