ஆனி திருமஞ்சனம் 2024 வெள்ளிக்கிழமை வழிபடும் முறை!

 


ஆனி திருமஞ்சனம் 2024 : வீட்டில் வழிபட வேண்டிய நேரம், சொல்ல வேண்டிய மந்திரம், வழிபடும் முறை


ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு மற்றும் விரத நாட்களில் ஒன்று ஆனி திருமஞ்சனமாகும். இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது தேவர்களின் மாலை நேரமாக கருதப்படும் ஆனி மாதத்தில், அவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். இந்த மகா அபிஷேகத்தை காண்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.


ஆனி திருமஞ்சனத்தன்று சிதம்பரத்திற்கோ அல்லது மற்ற சிவன் கோவில்களுக்கோ சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே எந்த நேரத்தில், என்ன மந்திரம் சொல்லி, எப்படி வழிபட்டால் சிவனின் முழு அருளையும் பெற முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்த நாளில் பெண்கள் சிவனை வழிபடுவதால் அவர்களின் கணவரின் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.


ஆனி திருமஞ்சனம் :


ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதையே ஆனி திருமஞ்சனம் என சொல்கிறோம். சிவனின் லிங்க திருமேனிக்கும், உருவமாக இருக்கும் திருமேனிக்கும் தினந்தோறும் கோவில்களில் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு மட்டும் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். இவற்றில் மார்கழி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா தரிசனம் என்றும், ஆனி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனி திருமஞ்சனம் என்றும் சிறப்பித்து கூறுகிறோம்.


மகா அபிஷேகம் :


பொதுவாக சிவனுக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் 24 நிமிடங்கள் மட்டுமே நடைபெற வேண்டும் என ஆகம விதி சொல்கிறது. ஆனால் நடராஜருக்கு நடத்தப்படும் இந்த ஆறு அபிஷேகங்களும் கிட்டதட்ட 3 மணி நேரம் நடைபெறும். இவற்றில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனத்தின் போது மட்டுமே நடராஜருக்கு சூரிய உதயத்திற்கு முன் அபிஷேகம் நடத்தப்படும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் மாலைப் பொழுதிலேயே நடத்தப்படும். ஆனி திருமஞ்சனத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


ஆனி திருமஞ்சனம் 2024 தேதி, நேரம் :


இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம் ஜூலை 12, ஆனி 28 ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜூலை 11 ம் தேதிபகல் 01.47 மணிக்கே உத்திரம் துவங்கி விட்டாலும், சூரிய உதய காலத்தில் எந்த நட்சத்திரம் உள்ளதோ, அதுவே அன்றைய நாளுக்கான நட்சத்திரம் என்பதால் ஜூலை 12ம் தேதி ஆனி திருமஞ்சனமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. மாலை 04.20 மணி வரை மட்டுமே உத்திரம் நட்சத்திரம் உள்ளதால் அதற்கு முன்பாக ஆனி திருமஞ்சன வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.


ஆனி திருமஞ்சனம் வழிபாட்டு முறை :


ஆனி திருமஞ்சனத்தன்று திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய தலங்களுக்கு செல்ல முடிந்தவர்கள் அங்கு சென்று சிவ பெருமானை தரிசிக்கலாம். முடியாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானை வழிபடலாம். ஜூலை 12 அன்று பகல் 12.15 வரை சஷ்டி திதியும் உள்ளது. முருகனுக்குரிய சஷ்டி திதியும், நடராஜருக்குரிய ஆனி மாத உத்திர நட்சத்திரமும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் சிவனையும், முருகப் பெருமானையும் வழிபடுவது சிறப்பானது. ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் காலை 10.30 முதல் 12 வரையிலான நேரம் ராகு காலமாகும். அந்த நேரத்தில் சிவ வழிபாடு செய்வதை தவிர்ப்பது நல்லது.


வீட்டிலேயே வழிபடும் முறை :


கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே லிங்கம் வைத்திருந்தால் அதற்கு தண்ணீர், பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யலாம். சிவலிங்கம் இல்லாதவர்கள் இவற்றை சிவனுக்கு படைத்து வழிபடலாம். சிவனுக்கு வில்வ இலை சமர்பித்து வழிபடலாம். அதோடு, பெண்கள் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 3 முறை சொல்லி வழிபடலாம். இவ்வாறு வழிபடுவதால் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.


சொல்ல வேண்டிய மந்திரம் :


"க்ருபா ஸமுத்ர ஸீமுகம் த்ரிநேத்ரம்

ஜடாதரம் பார்வதி வாம பாகம்

ஸ்தாசிவம் ருக்ரமனந்த ரூபம்

சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி"


இந்த மந்திரத்தை சொல்லி, ஆனி திருமஞ்சன நாளில் சிவ பெருமானை வழிபட்டால் ஆயுள் கூடும், செல்வ வளங்கள் சேரும், நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.