யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் !

 


சுமந்திரனின் நிகழ்ச்சி நிரல் பாதிக்கப்படும் ....தமிழ் பொது வேட்பாளரை எதிர்கிறார்...சுரேஷ் தெரிவிப்பு 


பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தனது தனிப்பட்ட  அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் பாதிக்கப்படும் என்பதால் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை ஏற்க மாட்டார்கள் அல்லது தோற்றுப்போகும் என்ற போர்வையில்  கருத்து தெரிவித்து வருவதாக ஈபிஆர்எல் பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியதற்காக தமிழ் மக்களை அழித்த சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது. 


அது மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதற்காக கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன  மற்றும் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.


பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள்  தோற்றுப் போகும் எனக் கூறுவது வாக்களிக்க கூடாது என்ற கருத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைகிறது. 


ஏனெனில் அவருக்கு வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்ற நிலையில் தமிழ் பொது வேட்பாளரை குழப்புவது அவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் தோற்றுப் போகும் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம். 


 சுமந்திரனைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது அநுரவுக்கோ வாக்கு கொடுத்து இருக்கலாம் அல்லது யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் என்பது அவரது அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம்.


தமிழ் மக்களும் கடந்த காலங்களில் சிங்கள வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்காக வாக்களித்தார்கள் அவர்கள் வென்ற பின் தமிழ் மக்களை ஏமாற்றிய சம்பவங்களும் இடம்பெற்றதை மறக்க முடியாது. 


அதன் காரணமாக தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் நிற்கிறார்கள் என்பதை தென் இலங்கைக்கு காட்டுவதற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பினர்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். 


அதற்கான சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் பொது வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் முன் வைப்பார்கள் என நினைக்கிறேன். 


ஆகவே  தமிழ் பொது வேட்பாளர் தோற்றுவிடுவார் என்ற அச்சம் சுமந்திரனுக்கு உணர்வு நீதியாக எழந்த விடையம் அல்ல தனது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக பொது வேட்பாளருக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைக்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.