பொருளையோ பதவியோ இழந்தாலும் மகிழ்ச்சி வரும் எப்படித் தெரியுமா?
நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பதவியோ, பொருளோ, உறவோ எதுவாக இருந்தாலும், நம்மை விட்டு நீங்கும் போது மகிழ்ச்சி தரவேண்டும் என்று சொன்னால், அந்தப் பொருளோ, உறவோ, பதவியோ நம்மை பற்றி கொள்ளக் கூடாது. அதாவது, நாம் அதன் மீது மனரீதியான ஒரு இணைப்பை (attachment) ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் அது நம்மை விட்டுப் போகும்போது, எந்தவித துன்பத்தையும் கொடுக்காமல் இருக்கும். திருவள்ளுவர் அற்புதமான ஒரு குறட்பாவில் இதனை விளக்குகிறார். ஒருவனுக்குத் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், அந்தத் துன்பம் தரும் பொருளிலிருந்து அவன் விலகி இருக்க வேண்டும். எவை எவற்றிலிருந்து ஒருவன் பற்றில்லாமல் விலகி இருக்கின்றானோ, (renounced) அந்தந்தப் பொருட்களினால் அவனுக்கு எந்த துன்பமும் எக்காலத்திலும் வராது.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனி னதனின் இலன்
– திருக்குறள் (துறவு – 341)
ஒரு பொருளின் மீதும் பற்றில்லாமல் இருந்தால், வாழ்வில் அந்தப் பொருட்களால் வரும் துன்பங்களில் இருந்து விலகியிருக்கலாம். ஒரு பொருள் வாங்கிவிட்டு தொலைவதில் இருந்து அடுத்தவர் மேல் வைக்கும் அன்பு வரை அனைத்தையும் இந்தக் குறட்பா தெளிவாகச் சொல்கிறது. இக்குறட்பாவில் இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. பற்றில்லாமையைக் குறிக்கும் விதமாக வள்ளுவர், இத்திருக்குறளை உதடுகள்கூட ஒட்டாது உச்சரிக்கும் படி எழுதியிருக்கின்றார். மேலுதடும் கீழுதடும் ஒன்றையொன்று தழுவாது, ஒன்றின் மீது ஒன்றிற்குப் பற்றின்றி இக்குறட்பாவைச் சொல்லலாம். இப்பொழுது இந்த விஷயத்தை ராமாயணத்தோடு இணைத்துச் சிந்திப்போம்.
தசரதன், அரசபதவியைக் கொடுத்தவுடன், அதில் எந்த விதமான மன ரீதியான இணைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், பற்றற்ற நிலையில் இருக்கிறான். தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவது ஒரு மகனின் கடமை. அரச கட்டளையை நிறைவேற்றுவது ஒரு குடிமகனின் கடமை. இரண்டு கடமையையும் எண்ணிப் பார்க்கிறான். எப்படிப் பார்த்தாலும் அரசபதவியை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில், அரச பதவிக்கு ராமன் சம்மதித்தான். ஆனாலும், மனரீதியான ஒரு இணைப்பை அந்தப் பதவியோடு அவன் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் “இந்தப் பதவி உனக்கு இல்லை பரதனுக்குத்தான்” என்று தசரதன் சொன்னதாக கைகேயி சொன்னவுடன், அவனுக்கு எந்தவிதமான வருத்தமும் ஏற்படவில்லை.
இதுவரை சரி. ஆனால், அவனுக்கு இந்தச் செய்தியைக் கேட்டு, மகிழ்ச்சி அதிகரித்ததே அது எதனால் என்று சிந்திக்க வேண்டும். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதல் காரணம், ஒரு பொருள் தன்னை விட்டு விலகும் பொழுது, மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்று சொன்னால், அந்தப் பொருள் தன்னிடம் இருக்கும் போது, ஏதாவது ஒரு விதத்தில் சிரமத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ராமன் அப்படித்தான் அரசபதவியைத் தசரதன் தரும் பொழுது நினைத்தான்.
“தாதை, அப் பரிசு உரைசெய,
தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
‘கடன் இது’ என்று உணர்ந்தும்,
‘யாது கொற்றவன் ஏவியது
அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும்,
அப் பணி தலைநின்றான்.’’
– என்ற பாடல் இராமனின் மனநிலையை உணர்த்தும்.
‘‘இது என்ன, நம்முடைய தலையில் இப்படிப்பட்ட ஒரு பதவியைச் சுமத்துகின்றார்களே, இது நமக்குச் சுமை ஆயிற்றே என்று ராமன் நினைப்பானோ என்று தசரதனும் சொல்கிறான்.
“அரும் துயர் பெரும் பரம் அரசன் வினையின் என்வயின் வைத்தனன் எனக் கொள வேண்டா” என்று தசரதன் சொல்கிறான். காரணம், ஒரு அரசை தலைமையேற்று நடத்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை ராமன் உணர்ந்திருந்தான். அதனால் இப்படிப்பட்ட ஒரு பாரத்தைத் தாங்குகின்ற பிரச்னையிலிருந்து தானாகவே ஒரு விடுதலை கிடைத்ததே என்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. அவனே வேண்டாம் என்று சொல்லி இருந்தால் தந்தையினுடைய கருத்துக்கு விரோதமாக நடக்கும் சூழ்நிலை வந்திருக்கும். அந்த இக்கட்டில் இருந்துதான் தப்பித்து விட்டோம் என்பதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி. இன்னொரு விஷயம், ராமனுடைய அவதார நோக்கம் என்ன? ராவணனை அழித்து, தேவர்களைக் காப்பாற்றுவது. இந்த நோக்கம் இல்லாவிட்டால் அவன் வைகுண்டத்திலேயே இருந்திருக்கலாம். அவன் பூமிக்கு இறங்கி தசரதனுடைய பிள்ளையாக வரவேண்டிய அவசியமே கிடையாது. தேவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தசரதன் பிள்ளையாக அவதரித்தான்.
இப்பொழுது அரசபதவி கிடைத்தவுடன், இதென்ன நம்முடைய அவதார நோக்கத்திற்கு விரோதமாக இந்தப் பதவி வந்துவிட்டது. இந்தப் பதவியை வைத்துக்கொண்டு அயோத்தியை நன்றாக ஆளலாம் என்றாலும்கூட தன்னுடைய அவதார நோக்கமாகிய ராவண சம்ஹாரம் நடக்காதே என்று தவித்தான். இதை அவன் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. காரணம் அவன் எந்த நேரத்திலும் தன்னை மகாவிஷ்ணுவின் அம்சம் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது. ‘‘அஹம் மானுஷம்’’ என்றுதான் அவன் எல்லா இடங்களிலும் சொல்லுகின்றான்.
ஆனால், அவன் தேவாதி தேவன் என்பதை ஒரு சிலர் உணர்ந்துதான் இருந்தார்கள். முதலில் உணர்ந்தவர் வசிஷ்டர். மகாவிஷ்ணு தசரதனுக்கு பிள்ளையாக பிறக்கப்போகிறான் என்பதைத் தன்னுடைய தவ வலிமையால் உணர்ந்தவர். ஆனால் அவர் எந்த இடத்திலும் வெளியே சொல்லவில்லை. தேவ ரகசியத்தை அவர் காப்பாற்றினார்.
அதற்கு அடுத்து விஸ்வாமித்திர மகரிஷி. ராமனைப் பரிபூரணமாக உணர்ந்து, சபையிலேயே “அஹம் வேத்தி” என்ற ஸ்லோகத்தால், “ராமன் தேவாதி தேவன் என்பதை நான் அறிவேன்; இங்குள்ள மகரிஷிகளும் அறிவார்கள்” என்று வெளிப்படையாகச் சொன்னார். அதற்கு பிறகு, சபரி கவந்தன், விராதன், அனுமன் போன்ற பலரும் ராம அவதாரத்தின் பின்னணியை உணர்ந்தவர்களாக இருந்து ராமனைத் துதித்தனர். இது கம்பராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் வருகிறது அவ்வளவு ஏன்? ராவணனே ஒரு கட்டத்திலே இவன் தேவாதி தேவன் என்பதை உணர்ந்தான். (இவனே அவ்வேத முதற்காரணன்)
இப்படிப்பட்ட சூழலில் ராமன் வெளிப்படையாகத் தன்னுடைய அவதார நோக்கத்தைச் சொல்ல முடியாமல் தவித்தான். ஆனால், கைகேயி மந்தரை இருவரும் சேர்ந்து ஏதோ ஒரு வகையில் ராம அவதார நோக்கத்துக்கு உதவி செய்தவர்களாக அமைந்து, இவனை காட்டிற்குப் போகச் சொன்னதை நினைத்து ‘‘ஆகா, நம்முடைய அவதார நோக்கம் நிறைவேறுவதற்கு இனித்தடையில்லை’’ என்று மகிழ்ந்தான்.
நாம் விரும்பாத ஒன்று (அரச பதவி) நம் கையை விட்டுப் போய், நாம் விரும்பியது (காட்டிற்கு போகும் வாய்ப்பு) கிடைத்துவிட்டால் மகிழ்ச்சிதான் வரும். அந்த மகிழ்ச்சிதான் ராமனுக்கும் வந்தது. இவ்வளவுதானா? இன்னும் ஒரு காரணமும் உண்டு. அது என்ன?
கருத்துகள் இல்லை