ஈரத்தீ (கோபிகை) - பாகம் 42!!

 


மாலை நேரப்பொழுது  கூதலுடன் கடந்தது. சில்லென்ற  மெல்லிய காற்று இரைச்சலுடன் வீச,   மரங்கள் சற்றே அசைந்து  சாமரம் வீசியது. 


புழுதியின் வாசம் மூக்கில் உரச தென்றலின் குளுமை இதமாக்கியது அந்த நேரத்தை. 


வாசலுக்கு முன்னால் நின்ற வேப்ப மரக்காற்று முகத்தில் வந்து மோதியது. 


சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சிந்தனையோடு அமர்ந்திருந்த தேவமித்திரன்,   


"அப்பா.. .. பாமதி அக்கா வாறா... நீங்களே கதையுங்கோ"  என்றான். 

சற்றுத் தூரத்தில் புன்னகையுடன் வந்து கொண்டிருந்த பாமதியின் வெற்று நெற்றிதான் எப்போதும் இருவருக்கும் வேதனையைக் கொடுப்பது. 



தேவமித்திரனின் தந்தை, பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு,  சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தியவராக நிமிர்ந்து அமர்ந்தார். 


அருகில் வந்த பாமதி, 

"அப்பா... நீங்கள் வரச்சொன்னதெண்டு அகரன் வந்து கூப்பிட்டவன்,  தேவா, வேற.. வேலைகளை முடிச்சுக்கொண்டு வாங்கோ அக்கா... எண்டவன்,  ஏதும் அலுவலே.... அப்பா? " என்றார். 


"ஓமோம்.... கொஞ்சம் கதைக்கவேணும்,  இரம்மா... " 


அருகே கிடந்த மரக்கதிரையை சத்தம் வராமல் இழுத்துப் போட்டபடி அமர்ந்து கொண்ட  பாமதிக்கு சற்று ஆச்சரியமும் சற்றே யோசனையாகவும் இருந்தது. 


பாமதியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல் மனயோசனையைச் சொல்ல,  

"எல்லாம் நல்ல விசயம் தான்,  யோசியாதை"  என்றார் தேவமித்திரனின் தகப்பனார். 


"அதில்லையப்பா... திடீரென்று நீங்கள் கதைக்க எண்டு கூப்பிட்டதும் கொஞ்சம் யோசனையாப் போட்டுது ..." என்ற பாமதி கதிரையில் நன்றாகச் சாய்ந்து அமர, 


"பயப்பிடுறமாதிரி அப்பிடி என்னக்கா சொல்லப்போறம்...? "  ஏன்ற தேவமித்திரனுக்கு, 


"இப்ப பெடி பெட்டையளை என்ன சொல்லுறது.. நாட்டிலை கண்டதும் நடக்கிது,  எப்ப என்ன நடக்குதெண்டே தெரியேல்லை,  ஒரு குமரை வேற வைச்சிருக்கிறன்... " பெருமூச்சு விட்ட பாமதி அக்காவை 


நெகிழ்ச்சியோடு பார்த்த தேவமித்திரன்,  

"அக்கா....உங்கட குமர்,  சொக்கத்தங்கம்... அவளாலை உங்களுக்கு ஒரு யோசனையும் வராது" என்றான். 


"அது சரிதானடா... தேவா... இருந்தாலும் அச்சம் ஆரை விட்டுது,  சொல்லு பாப்பம் " என்றார். 


தலையை ஆட்டியபடி சம்மதித்த தேவமித்திரன் தந்தையைப் பார்த்தான். 


"அம்மாடி பாமதி....உன்னை ஏன் யோசிக்க வைப்பான், நான் விசயத்தைச் சொல்லுறன்",  என்றவர்,  


"எங்கட தேவாவின்ரை நண்பன் மேகவர்ணன் இருக்கிறான் எல்லே,  அவனுக்கு எங்கட பார்கவியைப் பிடிச்சுப் போட்டுதாம்.... கலியாணம் செய்ய கேட்கிறான்,  பார்கவியம்மாவுக்கும் விருப்பம் தானாம்,  தேவா,  எல்லாம் கேட்டிட்டான்.... அதுதான் உனக்குச் சொல்லி உன்ரை அபிப்பிராயத்தைக் கேப்பம் எண்டு... "


"அப்பா... இதைவிடச் சந்தோசம் எனக்கு வேற என்ன இருக்கு,  அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேணும் என்று நான் கடவுளிட்டை வேண்டாத நாள் இல்லை.... "


" அதுதான் போல நல்ல ஒரு பிள்ளை அவளுக்கு வந்து கிடைச்சிருக்கிறான், தேசப்பற்று உள்ள பிள்ளை,  பொறுப்பும் அன்பும் நிறைய இருக்கு அவனிட்டை....தாதிஉத்தியோகத்தரா வேலைசெய்யிறான், நல்ல சம்பளம் " 


"நீங்கள் சொன்னால் சரிதான் அப்பா... மற்றது உந்த சீதன விசயம் எல்லாம் நீங்களே கதையுங்கோ அப்பா... அவர் அரசாங்க உத்தியோகம் தானே, சீதனம் கனக்க கேப்பினமோ தெரியேல்லை,   என்ரை நகையளும் எல்லாம் அவளுக்குத் தான்,  வங்கியிலை கடனுக்கு கதைச்சுத்தான் வைச்சிருக்கிறன்,  பத்து லட்சம் வரையிலை கடன் எடுக்கலாம்,   நான் எப்பிடியும் சமாளிப்பன் அப்பா... நீங்கள் கதையுங்கோ... " என்ற பாமதியை அன்பாகப் பார்த்த தேவமித்திரனின் தகப்பனார்,   


"நீ கண்டபடி யோசிக்காத பிள்ளை,  அவன் எங்கட பிள்ளை,  அப்பிடி கனக்கச் சீதனம் கேக்கமாட்டான்" என்றார். 


"அக்கா... நீங்கள் நினைக்கிற மாதிரி ஒண்டும் இல்லை,  வர்ணன் சீதனம் வாங்கமாட்டான்,   அவனுக்கு அந்த வார்த்தையே சரிவராது,  அதெல்லாம் பிறகு ஆறுதலா கதைப்பம்... இப்ப உங்கட விருப்பத்தைச் சொன்னால் சரி" என்ற தேவமித்திரனுக்கு 


"தேவா... உன்ரை நண்பன் எண்டால் அவர் எப்பிடி இருப்பார் எண்டு தெரியாதே... உனக்கு பார்கவியிலை சொந்த சகோதரி மாதிரி அன்பு,  அவளுக்கு நீ தேர்வு செய்கிற வாழ்க்கை நல்லதாத்தான் இருக்கும் எண்டுற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு... நீ மற்ற விசயங்களை அவரிட்டக் கதை,  நல்ல காரியங்களை தள்ளிப்போடக்கூடாது,  கெதிப்படுத்தி அலுவலை முடிப்பம்..."  என்ற பாமதிக்கு தலையை ஆட்டி சம்மதம் சொன்னான் தேவமித்திரன். 


"அவரின்ரை சொந்தபந்தம்... சகோதரங்கள் எல்லாம் இருக்கினமே... "


மேகவர்ணனுக்கு,  தமையனும் அவரின்ரை பிள்ளையும் மட்டும் தான் இருக்கினம்,,  தங்கச்சி ஒராள் இருந்தவா,  செஞ்சோலை வளாகத்திலை நடந்த விமானக் குண்டு வீச்சு தாக்குதலிலை அந்தப்பிள்ளை சாவடைஞ்சிட்டுது,  தாய் தகப்பன் கடைசி யுத்தத்திலை முள்ளிவாய்க்கால் மண்ணிலை செல் விழுந்து சிதறிப்போட்டுதுகள்... சீலன் அண்ணாவின்ரை மனைவியும் கடைசி நாட்களிலைதான் இறந்தவா... "


காலம் எங்களுக்குத் தந்த கோரமான முடிவு, முள்ளிவாய்க்கால்...என்னசெய்ய.... போனதுகள் புண்ணியம் செய்ததுகள்... நாங்கள் தான் உயிரோடை இருந்து இந்த நாட்டிலை நடக்கிற கண்றாவி எல்லாத்தையும் பாக்கிறம்..." என்ற பாமதிக்கு 


" சரி.. விடு... வாழ்க்கையைச் சலிக்காதை.. வாழுற வரைக்கும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழவேணும்... அதுதான் முக்கியம்" என்றார் தேவமித்திரனின் தந்தையார். 


"என்னத்தை அப்பா.. நிம்மதியாக வாழுறது,  அன்றாடப் புதினங்களையும் நாட்டு நடப்பையும் கேட்டால் ஈரக்குலை நடுங்கிது, பெடியள் வளரவளர கத்தியிலை நடக்கிற மாதிரித்தான் நிலைமை,  கஞ்சா எண்டுதுகள்,  ஐஸ் எண்டுதுகள், ஊசி எண்டுதுகள்,  அலைபேசி அது இதெண்டு கொஞ்சநஞ்ச சீரழிவே..... சூழல் அப்பிடி மாறிப்போச்சு,  மாத்திப் போட்டாங்கள் " 


"அது சரிதான் அக்கா,  ஆனால் பிள்ளைகள் வழி மாறிப்போறதுக்கு முழுக்க சூழல் காரணமில்லை,  வீடுகளிலையும் கவனிப்பும்,   கண்டிப்பும் வேணும்,   பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேணுமெல்லோ... வீட்டிலை தாய்தகப்பன் தாங்கள் சண்டை பிடிச்சுக்கொண்டு,  போனிலையும் தொலைக்காட்சி நாடகங்களிலையும் மூழ்கி இருந்தால் பிறகு,  பிள்ளையள் சீரழியத்தான் செய்யுங்கள்... "  என்ற தேவமித்தினுக்கு 


" அதுவும் சரிதான் தேவா,  இனியனை நினைச்சால் எனக்கு பயமாகத்தான் இருக்கும் ....." என்றார் பாமதி. 


"அவனை நினைச்சு நீ ஏன் பயப்பிடுறாய்?  அவன் பிரிகேடியரின்ரை மகன்,  அந்த வீரமும் ஓர்மமும் ஒழுக்கமும் அவனிட்டை நிறையவே இருக்கு,  அவன் ஒருநாளும் தடம் மாற மாட்டான்,  அதோடை,  நீ வரலாறைச் சொல்லிச் சொல்லி அவனை வளர்க்கிறாய்....  அது ஒரு காலமும் வீண் போகாது... நீ  யோசிக்காதை"  என்ற தேவமித்திரனின் தகப்பனாரை கண்ணீர் ததும்பிய விழிகளுடன் பார்த்து தலையை அசைத்தாள் பாமதி. 


"அக்கா.... இனியனோடை சேர்ந்து அகரன் கூட, நல்லா எங்கட வரலாறுகளைத் தெரிஞ்சு கொள்ளுறான்,  இரவிலை ஒவ்வொரு விசயத்தையும் என்னட்டைக் கேட்கும் போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கும் " என்றான் தேவமித்திரன். 


" அது உண்மைதான் தேவா, வரலாற்றை நாங்கள் சரியாக அடுத்த தலைமுறைக்கு கடத்த வேணும்,  அது எங்களுக்கான தார்மீகப் பொறுப்பு,  இல்லாட்டி இப்ப,  வரலாற்றை மாத்தியும் திரிபுபடுத்தியும் சொல்லுறதை அடுத்த தலைமுறை நம்பிப்போடுவினம்...அதிலை நாங்கள் கவனமாக இருக்க வேணும்...." 



"ஓமக்கா.... நீங்கள் சொல்லுறது சரிதான்.. அதுதான் விசயம் " என்றான் தேவமித்திரன். 


"சரி.. ..நாட்டு நடப்பு கதைக்கத் தொடங்கினால் விடிய விடிய கதைக்கலாம்.. அவ்வளவு இருக்கு,  எனக்கு இடியப்பம் அவிக்கிற வேலை இருக்கு,  .மிச்ச விசயங்களை நீ கதையன் தேவா... நான் போட்டு வாறன் " என்றபடி எழுந்து நடந்த பாமதியின் மனதில் இதமான நிம்மதி பரவியது. 


தீ  தொடரும் ...



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


 





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.