புரட்டாசி முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு!


புரட்டாசி மாதம் முழுக்க முழுக்க தெய்வ வழிபாட்டிற்குரிய மாதமாகும். அதனால் தான் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த மாதம் கால நிலையிலும் மாற்றம் ஏற்படும் என்பதால், நம்முடைய உடலில் ஜீரண சக்தியானது குறையும். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சார்ப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லி வைத்தார்கள்.


புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் எந்த முறையில் வீட்டிலேயே எளிமையான பெருமாளை வழழிபட்டு, விரதத்தை துவக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையில் புரட்டாசி மாத வழிபாட்டினை துவக்குவதால் புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளின் அருளால் நமக்கு நன்மைகள் பலவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


புண்ணியமான புரட்டாசி மாதம் :


பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவது புரட்டாசி மாதம். புரட்டாசியின் எந்த நாளில் பெருமாளை மனதார வழிபட்டாலும், அதற்கு முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமையில் பிறக்கிறது. அன்றைய தினம் பவுர்ணமி திதியுடன் இணைந்து வருவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. பவுர்ணமியில் பொதுவாக வாழ்வில் ஏற்றம் தரும் சத்ய நாராயண பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதுவும் புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் வரும் பவுர்ணமி அன்று சத்யநாராயண பூஜை செய்வது எத்தனை உயர்வான பலன்களை தரும் என்பதை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.


​புரட்டாசி சனிக்கிழமை :


புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட ஏற்ற நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பல மடங்கு அதிக பலன்களை நமக்கு தரக் கூடியவையாகும். புரட்டாசி மாதமும் முழுவதிலும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாதவர்களும் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்தால், புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெற்று விட முடியும். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. செப்டம்பர் 21, செப்டம்பர் 28, அக்டோபர் 05, அக்டோபர் 12 ஆகிய புரட்டாசி சனிக்கிழமைகளில் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும், 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், நான்காவது சனிக்கிழமையில் திருவோணம் நட்சத்திரம் மற்றும் விஜயதசமியும் சேர்ந்தே அமைந்திருப்பது இன்னும் சிறப்பானதாகும்.


புரட்டாசி வழிபாட்டு முறை :


புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு தளிகை இடும் வழக்கம் உள்ளவர்கள் அந்த முறையில் பெருமாளை வழிபடலாம். பொதுவாக புரட்டாசி மாதத்தில் முதல் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தான் தளிகை இட்டு வழிபடுவார்கள். அப்படி வழிபட முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான வாரங்களின் சனிக்கிழமைகளில் தளிகையிட்டு வழிபடலாம். அதோடு புரட்டாசி மாதத்தின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை முடிந்த பொழுதுதெல்லாம் அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், சக்கரத்தாழ்வார் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறது மிகவும் சிறப்பானதாகும்.


புரட்டாசி புதன்கிழமை சிறப்புகள் :


புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமின்றி புதன்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்துவது மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி மாதம் என்பது புதனின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாதமாகும். ஜோதிட சாஸ்திரப்படி, ஞானகாரகன் என போற்றப்படுபவர் புதன் பகவான். குழந்தைகளின் படிப்பு, அறிவு, செல்வம், திறமைகள் ஆகியவற்றை வழங்கக் கூடியவர் புதன் பகவான் தான். புதன் பகவானுக்குரிய அதிதேவதையான பெருமாளக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையில் புதன் பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். புதன் பகவானின் அருளையும் நமக்கு கொடுக்கும்.


புரட்டாசி முதல் நாள் வழிபாட்டு முறை :


புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வைத்து, பெருமாளுக்குரிய நாமங்கள், மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். மந்திரங்கள் ஏதும் தெரியவில்லை என்கிறவர்கள், "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்ற அஷ்டாட்ஷர மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். பெருமாளுக்கு துளசி தீர்த்தம், பால், கற்கண்டு, பானகம் ஆகியவை படைத்து எளிமையாக வழிபடலாம். நேரம் இருக்கிறது என்பவர்கள் சர்க்கரை பொங்கல், பாயசம், வடை போன்ற பலவிதமான நைவேத்தியம் செய்து படைத்து வழிபடலாம். காலையில் வழிபட முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். காலையில் துளசி மாலை சாற்றி வழிபட்டவர்கள், மாலையில் ஏதாவது மலர் படைத்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால் பெருமாளின் அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.