கறுப்புக் கொடி காட்டிய தமிழரசு இன்று அவர்களுக்குச் செங்கம்பளம் விரிக்கிறது!

 


சிங்களத் தலைவர்களுக்கு அன்று கறுப்புக் கொடி காட்டிய தமிழரசு இன்று அவர்களுக்குச் செங்கம்பளம் விரிக்கிறது.


1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பையும் இன்று நடைமுறையில் இருக்கின்ற 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை எதிர்த்து குடியரசு தினத்தை தமிழர்களின் துக்கதினமாக தமிழரசு கட்சி அனுஷ்டித்தது. சிங்களத் தலைவர்கள் தமிழ் மண்ணுக்கு வருகின்ற போது கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்ததோடு நின்றுவிடாமல் தமிழர் நிலத்தில் கறுப்பு கொடி கட்டி , யாப்பின் பிரதிகளை எரித்து, சுவர்களில் கரித்துண்டால் எதிர்ப்புச் சுலோகங்களை எழுதியதனால் சிறை சென்ற செம்மல் எனப்படும் மாவை சேனாதிராஜா இன்று இனவாத சிங்கள தலைவர்களுக்கு செங்கம்பளம் விரித்து தமது வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று கொண்டாடி உபசரிக்கும் கேவலமான அரசியல் தமிழரசு கட்சியின் இருண்ட கறைபடிந்த அத்தியாயமாகப் பதிவாகிறது.


 இத்தகைய அரசியல் வாதிகள் இனியும் தமிழ் மக்களுக்கு தேவைதானா?


யாழின் ஆடல் அழகியை அனுரா பண்டாரநாயக்காவுக்கு அல்பிரெட் துரையப்பாவுடன் இணைந்து தன் வீட்டில் வைத்து கூட்டிக் கொடுத்தான் என்பதற்காக மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள சிவதாஸ் என்பவரின் வீட்டுக்கு முதன் முதலில் நாட்டு வெடிகுண்டை இளைஞர்கள் விசி வெடிக்கச் செய்தனர்.


 இதன் பெயரால் இன்பம் என்ற மான ரோசம் உள்ள தமிழனை 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அன்று நள்ளிரவு 14-07-1979 அவரது நவாலியில் உள்ளள வீட்டில் இராணுவம் கைதுசெய்து அவருடன் கூடவே அவரது மைத்துணனையும் சேர்த்துப் படுகொலை செய்தது.


 பயங்கரவாதத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது யாழில் படுகொலை செய்யப்பட்ட முதலாவது தமிழ் வீரன் இந்த இன்பனாவார். அந்தக் கூட்டிக் கொடுப்பில் ஈடுபட்ட ஏற்பாடு செய்த ஒரு கிழநரி இப்போதும் தமிழரசில் வேசம் கலையாமல் சுத்தமான சூசப் பிள்ளையாய் வலம் வருவதோடு சிங்களத் தலைவர்களை கட்டியணைத்து தன் வீட்டிலும், அலுவலகத்திலும் வரவேற்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


1978ன் பின்னர் சிங்களத் தலைவர்கள் தமிழ் மண்ணுக்கு வருவதை தமிழர் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களும் பலமாக எதிர்த்தனர். கறுப்பு கொடி காட்டினர். இந்தப் பின்னணியில் தமிழர் தேசத்திற்கு சிங்களத் தலைவர்கள் வர அச்சப்பட்டனர். இதன் தொடர் விளைவே ஆயுதப் போராட்டம் மேலெழுந்து சிங்களத் தலைவர்கள் சிங்கள தேசத்திலும் இவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு தமிழர் தமது பலத்தை வெளிப்படுத்தினர்.


 ஜனாதிபதி செயலகத்தின் சுரங்க அறைக்குள் பாதுகாப்பு தேட வேண்டிய அளவிற்கு தமிழர் சேனையின் வானூர்திகளும், கடற்கலங்களும் சிங்களத்தின் தலைநகர் கொழும்பை தொடர் அச்சத்துக்குள் வைத்திருந்தன. அதுமட்டுமன்றி கடல் வழியாக சிங்களத்தின் பலம் வாய்ந்த காலி துறைமுகம் வரை தமிழர் கடற்படை சென்றுதாக்கி சிங்கள தேசத்தை அச்சத்துக்குள் மூழ்கடிக்க வைத்த ஒரு காலம் இருந்தது.


அந்தக் காலம் மாறிப்போய் அதே சிங்கள தலைவர்கள் தமிழர் தேசத்தில் முகாமிட்டு நின்று தமிழர்களை மேலும் அழித்தொழிக்கின்ற இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழான ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தேசமெங்கும் பிரச்சாரம் செய்ய அந்த சிங்கள தலைவர்களை செங்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள். இந்தக் கேவலமான அரசியல் இந்த வயோதிப காலத்தில் அவருக்குத் தேவைதானா? 


தமிழ்சுக் கட்சிக்குள் எதிரிகளால் கியூமாக சேர்க்கப்பட்ட எம் . ஏ. சுமந்திரன் ஆடுகின்ற தான்தோன்றித்தனமாக தமிழர்களை அழிக்கும் அரசியலுக்கு சி .வி .கே. சிவஞானம் போன்ற அல்பிரட் துரையப்பாவின் முன்நாள் வலக்கைகளும் உறுதுணையாக நிற்கிறார்கள். இவர்களின் பின்னே வால்பிடிக்கும் குட்டி பாம்புகளும் தமிழர் தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதை எந்த கவலையும் இன்றி முன்னெடுக்கிறார்கள்.


 இவர்களால் தமிழ் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுக்க முடியும்? இவர்களுக்கு உண்மையில் தமிழ் மக்கள் மீது ஏதேனும் பற்றுண்டா அல்லது இவர்களிடம் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்ற ஏதாவது உண்மையான எண்ணமோ கரிசனையோ உண்டா? இல்லவே இல்லை. தங்கள் வீடுகளை மாளிகை போல கட்டவும் மதில்களை கோட்டை சுவர்போல் கட்டவும், அரசாங்கக் கோட்டாக்களை பெறவும். தேர்தலைப் பயன்படுத்தி பின் கதவால் பணப்பெட்டகங்களை வாங்கவும் என தமது நலங்களுக்காக மட்டுமே இத்தகைய அரசியல் விபச்சாரிகளாக மாறிப் போயினர் என்பதே உண்மை.


 இவர்களிடமிருந்து தமிழரசுக் கட்சியை பாதுகாப்பது இன்னும் ஒரு கடினமான பணியாகிறது. இத்தகையவர்களை கட்சியிலிருந்து வேரறுக்காமல் தமிழரசு கட்சி தனது கறையை கழுவிட. முடியாது.


இலங்கை அரசியல் வரலாற்றில் 1833 ஆம் ஆண்டு கோல் புரூக் அரசியல் யாப்பு தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்து ஒற்றை ஆட்சிக்குள் கொண்டுவந்துவிட்டது அதுவரை காலமும் இராட்சிய காலத்திலிருந்து போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலம் முழுவதும் தமிழர் தேசம் தனித்துவமான ஆட்சி அதிகாரத்தின் கீழேயே ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர்தான் தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் ஒன்றாக இணைத்து ஒற்றை ஆட்சி கட்டமைப்பை உருவாக்கினர். ஆயினும் அப்போது தமிழ் தலைவர்கள் இது பற்றி பெரிய அளவில் கவனிக்கவில்லை. ஆனால் 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு வந்தபோது தமிழர் தரப்பு சற்று விழித்துக் கொண்டது. 


இதனைத் தொடர்ந்து டி. எஸ். செனநாயக்காவுடன் இணைந்து 1948 -ல் ஜி ஜி பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணக்க அரசியலும் தோல்வியில் முடிந்தது.


டட்லி செனநாயக்காவுடன் இணைந்து செல்வநாயகத்தால் பின்பற்றப்பட்ட தேசிய அரசாங்கமும் மாவட்ட சபைகள் என்ற மாயமானைக் கூட கண்ணிலும் காட்டாது மறைத்துவிடது.


 இறுதியாக ஜே. ஆர். ஜெயவர்த்தன 1980 ஆம் ஆண்டு அமிர்தலிங்கத்திற்குக் காட்டிய மாவட்ட அபிவிருத்தி சபைகூட இறுதியில் காணாமல் போய்விட்டது. ஜே. ஆரின் பின்னால் ஓடிக்களைத்த அமிர்தலிங்கம் மண்குப்பு வீழ்ந்தார் என்பதே நடைமுறை.


 தமிழ் இளைஞர்களின் எண்ணற்ற உயிர் தியாகங்களுக்கும் சிந்திய இரத்தத்திற்கும் கிடைத்த ஒரு குட்டி பரிசுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம். கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாது அது தெளிவாக மரணித்துவிட்டது.


  முள்ளிவாய்க்கால் பேராவலத்தின் பின் சம்பந்தன் -- சுமந்திரன்-- சேனாதி மேற்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் ஒரு குண்டுமணியை தானும் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. 


இந்த நிலையில் சஜித் பிரேமதாசாவுடன் இரகசிய ஒப்பந்தத்துக்கு சுமந்திரன் சென்றால் சஜித்திடமிருந்து தமிழ் மக்களுக்கு எதைத்தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்? தமிழ் மக்களுக்கு தீர்வு தருவோம் என்ற சிங்களத் தலைவர்கள் காட்டும் மாயமானுக்கு பின்னே ஓடும் முட்டாள்தனத்தை தமிழ் தலைமைகளினப்படுவோர் முதலில் நிறுத்த வேண்டும். 


எமக்கு என்ன வேண்டும் என்பதை நாம் உறுதியாக நின்று கொண்டு கேட்க வேண்டுமே தவிர ஓடுகாலிகளாக , ஒத்தோடிகளாக யாசகம் பெறுபவராக அடிபணிவு அரசியலை நடத்தி எந்த ஒரு அரசியல் உரிமைகளையும் பெற்றுக் கொள்ளமுடியாது. 


மாறாக இவர்கள் வேண்டுமானால் தங்கள் வயிறு வளர்ப்பதற்கும், தங்கள் சந்ததிக்கு சொத்து சேர்க்கவும் இவை பயன்படும். அதற்காகவேதான் இந்த ஓடுகாலி அரசியல்வாதிகள் சிங்களத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுவே யதார்த்தம். எல்லா சமூகங்களிலும் ஓடுகாலிகளும், ஒத்தோடிகளும், கோடாலிக் காம்புகளும் முளைப்பது தவிர்க்க முடியாது. ஆயினும் அவற்றை கடந்து முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் தமிழனத்தால் வாழமுடியும். 


முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் மூலம் தமிழ் இனத்தை தோற்கடித்த பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை அரசியல் ரீதியாக வெற்றி கொண்டு முற்றாக அழிக்கவல்ல வகையில் தமிழர்கள் மேலும் எழுச்சி பெறுவதை தடுக்கும் வகையில் உறுதியான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கி இலகுவாக முன்னெடுக்கிறது. தமிழ் தலைவர்களையும் புத்திகீவிகளையும் விலைக்கு வாங்கும் திட்டத்தை கனகச்சிதமாக முன்னெடுத்துவருகிறது. 


அந்த அடிப்படையில்தான் இப்போது தமிழரசு கட்சியின் சுமந்திரன் சாணக்கியன் சி வி கே சிவஞானம் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சிங்கள தேசத்தின் வலைக்குள் விழுந்து தமிழ் மக்கள் மத்தியில் கோடாலிக் காம்புகளாக செயல்படுகின்றனர்.


 ஆயினும் தமிழரசு கட்சிக்குள் இருக்கக்கூடிய தீவிர தமிழ்த் தேசியவாதிகள் இவர்களுக்கு இன்னொரு புறமாக நின்று தமிழ் பொது வேட்பாளரை தீவிரமாக ஆதரிக்கின்றனர் என்பதையும் மறந்து விடக்கூடாது. அது மட்டுமல்ல தமிழ் மக்களை ஒரு தேசிய திரட்சிக்கு உட்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் அரியனேந்திரன் கட்சி என்ற நிலைப்பாட்டை கடந்து தமிழ் மக்களின் நலனுக்காக தமிழ் தேசியத்தின் எழுச்சிக்காக பொது வேட்பாளராக தன்னை நிறுத்துவதற்கு முன்வந்துள்ளார். இத்தகைய தமிழ் தேசியவாதிகளை பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஈழத்தழனுடைய கடமையுமாகும்.


நேரடி இன அழிப்பில் ஈடுபடும் பௌத்த சிங்கள இனவாத எதிரிகளிடமிருந்து தமிழ் தேசியத்தை பாதுகாப்பதைவிட நண்பனின் வடிவில் தமிழ அரசியல் பரப்பில் உலாவரும் வேடதாரி தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தும் தமிழ் தேசியத்தைப் பாதுகாப்பதே இன்றுள்ள பிரதான கடமையாகும்.


முள்ளிவாய்க்காலில் தமிழரின் ராணுவ பலம் தோற்கடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் தோல்வி என்பது ஒரு பேரவலம்தான். அந்த பேரவலம் தமிழினம் கட்டமைப்புச் செய்திருந்த அரசியல், சமூக, பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் அனைத்தையுமே இழந்துவிட்டது. மஅங்கே தமிழர்கள் இனப்படுகொலை வாயிலாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்பதனை நிரூபிப்பதாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர்களாக நின்று ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.


யுத்தங்களில் தோற்கடிக்கப்படுவது வேறு. வெற்றிகொள்ளப்படுவது என்பது வேறு. தோற்கடிக்கப்பட்டவன் மீண்டும் எழுந்து நின்று போராடுவான். ஆனால் வெல்லப்பட்டவன் எதிரியுடன் கரைந்து போவான், இணைந்து போவான். ஆனால் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து வாழ, அல்லது சிங்கள தேசியத்துக்குள் கரைந்து போக தயார் இல்லை என்பதை தமிழர் தேசம் இன்று உணர்த்தி நிற்கிறது.


 முள்ளிவாய்க்காலுக்குபின் தமிழ் சமூகத்திடையே ஆயிரம் பிளவுகளும் முரண்பாடுகளும் கருத்தியலும் தோன்றியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் தமது பொது எதிரியான சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேரவோ, இணைந்து வாழவோ தமிழ் மக்கள் தயார் இல்லை என்பதனாலேயே சிவில் சமூகங்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பாக தம்மை தகமைத்து இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நிறுத்தவில்லை. மாறாக நாம் தனித்துவமாக நிற்கிறோம், நாம் சிங்கள தேசத்தின் தலைவரை தெரிவு செய்ய பங்களிக்க மாட்டோம் என்பதோடு தமிழ் மக்கள் தமக்குள்ளான பல்வகைப் பட்ட முரன்களுக்குள் ஒன்றுபட்டு திரட்சி பெறுவதற்கு தமிழ் தேசியத்தை மேல்கட்டுமானம் செய்வதற்கான ஒரு ஊடகமாக இந்தத் இந்தத் தேர்தலை பயன்படுத்துவதாகவே கருதுகிறார்கள்.


தமிழ் சிவில்சமூகம் முன்னெடுத்த பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவு மக்களை மீண்டும் நிமிர்ந்து நிற்க வைப்பதற்கான ஒரு முடிவு. அந்த முடிவை நடைமுறைப்படுத்த தமிழ் தேசியம் பேசுகின்ற ஏழு கட்சிகள் முன்வந்து கூட்டிணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியமை தமிழர் தேசத்தை திரட்சிக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம். இது தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இந்த மீள்கட்டுமானத்தில் வருபவர்கள் வரட்டும். வராதவர்கள் ஒதுங்கி இருக்கட்டும். ஆனால் தமிழ் தேசியம் என்பது தன் போக்கில் தன்னை நிலை நிறுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் மிக உறுதியாக செய்யும் என்பது இப்போது வெளிப்பட தொடங்கி விட்டது.


இதனால்தான் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டவுடன் சிங்கள தேசத்தின் ஏற்பட்ட அதிர்வலைகளை கொஞ்சம் பாருங்கள். வழக்கத்துக்கு மாறாக சிங்கள தேசத்தின் ஜனாதிபதி போட்டியாளர்கள் தமிழர் நிலத்தில் முகமிட்டுள்ளார்கள். தமிழர் நிலத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர்களுடைய பலவர்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தமிழின அழிப்பு ஓதும் மகா சங்கத்திடம் சென்று ஆசிபெற்று, பிரித்தோதி நூல்கட்டி கொண்டுதான் தமிழர் தேசத்துக்கு வந்திருக்கிறார்கள் . 


இதிலும் விந்தை என்னவெனில் சிகப்பு கொடி ஏந்திய சோசலிச புரட்சியாளர்கள் இப்போது பௌத்த மகா சங்கத்திடம் பிரித்தோதி நூல்கட்டுக் கொண்டு தமிழர் தேசத்துக்கு வந்திருக்கிறார்கள். 


அது மட்டுமல்ல இந்த பாட்டாளி வர்க்க சிகப்புக் கொடி புரட்சியாளர்கள் இப்போது சர்வதேச நாணய நீதியத்தின் நிபந்தனைகளுக்கு தாம் உட்பட தயார் என்கிறார்கள். முதலாளித்துவத்தை ஏற்கிறார்கள். தாராளவாதத்தை வரவேற்கிறார்கள். நல்ல மாற்றம்தான் ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று மட்டும் கேட்டால் ஒரு நாடு, ஒரு மக்கள், ஒற்றை ஆட்சி, அரசியல் யாப்புக்குள் தீர்வு என்கிறார்கள். இத்தகையவர்களை பார்த்து சுமந்திரன் சொல்கிறார் அவர்கள் இனவாதி இல்லையாம்! என்ன வகையிலான அறிவுபூர்வமான கூற்று இது. ""நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன"" என்ற பழமொழிதான் பொருந்தி வருகிறது. 


இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்புக்குள் தீர்வு காண முடியாது என்று தானே திம்புவில் ஆரம்பித்து டோக்கியோ , ஒஸ்லோ வரை சென்று பேசியாச்சு . இனி இந்த ஓடுகாலி அரசியல் தலைவர்கள் தங்கள் வீட்டுக்குள் அழைத்து கட்டித்தழுவி வாழை இலையில் சோறு போட்டு உபசரித்து பேசி தீர்வை கண்டுவிடப் போகிறார்களா? அல்லது தீர்வை பெற்றுத்தர போகிறார்களா? வேண்டுமானால் இவர்கள் சிங்களத்துடன் திருமண பந்தத்தில் இணைந்து சிங்களத்துடன் கரைந்து போகலாம். கரைய முயற்சிக்கலாம், கரைந்து போக விருப்பப்படலாம் அதற்காக தமிழ் மக்களை படுகுழியில் தள்ளவும் கரைத்து விடவும் அனுமதிக்க முடியாது.


தமிழ்த் தேசியம் நொந்து நூலாய் போய் தேசிய கட்டமைப்பின்றியும் எதிர்காலத்திற்கான திட்டமும் , பாதையும், பயணமும் இன்றி அழிவின் விளிம்பில் கதியற்றுத் தவித்தது. எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்குவது போல் தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் பலரும் தமிழ் தேசியத்தின் பெயரால் தத்தமக்கான இலாபங்களைத் தேடும் பண, பதவி வேட்டையிலும் ஈடுபட்ட நிலையில்தான் ஒத்தோடிய அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை என்ற தீர்மானத்துடன்தான் சிவில் சமூகம் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை மீள்கட்டுமானம் செய்வதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது. எனவே முன் வைத்த காலை பின்னெடுக்க முடியாது.

""எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு"". என்ற திருக்குறளுக்கு அமைய தமிழ் சிவில்சமூகம் தமிழ் மண்ணில் தமிழ்த் தேசியக் கட்டுமானங்களை உறுதியாகவும் இறுக்கமாகவும் முன்னெடுத்துச் செல்லும். அந்தப் பணியின் முதல் வேலைத் திட்டம்தான் தமிழ் பொது வேட்பாளர். பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது தேசியக் கடமைகளை தொடங்கட்டும். இது தமிழர் தேசத்தின் புதிய வரலாற்றுப் பயணத்தை தொடங்கி வைக்கட்டும். இந்தப் பயணத்தில் வருபவர்களை கூட்டு சேர்ந்து கொள்வோம். அவர்களை அரவணைப்போம். எதிர்ப்பவர்களை எதிரியின் கூடைக்குள் தள்ளுவோம். வேடதாரிகளை தமிழ் மண்ணில் இருந்து துரத்தி அடிப்போம் என்ற முழக்கத்துடன் சங்கே முழங்கு.


""உரை சார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்""

---------------------------------------

நன்றி.


தி. திபாகரன், M.A.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.