வெற்றிகாட்டு பிள்ளையார் இசைப்பாடல்கள் தொகுப்பின் ஆரம்ப நிகழ்வு!📸


தென் கரணவாய் அருள்மிகு வெற்றி காட்டு பிள்ளையாருக்கு முதன் முதலாக உருவாகவிருக்கும் ஏழு பாடல்கள் அடங்கிய புதிய இசை இறுவெட்டின் ஆரம்ப நிகழ்வும் விஷேட பூஜையும் கடந்த பதினாறாம் திகதி சிறப்புற ஆலயத்தினில் பரிபாலன சபை மற்றும் விழா உபயகாரர்கள் ஆகியோரது பிரசன்னத்தோடு மிக சிறப்பாக இடம்பெற்றது .


வெற்றி காட்டு பிள்ளையார் ஆலயத்தோடும் அந்த சூழலோடும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருக்கின்றேன் .என்னுடைய நண்பர்கள் பலருடன் அந்த சூழலுக்கு நான் சென்றிருக்கின்றேன் . ஆனால் அந்த பிள்ளையாருக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது அதிசயம் என்பேன் .



கரணவாய் மகா வித்யாலத்தில் அப்பா பல வருடங்கள் விஞ்ஞான ஆசானாக இருந்து நற்பெயருடன் பல மாணவர்களை உருவாக்கியமை ஏலவே எல்லோரும் அறிந்த ஒன்றுதான் . ஆயினும் அன்றைய நாளில் பரிபாலனசபை சார்ந்த பலரும் தம்பி நீங்கள் வெற்றிவேல் மாஸ்ட்டர் மகன் என்பது இன்று தான் தெரியும் என்று அப்பாவின் பெருமைகள் சுபாவங்களை அடுக்கி எங்களது பாடசாலையிலிருந்து தான் அப்பா அதிபர் நியமனம் பெற்று புதிய பாடசாலை சென்றார் என்ற கருத்தையும் சொல்லி என்னை பல கோணங்களில் உருக செய்தார்கள் .திகைத்து போனேன் .தமது மகிழ்ச்சியையும் 

கூறிக்கொண்டார்கள் .



வெற்றி காட்டு பிள்ளையாருக்கு வெற்றி வரிகளும் வெற்றி இசையும் சேரவிருப்பது இறை சித்தமும் கூடவே அப்பாவின் ஆசீர்வாதமும் தானே வேறென்ன .


இந்த அருமையான வாய்ப்பை எமக்கு ஆசிரியர் பாஸ்கர் அண்ணா மூலம் பெற்றுத்தந்து இணைத்து கொண்ட ஈழத்து இலக்கிய பரப்பின் மிக முக்கியமான படைப்பாளியும் நண்பருமான இ .சு முரளீதரன் ஆசானுக்கும் அன்றாடம் பேசி பேசி எல்லாவற்றையும் தன் விழா உபயகாரர்கள் மூலமாக நிறைவேற்றி ஆரம்பித்து வைத்த பேரன்பின் பாஸ்கர் அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் அன்பும் .



பலவாண்டுகால கனவாக இந்த முயற்சியை எடுத்த முரளி சேரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இது அமைகிறது. 


ஏழு பாடல்களை கொண்ட இவ் இசை இறுவெட்டில் நான்கு பாடல்களை முரளி சேரும் மூன்று பாடல்களை நானும் எழுதியிருக்கின்றோம் .


தம்பி வெற்றி சிந்துஜனின் இசையில் உருவாகவிருக்கும் இந்த இசை இறுவெட்டில் தென்னிந்திய பாடகர்களும் நம்நாட்டு பாடகர்களும் இணைந்து பாடவிருக்கின்றனர் .


ஆலயங்களுள் செல்லமுடியாத நிலையில் நானிருந்த போதிலும் அன்பின் நிமித்தம் அழைத்து வெளியில் வைத்து எல்லாவற்றிற்குமான ஆயத்தங்களை துவக்கி வைத்த ஆலய நிர்வாகத்துக்கும் பாஸ்கர் அண்ணாவுக்கும் நன்றிகள் கோடி .


வெற்றி காட்டு பிள்ளையாருக்கு பாவமுதம் தயாராக துவங்கியிருக்கிறது . 


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


வெற்றி 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.