சுனிதா வில்லியம்ஸின் வருகை எப்போது?பூமிக்கு திரும்பும் விண்கலம்!

 


நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு சவாலான சோதனைப் பணியின் முடிவைக் குறிக்கும் வகையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் ஆளில்லாமல் பூமிக்குத் திரும்புவதற்கான இறுதித் தயாரிப்புகளை முடித்துள்ளனர்.


இருவரும் வியாழன் (06) பிற்பகுதியில் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அடைப்பை மூடினர்.


விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் (IST) அல்லது வெள்ளிக்கிழமை மாலை 6:04 க்கு (EDT) புறப்பட தயாராகவுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஜூன் 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.


எனினும், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தாமதிக்கச் செய்தது.


இதன்படி ஜூன் 26 ஆம் திகதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.


அதற்கு முன்னதாக அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான வேலைத்திட்டங்களை நாசாவும் போயிங் நிறுவனமும் நிறைவு செய்திருந்தன.


இந்த நிலையில் வியாழன் (06), இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கும் என கூறப்படுகின்றது.


இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் அல்லது வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரம் இந்தப் பயணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைய 6 மணி நேரமாகும் என தெரிவிக்கப்படுகிறது.


ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் SpaceX Crew Dragon விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.