கிஷ்கிந்தா காண்டம்!!
தேவை உண்மையா? கரிசனமா?
~
அப்பா எனும் சொல் அபூர்வமானது. கம்பராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 'அப்பா' என்ற சொல் வருகிறது. ஆனால் ராமனோ, இந்திரஜித்தோ தம் தந்தையை அழைப்பதுபோல் 'அப்பா' பயன்படுத்தப்படவில்லை.
மாறாக ,'இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!' என ராமனை வாலி 'அப்பா' என்றழைக்கிறான்.
அப்பா என்பது உயர்ந்தோரை அழைக்கும் சொல். 'அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா`
என்கிறது தேவாரம்.
கடவுளை அண்ணா என்றோ, மாமா என்றோ, தாத்தா என்றோ, யாரும் அழைப்பதில்லை. திருப்புகழ், திருவாசகம், திருமந்திரம், என பக்தி இலக்கியங்கள் அனைத்தும் இறையை 'அப்பா' என்றே அழைக்கின்றன.
அப்பா கடவுள் போன்றவர்.
அல்லது, தெய்வம் அப்பா போன்றது.
நான் ஒரு நாள் தெய்வத்தின் முன் நின்று 'சாமி எங்கள் அப்பா செத்துப்போக வேண்டும்!' என வேண்டினேன். நான் மட்டுமில்லை. நிறைய மகன்களுக்கு அப்பாவை பிடிப்பதில்லை. காரணம், அப்பாவின் கண்டிப்பு.
காஃப்காவுக்கு அவர் அப்பாவைப் பிடிக்காது. தஸ்தாயேவ்ஸ்கிக்கு அவர் தந்தையைப் பிடிக்காது.
தந்தையின் கண்டிப்பான வளர்ப்பு
ஃபிரான்ஸ் காஃப்காவின்
உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது தந்தையின் கண்டிப்பு ஒழுக்கத்துக்கான வலியுறுத்தல், காஃப்காவை அந்நியமான உணர்வுக்கு நகர்த்தியது. தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளுடனும், தோல்வியின் ஆழமான பயத்துடனும்,
போராடினார் காஃப்கா.
அது அவரது எழுத்தில் பிரதிபலித்தது.
கரமசோவ் சகோதரர் நாவலில் வருகிற தந்தை, தஸ்தாயேவ்ஸ்கியின் அப்பா சாயலுடையவர்.
இன்று கிஷ்கிந்தா காண்டம் (மலையாளம்) பார்த்தேன். ஒரு வசதிக்காக இதை உளவியல் திரில்லர் எனக் கூறலாம். மற்றபடி இது ஒரு ஃபீல் குட் மூவி. இது ஆஸிஃப் அலிக்கு சிறப்பான ஆண்டு. தலவன், அடியோஸ் அமிகோ, லெவல் கிராஸ், படங்களைத் தொடர்ந்து இப்போது கிஷ்கிந்தா காண்டம். ஆனாலும் இப்படத்தில் ஸ்கோர் செய்வதென்னவோ,
இவரது அப்பாவாக நடிக்கும் விஜயராகவன்.
வயநாடு நெடுஞ்சலில் வசிக்கிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அப்பு பிள்ளை (விஜயராகவன்). அவரது மகன் அஜயன் (ஆஸிஃப் அலி) வனத்துறை அதிகாரி. அஜயன் மனைவி இறந்துவிடுகிறாள். இவர்களது
மகன் காணமல் போய்விடுகிறான்.
அஜயன் அபர்ணாவை (அபர்ணா பாலமுரளி) இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இத்தகைய சூழலில் தேர்தல் நடக்கிறது. காவல்துறை அப்புப் பிள்ளை உரிமம் பெற்று வைத்திருக்கும் கைத்துப்பாக்கியை ஒப்படைக்கக் கோருகிறது.
துப்பாக்கி தொலைந்துவிட்டதாகக் கூறுகிறார் அப்புப் பிள்ளை. காணாமல்போன துப்பாக்கி குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அப்பு பிள்ளைக்கு ஞாபகமறதி வேறு.
தனது ஞாபகமறதியின் காரணமாக எப்போதும் மகனிடம் மருமகளிடம் சிடுசிடுவென நடந்துகொள்கிறார் அப்புபிள்ளை.
தன் வாழ்வில்,யாரும் குறுக்கிடாதவாறு தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார் .
காவல்துறை மற்றும் தெரிந்தவர்களால் அவரது நடவடிக்கைகள் விசித்திரமாகப் பார்க்கப்படுகின்றன. அவரது மர்மமான நடவடிக்கைகளால் அபர்ணாவுக்கும் சந்தேகம். மாமனாரை துப்புத் துலக்குகிறாள். சிறுவன் காணமல் போனதற்கும் அப்புப் பிள்ளைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?
உண்மையை அறிய முயல்கிறாள்.
என்னதான் எரிந்து விழுந்தாலும், தந்தையை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல், 'என்ன இருந்தாலும் அவர் என் அப்பா அல்லவா?'
என உருகுகிறான் அஜயன்.
அப்பு பிள்ளை குறித்த உண்மை என்ன? காவல்துறை, ஊர், அபர்ணா அறிந்து கொண்டார்களா? ஒரு கட்டத்தில் அஜயனிடம்,' என்னதான் இங்கு நடக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்?' கேட்கிறாள் அபர்ணா.
தந்தையைப் பற்றிய உண்மையைச் சொல்கிறான் அஜயன். தன் தந்தை ஏன் தன்னுடைய உண்மையிலிருந்து
விலக விரும்புகிறார். அவரைச் சுற்றிய உண்மையை, ஞாபகங்களை அவர்
ஏன் எரிக்கிறார்? அஜயன் சொல்கிறான்.
அபர்ணா அழுகிறாள்.
அவன் கூறக் கூற என்னுள் தேக்கி வைத்திருந்த மாபெரும் உணர்வு அணை உடைந்து பெருகிறது.
பார்ப்பது படமென்று தோன்றாமல் அழுதபடி இருந்தேன்.
என்னைப் பற்றிய ரகசியங்கள் என் அப்பாவிடம் இருந்தன. அவை அத்தனை கசப்பானவை. அதை வேறு யாரும் ருசிக்கக் கூடாதென, தானே விழுங்கியவர் எந்தை.
எந்த அப்பா சாக வேண்டினேனோ,
அந்த அப்பாவை மருத்தவமனையில் சேர்த்துவிட்டு, கடவுள் நம்பிக்கையே இல்லாத நான், 'கடவுளே என் தந்தையை இன்னும் சிலகாலம் என்னோடு வாழவிட மாட்டாயா?' கெஞ்சினேன்.
என்னைப்போல ஒரு மகனின் கதை இது. எந்தையைப்போல ஒரு தியாகத் தந்தையின் கதையிது. இவையெல்லாம் இப்படத்தின் இயக்குனர்
திஞ்சித் அய்யாதனுக்கு எப்படி தெரியும்?
இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை. இந்த மா நிலத்தில் எல்லா தந்தைகளும் அப்பு பிள்ளைகள்தாம். எல்லா பிள்ளைகளும் அஜயன்கள்தாம்.
நமது மர்மங்களை ஊரரியாமல் காத்து, தம் மனதுக்குள் பூட்டி, அதன் சாவியைத் தொலைத்தார்களே? நம் தந்தைகள். அந்த உண்மையா நமக்குத் தேவை?
நம் மகனை பாவம் சூழக்கூடாது.
நம் மகனை குற்ற உணர்வு அண்டக்கூடாது. என தம் மனசுக்குள் மகன் குறித்த உண்மையை குழிதோண்டிப் புதைத்தார்களே?
அந்த உண்மையா நமக்குத் தேவை.
நமக்குத் தேவை, தந்தை நம் மீது கொண்ட கரிசனம் அல்லவா?
திஞ்சித் அய்யாதன் எங்கிருக்கிறார்? அவர் கருப்பா? சிவப்பா? ஏதும் தெரியாது.
அவர் கையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் அழுதேன்.
அது எந்தையுடைய அன்பின்
கரம்போலவே இருந்தது.
எழுதியவர் - கரிகாலன்.
கருத்துகள் இல்லை