ஒரு பழங்குடி அரசியின் பட்டாபிசேகம்!!
நியூசிலாந்து அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான முடியரசு. ஆனால் இந்நாட்டில் இரண்டு முடிகள் உண்டு. இதற்கேற்ப இரண்டு அரசர்/அரசி இப்போது உண்டு. ஒரு அரசன் ஆங்கில மூன்றாம் சாள்ஸ். மற்றவர் அந்நாட்டு பழங்குடி மௌறி இனக்குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசி.
நியூசிலாந்தின் "சட்டப்படியான" அரசன் ஆங்கில நாட்டு மன்னன் மூன்றாம் சாள்ஸ்தான்(தமிழக தமிழில் சார்லஸ்). ஆனால் அந்நாட்டின் 17 வீதமான மௌறி பழங்குடிகள் 1858ம் ஆண்டிலிருந்தே தம்முடை முடியை தேர்ந்தெடுத்து கொண்டாடி, அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் 69 வயதான மௌறி அரசன் இறந்தபின் கடந்த வியாழக்கிழமை அரசனின் 27 வயதான மகளான Nga Wai Honoவை 12 ஆண் மூதோர் கொண்ட பேரவை அரசியாகத் தேர்ந்தெடுத்தது. இறந்த அரசனின் மூத்த இரண்டு ஆண் மகன்களைத் தவிர்த்து இளைய மகளைத் தேர்ந்தெடுத்தது மூதோர் பேரவை. முடியை ஒரு குடும்பத்தில் தான் தேர்ந்தெடுக்கவேண்டுமென்ற நியதி கூட மூதவையின் சட்டத்திலில்லை.
வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டாவது மௌறி முடி இந்த இளம் ராணி. இரண்டாவது ராணியும் கூட. முதல் ராணி 2006ல் இறந்த இவரின் பாட்டி.
வியாழக்கிழமை புனித தைலங்கள் தடவப்பட்டு பட்டாபிசேகம் செய்யப்பட்டார் புதிய ராணி. முதல் மௌறி அரசன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முடிசூடும்போது பயன்படுத்தப்பட்ட அதே பழைய வேதாகமமப் பனுவலே இப்பட்டாபிசேகத்திலும் பயன்படுத்தப்பட்டது.
இப்புதிய ராணியின் தந்தை அரசனான பத்தாவது ஆண்டு விழாவில் இவளுக்கும் இவள் தாய்க்கும் முகத்தில் கௌரவப் பச்சை குத்தப்பட்டது. மௌறி கலாச்சாரத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்ற புதிய ராணி ஹக்கா - பழங்குடி போர் நடன ஆசானுமாவார்.
அருண் அம்பலவாணர்
கருத்துகள் இல்லை