JVP நாட்டை அழிக்கப் போகிறது என சிலர் பதறுகிறார்கள் அழிப்பதற்கு என்ன இருக்கிறது?
சுதந்திரத்தின் பின்னான 77 வருட கால இலங்கை அரசியலில் முதன் முறையாக சிங்கள மக்கள் மாற்றி யோசித்திருக்கிறார்கள். மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்னரான இலங்கைப் பயணங்களின் போது, முச்சக்கர வண்டிச்சாரதிகள், ஊபர், பிக்மி சாரதிகளிடம் உரையாடுகின்ற போதெல்லாம் எது எப்படியானாலும் மாற்றம் ஒன்று அவசியம் என 90 வீதமானவர்கள் கூறினார்கள்.
எனக்கு நெருக்கமான பலரிடம் இம்முறை அனுரகுமாரதிஸ்ஸநாயக்கா வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு 75 வீதத்தை கடந்து விட்டதாக கூறினேன். அதுமட்டுமல்லாமல் எனது விருப்பமும் அதுவே எனக் கூறினேன்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து எனது கருத்துகளை முன்னரே பதிவு செய்வதனை தவித்துக்கொண்டேன். காரணம் சரி, பிழை, விமர்சனங்களுக்கு அப்பால் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் பொதுக்கட்டமைப்பு பிரேரித்திருந்தது.
இவ்வாறான பரீட்சார்த்த முயற்சியை குழப்புவதற்கு என் கருத்துகளும் எனது விருப்பங்களும் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அமைதியானேன்.
ஜே.வீ.பி என்ற பழைமைவாய்ந்த கட்சியின் அரசியல் முகமாக மாறியிருக்கும் தேசிய மக்கள் சக்த்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் வெற்றி, மாற்றம் ஒன்றிற்கான வெற்றியாகவும், அடிநிலை மக்களின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
அனுரவின் இந்த வெற்றியின் பின்னால் அவர் சார்ந்த அரசியல் அமைப்பின் அளப்பெரிய தியாகங்களும், நம்பிக்கையும், உறுதியான கொள்கைப்பற்றும், நீண்ட காத்திருப்புகளும், அடிப்படை அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இந்த வெற்றி இலகுவாக பெற்பட்ட ஒன்றல்ல.
அதிகாரத்தை பெறுவதற்காக தற்போதைய ஜே.வீ.பியோ, தேசிய மக்கள் சக்த்தியோ குறுக்கு வழிகளை நாடியிருக்கவில்லை. சுதந்திரத்தின் பின்னான தேர்தல்களில் முதன்முறையாக, இனவாதம் தலைவிரித்தாடாத தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்திருந்தது.
தேசிய மக்கள் சக்த்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான அனுரகுமார திஸ்ஸநாயக்கா, சஜித் பிரேமதாசா ஆகியோர் இனவாதத்தை முன்வைத்து மக்களை இனத்துவேச உணர்வுகளுக்குள் சிக்க வைத்து வாக்கு கேட்கவில்லை.
பதிலாக அனைவரும் இலஙகையர்கள் என்ற கோசத்துடன் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்பதற்கான தமது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தி இருந்தனர்.
2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை இலங்கையில் தோற்றுவித்திருக்கிறது.
அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சியாக உருவாகியிருக்கும் தேசிய மக்கள் சக்த்தியும், எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்த்தியும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதை செய்வதற்கு போட்டி போடுகிறார்கள். உத்தரவாதங்களை வழங்குகிறார்கள்.
இலங்கையின் இனிவரும் காலம் அனுரவுக்கு முன்னான அரசியல், அனுரவுக்கு பின்னரான அரசியல் என பார்க்கப்படும் ஒரு நிலை உருவாகும் என நம்புகிறேன்.
காரணம் 2024 செப்படம்பர் 22 க்கு முன்னரான தேர்தல்களில் தமது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கான கருவிகளாக இனவாதம், மதவாம், ரவுடியிஸம், பாதாள உலகம், லஞ்ச ஊழல் என்ற பஞ்சமாபாதகங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் இவை எதனையுமே கையிலெடுக்காத தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கும் 5,634,915 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளார்கள். அவ்வாறே இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்த்திக்கும் சஜித் பிரேமதாஸவிற்கும் 4,363,035 வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டின் பிரதான கட்சிகளாக உருவெடுத்திருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் நல்லவற்றை செய்வதற்கான போட்டியை ஆரம்பித்திருப்பது இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் அத்தியாயத்தை, அரசியல் செல்நெறியை உருவாக்கியிருப்பதாக உணர்கிறேன்.
இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது நாட்டு மக்களினதும் இந்த அரசியல் கட்சிகளதும் பிரதான கடமையாக அமைய வேண்டும்.
இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கும், தேசிய இனப்பிரச்சனைக்கும் தீர்வுகாண்பதற்கு இதயசுத்தியுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்த இரண்டு பிரதான கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும்.
மறுபுறம் அதிகார துஸ்பிரயோகம், லஞ்சம், ஊழல், வாரிசுகளின் அரசியல், பாதள உலக ராட்சியம், போதைபொருள் கடத்தல், விநியோகம் இவற்றுடன் அரசியல் புள்ளிகளின் தொடர்பு என சின்னாபின்னமாகிப் போயுள்ள இலங்கைக்கு இன்று அரசியல் ஒழுக்கத்தை பேணும் அரசியல் தலைமை அவசியமாகிறது.
அந்த தலைமை புனிதாரக, முற்றும் துறந்தவராக 100 வீத அரசியல் ஒழுக்கத்தை உடையவராக இல்லாவிடினும் ஒப்பீட்டு ரீதியிலாயினும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றுள்ள அரசியல் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் அனுரகுமார திஸ்ஸநாயக்கா முதல் நிலையில் உள்ளார் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
“ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல்” என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
“தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன். அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன்” எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டு இருப்பது நல்ல மனிதர்கள் அனுரவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரு உதாரணம்.
ஜே.வீ.பீ மட்டும் அல்ல தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட விடுதலை இயக்கங்களும் கடந்த காலங்களில் மிகப்பெரிய மானிடத் தவறுகளை இழைத்திருக்கின்றன. ஆனால் அந்த விடுதலை இயக்கங்களோ, அதன் தலைமைகளோ இதுவரை தம்மை சுயவிமர்சனம் செய்ததில்லை. தமிழ் மக்களுக்கான சரியான தலைமையாக தாம் உருவாக வேண்டும் என முயற்சிக்கவில்லை.
ஆனால் அனுரகுமார திஸநாயக்கா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின் ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக ஜே.வீ.பீ என்ற தமது கறைபடிந்த அரசியலை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திய பிரதான விடயமாக தேசிய மக்கள் சக்த்தியின் உருவாக்கத்தை பார்கிறேன்.
ஆக பழைய பல்லவிகளை பாடி மாற்றத்தின் ஆரம்பத்தை நிராகரிக்காமல், சிங்கள மக்கள் சிந்தித்தது போல் தமிழ் பேசும் மக்களும் ஏன் சிந்திக்க கூடாது? 77 வருட காலமாக மாறி மாறி அரசியல் பித்தலாட்டங்களுக்கு துணை போனதை, நாம் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி புதியவர்களுக்கான திடமான ஒரு சந்தர்ப்பதை வழங் வேண்டும்.
ஜே.வீ.பீ நாட்டை அழிக்கப் போகிறது என சிலர் பதறுகிறார்கள். அழிப்பதற்கு என்ன இருக்கிறது? நாடு இருக்கிறதா? ஒரு அரசியல் கட்டமப்பு இருக்கிறதா? அரசியல் சாசணத்தை பின்பற்றும் அரசியல் கலாசாரம் இருக்கிறதா? இல்லையே.
ஆயின் வங்குரோத்தான நாட்டை, அரசியல் கலாசாரத்தை, அரசியல் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தலைமை அவசியம். ஒப்பீட்டளவில் அது அனுரவிடம் தேசிய மக்கள் சக்த்தியிடம் இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
#Tamilarul.net #Tamil #News #TamilNews #TamilDailyNews #Website #TamilnaduNews #News_Paper #Tamil_Nadu_Newspaper #Online #BreakingNews2024 #NewsHeadlines #LatestUpdates #tamilcinema #indian #WorldNews #TamilFilm #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu ##Batticaloa #kandy #SriLanka #colombo
கருத்துகள் இல்லை