தயக்கத்தைப் போக்கி உள்ளே அழைத்தார் டாட்டா.அஞ்சலிகள்!



இந்தியா போன்ற தேசத்தில் எளிமை என்பது தவறாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. காந்தியின் எளியத் தோற்றம், அம்பேத்கரின் ஆடம்பரத் தோற்றம் இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்திலிருந்து இதை நாம் உணரலாம்.


அரைநிர்வாணப் பக்கிரியால் சர்வசாதாரணமாக பிர்லா மாளிகையில் நுழைய முடிந்தது. அம்பேத்கருக்கு அது சாத்தியமானதா?


கிராமத்திலிருந்து வெளியேறியபோது நான் முதலில் உதற விரும்பியது எளிமையைதான். எங்கள் மூதாதைகள் அளவுக்கதிமாக எளிமையாக வாழ்ந்துவிட்டதுபோல் தோன்றியது. 


மூத்த மகள் சிந்து அவரது 10 வகுப்பு பொதுத்தேர்வை எழுத சொந்தக் காரில் செல்ல வேண்டுமென விரும்பினேன்.


ஏழ்மையை வெறுக்க அல்ல,  

ஏழ்மையை ரசிக்க இந்தியா ஏழைகளுக்கு பழக்கியிருக்கிறது. 


என் தந்தையைப்போல் நான் 

என் பிள்ளைகளுக்கு ஏழ்மையை ரசிக்கப் பழக்கவில்லை. 


இருபது ஆண்டுகட்கு முன்பு, 

ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரயரால் 

கார் வாங்க முடியுமா? யோசித்தேன். 

ஏன் முடியாது? தோளில் கைபோட்டு  இண்டிகா விஸ்டா சாவியை

என்னிடம் கொடுத்தார் ரத்தன் டாடா.


விசாலமான இட வசதி. குவாட்ராஜெட் என்ஜின். கார் வாங்கிய அன்று என் தாழ்வுமனப்பான்மையில் 50% குறைந்துபோனது. 


உலகமயம் இந்திய சந்தையை ஆட்டிப்படைத்தபோது நடுத்தரவாசிகளின் தயக்கத்தைப் போக்கி உள்ளே அழைத்தார் டாட்டா.


எனது உடைத் தேர்வை budget friendly ஆக்கியதிலும் டாடா முக்கியமானவர். மாலுக்குப் போகும்போதெல்லாம் என் முதல் தேர்வு westside தான். ஜாக் & ஜோன்ஸ், லீவி, அமெரிக்கன் ஈகிள், சிலியோ, போன்ற பிராண்டுகளின் பிரீமியம் குவாலிட்டியை, வெஸ்ட்சைடில் உள்ள zudio, ascot  பிராண்டுகளில் உணரலாம். ஆனால் முந்தைய பிராண்டுகளை ஒப்பிட இவை விலைக் குறைவானவை. 


'வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்க வேண்டும். ஆனால் வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றாக நடக்க வேண்டும்' 

எனச் சிந்தித்தார் டாடா. 


அம்பானிகள், அதானிகள்  வேகமாக நடக்க விரும்பியபோது, ரத்தன் டாடா நிதானமாக நடந்தார். 

மக்களோடு சேர்ந்து  நடந்தார். 


ஐரோப்பியர்களைப்போல் நாமும் வாழ முடியும் என நம்பிக்கையை அவர் இந்தியர்களுக்கு அளித்தார். வாழ்வது மட்டுமல்ல. எப்படி சாவது எனவும் 

அவர் கற்றுத்தருகிறார். 


'என்னால் எனக்காக எதுவும் செய்ய முடியாத நாளில், என் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவேன்!' என்றார். 


சொன்னபடி நேற்று நடந்து கொண்டார்.

-Karikalan R-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.