மருத்துவர் இராமநாதன் அருச்சுனா!
யாழ் மாவட்டத்தில் மருத்துவத்துறையில் நிலவிய ஊழல் பற்றி உலகுக்கு எடுத்துக் கூறியதன் மூலம் கவனத்தைப் பெற்றவர் மருத்துவர் இராமநாதன் அருச்சுனா. அதன் காரணமாக இவர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றார். பலர் இவரைத் தம் வீட்டுப் பிள்ளையாகக் கருதும் வகையிலான ஆதரவைப் பெற்றார். இவர் எதற்காக இன்று சிறையில் வாட வேண்டும்?
இவர் தன் ஆளுமையை இன்னும் உறுதி, திடம் மிக்க ஆளுமையாகச் செதுக்க வேண்டும். நாணலைப்போல் காற்றின் திசை நோக்கி ஆடும் போக்கினைத் தவிர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் உணர்ச்சிமயமானவராகக் காணப்படுகின்றார். அவ்வுணர்ச்சிப் பண்பிலிருந்து இவர் தன்னை விடுவிக்க வேண்டும். அடிக்கடி ஆதாரங்கள் எவற்ரையும் முன் வைக்காமல் வார்த்தைகளை விடும் போக்கைக் கைவிட வேண்டும். ஆதாரங்களைத் திரட்டி அவற்றைச் சட்டரீதியில் மருத்துவ ஊழலை அணுக வேண்டும்.
இன்று இவர் இவ்விதம் சிறையில் வாட வேண்டிய தேவை இருந்திருக்காது இவர் நிதானத்தை, உறுதியைத் தனது செயற்பாடுகளில் கடைப்பிடித்திருந்தால். இவரால் பல வழக்குகளைத் தனித்து ஒருபோதுமே சந்திக்க முடியாது. இவர் நிதானமிழந்து, உணர்ச்சிகரமாக, கோமாளிபோல் நடப்பாரானால் இவருக்கு உதவ வரும் சட்டத்தரணிகளும் ஒரு கணம் உதவத் தயங்குவர். நீதி மன்ற வழக்கள் ஆண்டுக்கணக்கில் செல்லக்கூடியவை. இவர் நிறைய பொருள்ரீதியில் இழக்க வேண்டி வரும். சட்டம் ஒரு கழுதை என்பார்கள். அதற்கு உண்மையைவிட நீதிமன்ற அணுகுமுறைகளின்படி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியம். அவ்விதம் இவரால் ஒருபோதுமே தனித்து எடுக்க முடியாது.
இவர் நேரத்துக்கு நேரம் தன் கொள்கைகளை மாற்றும் போக்கினைத் தவிர்க்க வேண்டும். அவ்விதம் மாற்றுவது இவரை ஒரு கோமாளியாகவே மாற்றி விடும் அபாயமுண்டு.
இவரிடமுள்ள முக்கிய ஆரோக்கியமான விடயமாக நான் கருதுவது... துணிந்து, தனித்து, மருத்துவ ஊழல் பற்றிக் குரல் எழுப்பியது. அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் அன்பினைப் பெற்றது வியப்புக்குரிய முக்கியமான விடயம். என் நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக இருப்பவர் இவர் விடயத்தில் மிகவும் இளகிவிட்டதைக் கண்டபோது அதிசயப்பட்டேன். இவர் என்ன சொன்னாலும், செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் கொடுக்கும் வகையில் அந்தப் பிடிவாதக்காரரை மாற்றி விட்டார் இவர். அது இவரது ஆளுமையின் சிறப்பு.
இவர் நாணலைப்போல் இல்லாமல், பனையைப்போல் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்வது அவசியம். எதற்கெடுத்தாலும் வார்த்தைகளை விடாமல் , நிதானமாகச் சிந்தித்து, தெளிவான முடிவுகளை எடுத்து, உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் செயற்படுவது அவசியம். தன் அந்தரங்க வாழ்க்கை விபரங்களை, அனுபவங்களை , உணர்சிகரமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதை இவர் தவிர்க்க வேண்டும். அநாகரிகமான வார்த்தைகப் பிரயோகங்களை இவர் நிச்சயம் தவிர்க்க வேண்டும். முன்னறிவித்தல் இல்லாமல் தொலைபேசி உரையாடல்களை ஒலிப்பதிவு செய்தால் அவை நீதி மன்றங்களில் இவருக்கெதிராகத் திரும்பும் அபாயம் நிறையவே உண்டு.
மக்கள் ஆதரவை ஆரோக்கியமான முறையில் பாவித்து, தன் வாழ்க்கை உயர்த்துதல் இவருக்கு நன்மை தரும். தவறான செயற்பாடுகள் இவரைத் தலை குப்புற விழ வைக்கும். அதன் பின்னர் எழவே முடியாத நிலைகூட ஏற்படலாம். வைத்தியர் வரு முன் தன்னைக் காக்க வேண்டும்.
இவரது இவ்வளவு ஆளுமைக் குறைபாடுகளுக்குள்ளும் நான் காணும் ஆரோக்கியமான விடயம் - இவர் ஒரு மருத்துவர். தானுண்டு தன் பாடுண்டு என்று நினைத்திருந்தால் இவர் சிறை சென்றிருக்கத் தேவையில்லை. செல்வச் செழிப்புடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இவர் அநீதியைத் தட்டிக் கேட்டார். மக்கள் மத்தியில் அதனை வெளிப்படுத்தினார். அந்தச் சமுதாயப் பிரக்ஞை மிக்க செயற்பாடு ஒன்றே முக்கியமான விடயம். அதுதான் ஆளுமைக் குளறுபடிகள் உள்ள இவரின் தனித்துவமான ஆளுமை. சிறந்த ஆளுமை.
கருத்துகள் இல்லை