அரச அடக்குமுறைகளை தாண்டி நாம் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தோம்
“ஆறின கஞ்சி பழங் கஞ்சி” – “பத்தோடு நீங்களும் பதினொன்றாகக் கூடாது”
வடக்கு, கிழக்கு, புலம்பெயர்ந்தோரின் முறுகல்களையும், தெற்கின் இனவாத கூக்குரல்களையும் இலகுவாகக் கடந்தது NPP!
இலங்கையின் முள்ளிவாக்கால் பேரவலத்தின் பின், யுத்தத்தில் உயிரழந்தவர்களையும், மாவீரர்களையும் தமிழ் மக்கள் சுதந்திரமாக நினைவுகூர்ந்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு, புலம்பெயர்ந்தோர் முறுகல்களையும், தெற்கின் இனவாத கூக்குரல்களையும் அனுரவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இலகுவாகக் கடந்து சென்றுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னான காலத்தில் முதன் முறையாக பொலிஸ், இராணுவ படைகளின், புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடிகள் இன்றி மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
புலனாய்வு பிரிவினர், ஆயுதப் படையினர் படம் எடுத்தார்கள், முறைத்தார்கள், கைது செய்தார்கள், மிரட்டினார்கள், நினைவு கூரல்களை தடுத்தார்கள், நினைவு கூரல்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை பெற்றார்கள், சமூகவலைத்தளங்களை பின் தொடர்ந்தார்கள், சமூக வலைத்தள கணக்குகளை முடக்கினார்கள், மாவீரர்களை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்தவர்களை, கைது செய்தார்கள், விசாரணைகளுக்கு அழைத்தார்கள் என்ற செய்திகளை ஊடகங்களில் காணமுடியவில்லை.
அரச அடக்குமுறைகளை தாண்டி நாம் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தோம் என்ற வீர வசனங்களை எவரும் பேசவில்லை. வேட்டிகளை மடித்துக் கட்டவில்லை, டவுசர்களை இழுத்து விடவில்லை, படையினருடன் முரண்படும் காட்சிகளை டிக்டொக்காகவோ, வீடியோ காணொளிகளாகவோ, சமூக வலைத்தள பதிவுகளாகவோ எவரும் பதிவிட்டதாக தெரியவில்லை.
யுத்தத்தில் உயிரழிந்தவர்களை நினைவுகூர இலங்கை அரசாங்கமும், படையினரும் இனவாதிகளும் அனுமதிக்கவில்லை என் அறிக்கைகளை வெளியிடுவதற்கு புலம்பெயர் அமைப்புகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
மறுபுறம் பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது படையினரை காட்டிக்கொடுக்கிறது, இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது, புலிகள் மீண்டும் உயிர்பெறப் போகிறார்கள் என தெற்கில் ஒலிக்கும் குரல்கள், சத்தம் பெருமளவிற்கு அடங்கியிருக்கிறது. மெல்லிதாக ஒலிக்கும் குரல்களும் இம்முறை கண்டுகொள்ளப்படவில்லை. அவை கணக்கடுக்கப்படவும் இல்லை.
இனவாதத்தை அவிழ்த்து விடும் தெற்கின் ஊடகங்கள் பலவற்றிற்கு ஊதிப் பெருப்பிக்க செய்திகள் கிடைக்கவில்லை. மாவீர் தினத்தை ஆட்சியாளர்கள் அடக்கி, ஒடுக்கி, வதைத்தார்கள் என யாரும் கூறவில்லை. மாவீரர் வாரத்தை உசுப்பேத்தல்களுக்கு பயன்படுத்தும் ஊடகங்களுக்கு அவல் கிடைக்கவில்லை.
இரண்டு முறை ஆயுதப் போராட்டத்தை நடாத்தி ஆயிரக்கணக்கானவர்களை நீங்கள் பலிகொடுத்திருக்கிறீர்கள் (ஜே.வீ.பி) உங்கள் சகோதரி (ஜனாதிபதி அனுரகுமாரவின்) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வலிகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
வருடாவருடம் அனுஸ்டிக்கும் கார்த்திகை வீரர்கள் தினத்திலேயே, தமிழ் மக்களைப் போல் உங்கள் விலிகளை இறக்கி வைக்கிறீர்கள்.
உங்கள் சகோதரி காணமால் ஆக்கப்பட்டது குறித்தும் உங்கள் தாய் அடைந்த வேதனைகள் குறித்தும் உங்கள் அனுபவங்களை ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு முன்பே நீங்கள் ( அனுர) கூறியிருக்கிறீர்கள்.
அனுபங்கள் ஊடாகவோ என்னமோ யுத்தத்தில் உயிரழந்தவர்களை நினைவு கூர எந்தத் தடையும் இல்லை எனவும், அதனை தடுக்க அரசாங்கத்திற்கு அனுமதி இல்லை எனவும், உங்கள் அரசாங்கத்தின் (தேசியமக்கள் சக்தி) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், நீங்களும் (ஜனாதிபதி) மிகத் தெளிவாக அறிவித்திருந்தீர்கள்.
வல்வெட்டித்துறை வீட்டில் விடுதலைப்புலிகளின் தலைவரது பிறந்த நாளை மக்கள் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அங்கு சென்ற காவற்துறை அவரது படம், புலிகளின் கொடிகளை சின்னங்களை மட்டும் பயன்படுத்தாமல் பிறந்த நாளை கொண்டாடுங்கள் எனக் கூறியிருந்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் அவரது படத்தை மறத்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை வடக்கு கிழக்கு மக்கள் நினைவு கூரும் போதோ, மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் போதோ எவரையும் படம் பிடிக்க வேண்டாம் என உங்கள் அரசாங்கம் விசேட உத்தரவையும் பிறப்பித்திருந்தது.
உங்கள் தேசிய மக்கள் சக்த்தியின் ஆட்சியில் தமிழ் மக்களுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்த வெளிப்படையான முன்மாதிரியான நடவடிக்கையாக இந்த மாவீரர் தின நினைவேந்தலுக்கான அனுமதியை கருத முடியும்.
இதன் தொடர்ச்சியை, ஜே.வீ.பியும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், நீங்களும் பின்தொடரவேண்டும்.
தலைகீழாக நின்றாலும், தமிழ் கட்சிகளை தவிர்த்து ஒரு ஆசனத்திற்கு மேல் தேசியக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைப் பெறமுடியாது என்ற 77 வருடகால அரசியல் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 ஆசனங்களை யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
வன்னியில், திருகோணமலையில், மட்டக்களப்பில், மலையகத்தில் என வடகிழக்கில் ஆசனங்களை அள்ளித் தந்திருக்கிரார்கள்.
அரகளய போராட்டம் ஏற்படுத்திய தாக்கமும், “மாற்றம்” என்ற உங்கள் கோட்பாடுமே வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை மாற்றியிருக்கிறது.
உங்கள் கடந்தகால அரசியலை தெரியாமலோ, அல்லது புரியாமலோ உங்களின் “மாற்றம்” என்ற கோசத்தின் பின் வடகிழக்கு மலையக மக்கள் அணிதிரளவில்லை.
உங்களின் கடந்த கால அரசியல் தொடர்பான, உங்கள் மறுபரிசீலனையை, மீளாய்வினை, “மாற்றத்தினை“ அந்த அப்பாவி மக்கள் நம்புகிறார்கள்.
உங்களை நம்பிய அந்த மக்களை, கடந்த கால அரசாங்கங்கள் போல, நடுத்தெரிவில் விட மாட்டீர்கள் என அவர்களைப் போல் நானும் நம்புகிறேன்.
அந்த மக்கள் வெளிப்படுத்திய நல்லெண்ணத்திற்கான முதற் தொடக்கமாக அவர்கள் நேசித்தவர்களை உணர்வு பூர்வமாகவும், சுதந்திரமாகவும் நினைவுகூர அனுமத்திருக்கிறீர்கள்.
உங்களது இந்த நல்லெண்ணம் இனிவரும் நாட்களில் எதிரொலிக்க வேண்டும். தேசத்தின் மாற்றத்தில் தமிழ் பேசுமக்களின் அபிலாசைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் தொலைத்து கையறு நிலையில் இருக்கும் மக்களின் வலிகளுக்கு உங்கள் "மாற்றம்" மருந்தாக இருக்க வேண்டும்.
அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்தவேண்டும். அந்தக் காயங்களில் மிண்டும் சீழ்வடியாதவாறு நிரந்தரமான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
நீங்கள் கூறும் ஒன்று பட்ட இல்ங்கைக்குள், தேசத்துள் அந்த மக்களும் முழு உரிமையுடனும், சம அந்தஸ்துடனும், அதிகாரத்துடனும் வாழும் வழியை ஏற்படுத்துவதும் உங்கள் “மாற்றதில்” அடங்கவேண்டும்.
அவற்றின் ஆரம்பமாக
அரசியல் கைதிகளை முழுமையா விடுவியுங்கள்.
படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, வீடுகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பியுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள்.
“ஆறின கஞ்சி பழங் கஞ்சி” – “பத்தோடு நீங்களும் பதினொன்றாகக் கூடாது” என்பதனால் உங்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். அடுத்த மடலில் மீண்டும் சந்திப்போம். #ஞாபகங்கள்
கருத்துகள் இல்லை