பாராளுமன்றத் தேர்தல் - 2024 தேர்தல் விஞ்ஞாபனம்!📸
பின்னணியும் அறிமுகமும்
தமிழர் தேசத்தின் இறைமை
காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சியுரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஓரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் போது தமிழர் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்; 4 ஆம் திகதியிலிருந்து தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தமிழ்த்தேசத்தின் இறைமையும், ஆட்சியுரிமையும் தமிழ்தேச மக்களின் விருப்பமின்றிச் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டது. இன் நிகழ்வின் மூலம் இத்தீவில் இனப்பிரச்சனைக்கு வித்திடப்பட்டது.
உரிமை மறுப்பும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களும்
1947ஆம் ஆண்டு சோல்பெரி அரசியல் யாப்பில் தமிழர் தரப்பின் உரிமைக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 1957 ஆம் ஆண்டில் இருந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். ஆயினும், காலப்போக்கில் அவையாவும் சிங்கள ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டன அல்லது மீறப்பட்டன. அதேவேளை, சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் உரிமைகள் திட்டமிட்ட ரீதியில் மறுக்கப்பட்டன.அநீதிகள் தொடர்ந்து இழைக்கப்பட்டன.
சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பும் தமிழர் தேசத்தின் எழுச்சியும்
தமிழினத்தின் இருப்பை அழிக்கும் நோக்கோடு;;, நில அபகரிப்பின் மூலம் தமிழர் தாயகத்தின் ஆட்புல ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டது. தமிழர்களின் மொழி, பண்பாடு, பொருளாதாரம் போன்ற முக்கிய அடையாளங்களின் (தேசம் ஒன்றின் தாங்கு தூண்களின்) அழிப்பு ஆரம்பித்தது. தமிழர் தேசத்துக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனப் பாரபட்சம் இன அழிப்பாக மாற்றம் பெற்றது. இன அழிப்புக்கு எதிராக எழுந்த தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்கியது சிங்கள தேசம்.
அப்பாவித் தமிழ் மக்கள் மீது 1956, 1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட அரச வன்முறைகள் ஏவி விடப்பட்டன. 1972இல் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனம், தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நிலையில் 1976 ஆம் ஆண்டு தமிழ் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமையை கொண்ட சுதந்திரத் தமிழ் அரசை நிறுவுவதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977 ஆம் ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழினத்தின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை அளித்ததன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான மக்களானை வழங்கப்பட்டது. இருப்பினும், தமிழர் தேசத்தின் சனநாயக ரீதியிலான அரசியல் முன்னெடுப்புக்களை சிங்கள தேசம் திட்டமிட்டு தடுத்ததுடன் தமிழர் தேசத்துக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. அரச அடக்குமுறையை நியாயப்படுத்தக் கூடிய வகையில் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் மனிதகுலத்திற்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சமதருணத்தில் கட்டமைப்பு சார் இன அழிப்பும், பண்பாட்டு அழிப்பும், பொருளாதார அழிப்பும் சிங்கள தேசத்தால்; தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழர் தேசத்தின் இருப்பும், தனித்துவத்தையும் பாதுகாக்கவும், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு தமிழர் தேசம் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது. பிராந்திய மையப்பட்ட தமிழர்களின் போராட்டம் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் அதன் இறைமை ஆகிய கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்ட திம்புப் பிரகடனம் பிறப்பெடுப்பதற்கு வழியமைத்தது.
சிங்கள தேசம் இதயசுத்தியற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தன. ஒரு புறம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டன. மறுபுறம் தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்தாத ஒப்பந்தங்கள் தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்பட்டன.
இத்தகைய சூழலில், தமிழர்களின் உரிமைக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அளப்பரிய உயிர்த்தியாகங்களின் மூலம் விடுதலைப் புலிகளால் இலங்கைத்தீவில் ஏற்படுத்தப்பட்ட இராணுவச்சமநிலையின் ஊடாக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டது.
அவ் வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசிய இனத்தின் தாயக நிலைப்பரப்பின் 70 வீதத்தைத் தொடர்ச்சியாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அங்கு ஓர் அரச நிர்வாகத்திற்குச் சமனான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பை நடாத்தி ஒரு நடமுறை அரசினைத் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்வசம் கொண்டு இருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் 2002 ஆம் ஆண்டில் உருவான சமாதான சூழல் ஊடாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய கௌரவமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை அடைந்து கொள்வதற்காக, தமிழீழ விடுதலைப்புலிகள் அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் முயற்சித்தனர். அந்த அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளால் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு யயயய முன்வைக்கப்பட்டது. ஆனாலும் சமாதான வழிமுறையூடாகத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு எதனையும் முன்வைக்க விரும்பாத பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் காலத்தை இழுத்தடித்து தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி, தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழிப்பதிலேயே முனைப்புக்காட்டின. 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுத் தலைமையானது சமாதானக் கதவுகளை முற்றாக மூடியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரினைத் தீவிரப்படுத்தியது.
மூன்று வருடங்கள் இடைவிடாது ஓய்வின்றி மேற்கொண்ட இன அழிப்புப் போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளது இராணுவ பலத்தை அழித்தது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் தமது உயிர்களை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். இலட்சக்கணக்கான எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பூகோள அரசியலும் தமிழர்; போராட்டமும்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் பூகோள ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவானது ஒரு முக்கிய புள்ளியாகும். இந்த பூகோள ஆதிக்கப் போட்டியானது எமது இனத்தின் விடிவிற்கான பயணத்தில் பல தாக்கங்களை பல்வேறு காலக்கட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இப் பூகோள ஆதிக்கப்; போட்டியானது தமிழ் மக்கள் தமது இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை தமிழ் மக்களின் நலன் சார்ந்து அர்ப்பணிப்புடனும், ஆக்கபூர்வமாகவும் அணுகுவதன் மூலம் எமது இலக்கை அடையலாம் என்ற தர்க்கரீதியான உறுதியான நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பயணத்தை தொடர்கின்றது.
அரசியலமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு முன் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் தேவைப்பாடு.
அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலை நோக்குப் பார்வையானது, ஓர் உடன்படிக்கை வடிவில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவசியமாகும். இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களில் தமிழர்களின் தேசம் அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை என்பவற்றின் அங்கீகாரம், கூட்டாட்சி (சமஷ்டி) அதிகாரம், பாரம்பரிய தாயகம் ஆகியன உள்ளடங்கும்.
எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக மீறினால் வேறு மாற்றுவழிகள் எதுவும் இல்லாத விடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டும். இவ்வுடன்படிக்கையானது, மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால் அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால்) உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு ஒன்று உள்நாட்டு சட்டத்தோடு மட்டுப்படுவதாக கருதப்படுவதால், இவ்வுடன்படிக்கை மூலமாக மூன்றாம் தரப்பொன்றின் பங்குபற்றலை உள்வாங்குவதானது, எட்டப்பட்ட அரசியல் தீர்வின் நிலைத்தகு தன்மையை ஓர் சர்வதேச, வெளித் தரப்பு ஒன்றின் உத்தரவாதத்தின் ஊடாக நிலை பெறச் செய்ய உதவும்.
மேலும், இவ்வுடன்படிக்கையானது பொறுப்புக் கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சனைகள், இராணுவமய நீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்பு தொடர்பிலானவை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் உடன்பாடுகளை எட்டிய ஓர் உடன்படிக்கையாக இருக்க வேண்டும். மேற்சொன்ன விடயங்களில் முன்னேற்றம் இல்லாமல் அரசியலமைப்பு விவகாரங்களை பற்றிய திறந்த பாதுகாப்பான உரையாடல் ஒன்று வடக்கு கிழக்கில் நடைபெற முடியாது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை
இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இரு தேசங்களின் கூட்டான – ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து தீர்வு காண போராடி வருகின்றோம்.
இன்று இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட பூகோள ஆதிக்கப் போட்டியொன்று இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள ஆதிக்கப் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப் போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது, தமிழர்களுக்கான நிகரற்ற பேரம் பேசும் சக்தியாகும், அதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம்; என்பது எமது திடமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.
இதனை சிறீலங்கா என்கின்ற தீவிர இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்குள் அடைய முடியாது. இங்கு அரச மீளுருவாக்கம் (ளுவயவந சநகழச) இடம்பெற்று, தேசங்களின் கூட்டாக, ஆகக் குறைந்தது தமிழ் சிங்கள தேசங்களின் இறைமைகளைக் கூட்டுச் சேர்த்த (pழழடiபெ ழக ளுழஎ இருதேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசு உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியும். தமிழ் தேசம் (யெயெ எனும் அந்தஸ்து அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்பதிலும், அவ்வந்தஸ்து சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.
சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத் தமிழர்களது உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்துகின்றது என நாம் எமது 2010ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர்வு கூறியதே நடந்தேறியது.
இந்நிலையானது பூகோள அரசியலின் விளைவால் வடிவ மாற்றத்தோடு தொடர்கின்றது. இதன் காரணமாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தமது அடிப்படை கொள்கைகளான தாயகம், தேசம், தனித்துவமான இறைமை, சுய நிர்ணய உரிமை என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமது நலன்களை அடைவதற்காகத் தமிழர்களது பிரச்சனையை கையில் எடுக்கும் பொழுது, தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதிற்க்கு அதனைப்பயன்படுத்த முடியும்.
புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்தல்
சிறீலங்கா அரசின் புதிய அரசியல் அமைப்புப் பேரவையினால் தமிழர்களின் நீண்டகால இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற போர்வையில்; கடந்த 2016 ஆம் ஆண்டு மார்சிலிருந்து - 2017 செப்ரெம்பர் 21 வரையான காலப்பகுதியில் 'ஏக்கிய இராச்சிய அடிப்படையிலான' (ஒற்றையாட்சி) அரசியல் அமைப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை தாயகமென அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தாத, தமிழ்த் தேசம், அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்காத, சமஸ்டி ஆட்சி முறையை மறுதலிக்கும், பௌத்தத்தை முதன்மை மதமாக அங்கீகரிக்கின்ற — இறைமை பகிரப்படமுடியாத — மற்றும் இறைமையை பராதீனப்படுத்த முடியாத ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அடிப்படையிலான அரசியல் அமைப்புக்கான வரைபாகவே அவ் இடைக்கால வரைபு வெளிவந்துள்ளது. இந்த ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரச கட்டமைப்புக்கான இடைக்கால வரைபைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) முற்று முழுதாக நிராகரிக்கிறது. அதே போன்று 13ஆம் திருத்தச் சட்டமோ, அதன் கீழான மாகாண சபைகளோ தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவேனும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.
தீர்வுத் திட்டம் - நிலையான அரசியல் தீர்வு
கடந்த 2017 செப்ரெம்பர் 21 இல் வெளியிடப்படட புதிய ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் அமைப்பிற்கான இடைக்கால வரைபை முற்றாக நிராகரித்து, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தின் பிரகாரம், இணைந்த வடக்கு - கிழக்கினை தாயகமாகக் கொண்டு தமிழ் மக்களை, தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரித்து அதன் தனித்துவமான இறைமையையும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.
இந்த இறையமையுள்ள தேசங்களின் கூட்டிணைவு என்பது 'கனடா' போன்று உலகின் முன்னேறியுள்ள பல நாடுகளில் உள்ளவை போன்ற அதிகார அமைப்பாகும். இங்கு மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் தாம் சுயநிர்ணய உரிமையை கோர உரித்துடையவர்கள் என்ற கோரிக்கைகளை முன்வைப்பின், நாம் அதனை ஏற்றுக் கொள்வோம். ஆனால், சுயநிர்ணய உரிமை அரசியலை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக அவர்களுடன் கைகோர்த்து ஒன்றாக பயணிப்பதற்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம்
தேச அங்கீகாரம் என்ற அடிப்படையிலான தீர்வை வலியுறுத்துவது - நிலையான தீர்வுக்கு அடிப்படையானது
இலங்கைக் தீவானது பௌத்த சிங்கள மக்களுக்காக மாத்திரமே சிருஸ்டிக்கப்பட்டது எனும் மகாவம்ச மனநிலை காரணமாகவே இத் தீவில் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைப்பதற்க்காக இன்று வரை தொடரும் இன அழிப்பு செயற்திட்டத்தை சிங்கள தேசம் முன்னெடுத்து வருகிறது. ஆகவே தமிழரின் (ஆயுதம் தரித்த மற்றும் ஜனநாயக வழி தழுவிய) போராட்டம், எமது தேசம் என்ற பரிமாணத்தை பாதுகாத்தல் பற்றியதாகும். அந்த பரிமாணம் நாமே எம்மை ஆளும்; சுயநிர்ணய உரிமையை பெறும்போதே பாதுகாக்கப்படும்.
ஆனால் இறைமையின் உறைவிடம் சிங்கள பௌத்த அரசாகிய சிறிலங்கா அரசிடமே என சிங்கள தேசம் கூறுகிறது. எம்மை பொறுத்தவரையில், அத்தகைய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு செய்யப்படும் எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இத்தீவின் மீதான சிங்கள பௌத்தத்தின் ஏக போக உரிமையை ஏற்றுக்கொள்வதற்கு நிகரானது,
அப்படி நாம் ஏற்றுக்கொண்டால் சிங்கள தேசம் அந்த அதிகாரப் பகிர்வை எதிர்காலத்தில் ஒருதலைப்பட்சமாக நீக்குவதற்கான ஆபத்துண்டு. தமிழர்களைத் தேசம் என நாம் முன்னிறுத்தும் போது, அவர்களை ஓர் சுயநிர்ணய உரிமையின் படி வந்த இறைமையின் உடைமையாளர்களாக நாம் முன்னிறுத்துகின்றோம்.
அந்த அடிப்படையில் தீர்வு எட்டப்படும் போது சிங்கள அரசு அதை ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆதலால் தான், தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் நாம் அரசியல் தீர்வை அணுக வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
உதாரணமாக அதிகாரப் பகிர்வு ஊடாக நாம் சாமஸ்டித் தீர்வை பெற்றுக்கொண்டாலும், அதுவோர் அதிகாரப் பகிர்வுச் செயன்முறையாக இருப்பதால் சிங்கள தேசத்தால் எதிர்காலத்தில் புதியவோர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அவ் வேறுபாட்டை தன்னிச்சையாக இல்லாதொழிக்க முடியும். மாறாக இறைமையுள்ள தேசங்கள் என்ற வகையில் சிங்கள, தமிழ் தேசங்கள் இணைத்து உருவாக்கும் இறைமையுள்ள தேசங்களின் சமஷ்டி என்பது தனித்து ஒரு தேசத்த்தால் இல்லாமல் செய்யப்பட முடியாது. அத்தகைய தீர்வே நீடித்து நிலைக்கக் கூடியதாகும்.
அதிகாரப்பகிர்வு மூலமான சமஸ்டி அரசியலமைப்பையே பெரும்பான்மையினத்தவரால் ஒரு தலைப்பட்சமாக மாற்றியமைக்கக் கூடிய ஆபத்துள்ள நிலையில் எமது கட்சியைத் தவிர ஏனைய அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) என்ற அரசியல் அமைப்புக்கு இணங்கியிருப்பதானது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாடாகும்
அரசியல் தீர்வை அடைந்து கொள்ளவதற்கான வழிவரைபடம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முழுமையான பங்குபற்றலுடன் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தின் பிரகாரம், தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை அடைவதற்கு கீழ்வரும் வழிமுறைகள் முக்கியமானவை என நாம் கருதுகின்றோம்.
அரசியல் அமைப்பின் 6ஆம் திருத்தச் சட்ட நீக்கம்
சிறீலங்காவின் அரசியல் அமைப்பில், அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தனிமனிதனுடைய பேச்சுச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்ற வகையில் இணைக்கப்பட்டுள்ள 1983 ஆம் ஆண்டின் 6 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.
தமிழினப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிபெறல்
தமிழ் மக்கள் மீது இனவழிப்பு, மானுட குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. இந்தக் குற்றங்கள் தொடர்பாக காத்திரமான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் மூலமான விசாரணையையே நாம் வலியுறுத்துகின்றோம்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ் மக்களுடன் இணைந்து எமது கட்சி உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையே வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது.
எனினும், தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வடகிழக்கில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவுடன் உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இனப்படுகொலையாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர். இனியும் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்காமல் உடனடியாக சர்வதேச குற்றவியில் நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அதற்கான அழுத்தங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
இதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது?
போரினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தளம்பலும் இல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் மூலமான விசாரணையே வேண்டும் என்பதே எமது கோரிக்கை என நாம் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இல்லாது எம்மீது உள்ளக விசாரணையைப் பொறிமுறையைத் திணிப்பதை நாம் தடுக்கலாம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா. வுக்கு உள்ளும் வெளியும் சர்வதேச குற்றவியல் விசாரணை செயன்முறையே தேவை என்பதை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தெளிவாக வலியுறுத்தி வந்துள்ளது. பூகோள அரசியலைச் சரிவரக் கையாள்வதனூடாகவும் எமது மக்களின் சனநாயக அணிதிரள்வைச் சரியாக பயன்படுத்துவதனூடாகவும் நாம் இதனை அடைந்து கொள்ளலாம்
எமது இலக்குகளை அடைந்தது கொள்ள மூன்று தளங்களில் செயற்பட்டு வருகின்றோம்.
● மக்களை அணிதிரட்டி ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொள்ளல்
● ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச இராஜதந்திர மட்டங்களிலும், எமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லல்.
● தாயகத்தில் துறைசார் கட்டமைப்புக்களை உருவாக்கி செயலாற்றுதல்.
● தாயகத்திலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும், தமிழகத்தில் வாழும் தமிழ் உறவுகளையும் அரசியல் மயப்படுத்தி அணி திரட்டிப் போராடுவது.
● மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் எமது தார்மீக உரிமைப் போராட்டத்தில் இணைத்து செயற்படுவது.
● இலங்கைத் தீவை மையப்படுத்தி இடம்பெறும் பூகோள அரசியல் போட்டியில் தமிழர்களின் வகிபாகத்தையும், முக்கியத்துவத்தையும் சரிவர பாவித்து சர்வதேச அபிப்பிராயத்தைத் தமிழர் நலன்களை நோக்கி நகர்தல்.
இவ் அணுகுமுறையை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம், எமக்கு மக்கள் ஆணை கிடைக்குமாக இருந்தால் இப்பணிகளை வேகமாகவும் பரந்துபட்ட அளவிலும் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
● இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வரும் அத்துமீறலைக் கட்டுப்படுத்த மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதுடன் இராஜதந்திர முயற்சிகளையும் முன்னெடுத்தல்.
அரசியல் செயற்பாடுகள்
அரசியல் கைதிகள் விடுதலை
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி, சர்வதேச அரங்குகளில் குரல் கொடுப்பதுடன், பேரம் பேசுவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் விடுதலைக்காகப் பேரம் பேசுவோம்.
பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்
நீண்டகாலமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு காரணமாக இருந்து வரும் கொடிய பயங்கரவாதக் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் முன்னெடுப்போம்.
வலிந்து காரணமால் ஆக்கப்பட்டோருக்கான நீதி
வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களது விடயத்தில், அவர்களது அமைப்புக்களுடன் இணைந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டுமென சர்வதேச அரங்குகளில் குரல் கொடுப்போம்.
தாயகத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றல்
சிறீலங்கா ஆயுதப்படைகள் மீதான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் ஊடாக நீதி கிடைக்கும் வரையில், இன அழிப்பு குற்றச்சாடுக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய சிறிலங்கா ஆயுதப்படைகள்வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படக் குரல் கொடுப்போம்.
அரசு, தனியார் காணிகள் வீடுவிப்பு
வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் வெளியேற்றப்பட்டு, அக்காணிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த குரல்கொடுப்போம்.
திட்டமிட்ட சிங்கள, பௌத்த மயமாக்கலுக்கு எதிராகப் போராடுதல்
அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்திலுள்ள சனத்தொகை விகிதாசாரத்தை திட்டமிட்ட முறையில் மாற்றியமைப்பதும், தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டைத் துண்டிப்பதுமான, சிங்களப் பேரினவாதத்தின் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவோம். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள, பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.
வடக்கிற்கு மகாவலியைத் திசை திருப்புதல் என்ற போர்வையில் - வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் மாத்திரமே – மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டு இயங்குகின்றது. அவ்வாறானதொரு அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படவும் - அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம் பெறும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தையும் எதிர்ப்போம். மொரகஸ்காந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் - வன்னிப் பிரதேசத்திலே திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தையும் எதிர்காப்போராடுவோம், இவற்றுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவு வழங்குவதைத் தவிர்ப்போம்.
ஆக்கிரமிப்புக்களை எதிர்ப்போம்
பாதுகாப்பு அமைச்சு, தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம்;, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் புத்த சாசன திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேட்கொள்ளப்பட்டுவரும் – வழிபாட்டுத்தல, நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படவும், மேலே குறிப்பிட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஊடாக – நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக – ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ்கள் (வர்த்தமாணி அறிவித்தல்கள்) இரத்துச் செய்யப்படவும், நிறுத்தப்படவும் அழுத்தங்களைப் பிரயோகிப்போம். இவற்றுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்.
வெளியுறவுக் கொள்கை
போரிற்குப் பின்னரான தமிழ்த் தேசத்தின் நலன் சார் வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுத்து முன்னெடுத்து வருகிறோம். எமது வெளியுறவுக் கொள்கை தமிழர் நலன்களை மையமாகக் கொண்டது. இது எந்த அரசையும் பகை நாடாக கருதாத கொள்கை. இலங்கைத் தீவின் பூகோள அமைவிடமும், தமிழ் அரசியல் அதன் செல்நெறியின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் சரிவரக் கையாள்வதனூடாக, தமிழர்களின் நலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சர்வதேச இராஜதந்திர மட்டங்களில் செயலாற்றி வருகின்றோம்.
தமிழ்த் தேசியப் பேரவை
தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம், உடனடி வாழ்வாதாரப் பிரச்சனை, அபிவிருத்தி, போன்ற அனைத்து விவகாரங்களையும் கையாளக் கூடிய வகையில் தமிழ்த் தேசிய பேரவை என்ற கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இதுவே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அதி உயர் அதிகார சபையாக செயற்படும் வண்ணம் துறைசார் நிபுணர்கள் இவ் அவையில் உள் வாங்கப்படுவர்.
முடிவுரை
எமது மக்களின் தாயகம், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் மற்றும் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை, என்ற அடிப்படைகள் சமரசத்திற்கு அப்பாற்பட்டவை. எமது மக்களின் நலன்களுக்கு மேற்குறித்த கோட்பாடுகள் அங்கீகரிக்கப்படுவது அடைப்படையானது. நாம் எந்த நாட்டினதும், தேசத்தினதும், இனத்தினதும், இனக் குழுக்களினதும் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, எமது தேசத்தின் நலன்கள் பேணப்படும் வகையில் சிங்கள தேசத்துடனும், இந்தியா, மேற்குலகு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனும் ஆரோக்கியமான இராஜதந்திர உறவுகளைக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். மேற் கூறப்பட்ட தீர்மானங்களைப் பூரணமாகச் செயல்வடிவில் சாதிக்கும் நோக்குடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் உறுதியுடன் பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம், எதிர்வரும் 2024 நவம்பர்; 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 'அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில்' போட்டியிடுகின்றோம். இத் தேர்தலில் எமக்கு அமோக ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களை நாம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
கருத்துகள் இல்லை