கார்த்திகை தீபங்கள் - சுரேஷ் தர்மா!!
கார்த்திகை மாதத்தின் குளிர்ந்த காற்று சில்லென்று வீசியது. மாமரத்தில் ஓடி விளையாடிய அணில்களின் கீச்சிட்ட ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்த பறவை ஒலியும் செவிபறையில் ஒன்றாகப் புகுந்தது.
இயற்கையின் இசைகளில்தான் எத்தனை பேருவகை. மனம் எண்ணங்களில் இதப்பட்டது.
மூன்று நாட்களாக மழை விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. ஓயாத வெள்ளத்தில் நாடு அமளிப்பட்டுக்கொண்டிருந்தது. ஓட வழியின்றித் தேங்கி நின்ற நீரைச் சபித்தபடி, மக்களின் இயல்பு வாழ்வும் வாழ்வாதாரமும் அல்லல்பட்டுக்கொண்டிருந்தது.
அலைபேசியைத் திருப்பி நேரத்தைப் பார்த்தேன்.
நேரம் அதிகாலை ஐந்து பத்து.
சமையல் அறைக்குள் கேட்ட சட்டிபானை ஒலி அம்மா விழித்துவிட்டதைக் கட்டியம் கூறியது. நான் மூன்று மணிக்கே விழித்துவிட்ட போதும் பேசாமல் படுத்திருந்தேன்.
என் அரவங்களை அம்மா புரிந்து கொண்டிருப்பார், ஆனாலும் எதுவும் பேசவில்லை.
அது ஒரு கனம் பொருந்திய நாள். எம் ஈகையாளர்களுக்கான, நாம் வணங்கவேண்டிய இரண்டாம் கடவுளருக்கான அஞ்சலி நாள்.
கார்த்திகை 27
மனதில் ஏதோ பிசைவது போன்ற உணர்வில் படுத்திருந்தேன். அம்மாவுக்குத் தெரியும் அன்றைய தினம் நான் யாருடனும் எதுவும் பேசமாட்டேன் என்பது.
அந்தத் தெய்வீக நாளை நான் பூஜிக்கிற முறை அதுதான்.
அந்த அதிகாலைப்பொழுதின் இதமான நேரம், திடீரெனச் சடசடவென பெரிய துளிகளாக மழை பொழியத் தொடங்கியது.
"இண்டைக்கு விளக்கு கொழுத்தப் போன மாதிரித்தான்..." முன்வராந்தாவில் நின்றபடி அம்மா சொன்னது எனது செவிகளிலும் விழுந்தது.
வெளியே வந்த அப்பா, " அது அந்த நேரம் மழை விட்டிடும் ....பாரப்பா..." என்பதும் கேட்டது.
அது உண்மைதான். விளக்கேற்றுகிற நேரம் விண்ணக தெய்வங்கள் ஓடி வருகிற நீர்க்கம்பிகளை இழுத்துப் பிடித்து விடுவார்கள், போலும். அப்படி ஒரு ஆச்சரிய அதிசயமாக அந்த நேரத்தில் மழை ஓய்ந்துவிடும்.
பெரிய மூச்சொன்றை எடுத்துவிட்டு என்னை ஆசுவாசப்படுத்தினேன்.
என் வீட்டில் என் மூத்த சகோதரன் இந்த மண்ணுக்காகப் போராடி வீரச்சாவடைந்தவர். அவர் காட்டிய பாதையில் நானும் பயணித்திருந்தேன்.
காலம் எனக்கு மாவீரன் என்கிற மாபெரும் கௌரவத்தை தரவில்லையே என நான் பலமுறை ஏங்கியதுண்டு. அது ஒரு மாபெரும் கொடை. பிறக்கின்ற யாவரும் மரணிப்பது இயற்கையின் நியதிதானே...அப்படி இருக்க, வாழ்நாளெல்லாம் தமிழ் மக்களின் நெஞ்சப்பரப்பில் போற்றி வணங்குகிற அந்தப் புனித வரம் ஏனோ எனக்குக் கிட்டவில்லை...
இன்றைய காலத்தில் மலிந்துபோய்விட்ட கோர மரணங்களை நினைக்கிற போது எனது மனம் வெம்பிப் புழுங்குவதுண்டு.
"வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதி இளைஞன் பலி"
"காதல் தோல்வியால் இளம்யுவதி தூக்கிட்டுத் தற்கொலை"
இவ்வாறு வருகிற அன்றாடச் செய்திகள் என்னை பலவற்றையும் சிந்திக்கவைக்கும்.
ஒரு காலத்தில், விமானக் குண்டு வீச்சுக்கும் நேருக்கு நேரான மோதலிலுமாக தமிழ் மக்களின் மரணம் இருந்தது.
இப்போது வாள்வெட்டு, விபத்து, தற்கொலை என வடிவங்கள் மாறியிருக்கிறது. அதுவும் தமிழர் பகுதியில் இரண்டாயிரத்து ஒன்பதிற்குப் பிறகு இவை அதிகரித்திருப்பது தமிழரின் அவலத்தின் ஒரு பகுதிதான்.
உரிமைப் போருக்காக விதையாகி எம் உறவுகள் காவியமானார்கள். உணர்வுகளோடு போராட முடியாமல் இன்றைய இளையவர்கள் தற்கொலை செய்கின்றனர்.
வாழத்தெரியாமல், வாழ்வின் அர்த்தம் புரியாமல் வாழ்ந்து, வாள்வெட்டில் மரணிக்கின்றனர்.
நிதானமில்லாமல் நெறி பிறள்ந்து வாகனங்களை உயிர் பறிக்கும் இயமன்களாக மாற்றி உயிரை விடுகின்றனர். அங்கவீனர்களாகின்றனர்.
வாழ்வும் வளமும் மங்கிப்போயிற்று...
ஓடிப்பறந்த எண்ணங்களை இழுத்துப் பிடித்தபடி அன்றைய நடப்பிற்கு வந்தேன்.
ஆவி பறக்கும் கோப்பியை ஆற்றியபடியே வந்த அம்மா, என்னருகில் இருந்த மேசையில் அதை வைத்துவிட்டு
"ஆறிப்போடும்...கோப்பியைக் குடி ...." என்றுவிட்டுத் திரும்பி நடந்துபோக, தலைக்கு கீழிருந்த கழுத்துக்குள் சுருண்டிருந்த தலையணையை எடுத்து அருகில் வைத்துவிட்டு தலையை நிமிர்த்தி எழுந்து கொண்டேன்.
தானே விறகடுப்பில் கோப்பி, வேர்க்கொம்பு கொத்தமல்லி எல்லாம் வறுத்து அம்மா அரைத்த கோப்பி வாசம் மூங்கில் நுளைந்து மனதை நிறைத்தது.
எடுத்து ஒருவாய் உறிஞ்சினேன், நாக்கில் சுள்ளென்று சுவை ஒட்டிக்கொண்டது.
" அம்மான்ரை கோப்பியை ஆராலையும் அடிக்கேலாது...." அண்ணா அடிக்கடி சொல்கிற வார்த்தைகள்.
அதுவும் இப்படி மழைக்காலங்களில் அடிக்கடி கோப்பி குடிப்பான்...
அண்ணா போராட்ட வாழ்வில் இணைந்து சில மாதங்களில் மாரிகாலம் வந்துவிட்டது. அந்த வருசம் முழுவதும் அம்மா கோப்பி அரைக்கவே இல்லை...
"என்ரை பிள்ளை கோப்பி குடிக்காமல் இருக்க மாட்டானே...இப்ப என்ன செய்யிறானோ..."
அதைச் சொல்லிச் சொல்லியே அம்மா அழுதுகொண்டிருந்தா.
கண்கள் திடீரென நிறைந்து போனது எனக்கு....
போர்வையை இழுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே கோப்பியைக் குடித்து முடித்தேன்.
அருகில் இருந்த அலைபேசி எடுத்து உயிர்ப்பிக்கவும் அதன் முகப்பில் அண்ணாவின் ஒளிப்படம் உதித்தது.
முதநூலில் மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த பதிவுகளே அதிகமாக இருந்தன.
செங்காந்தள் படம் ஒன்றை எடுத்து, எனது மனதில் உதித்த சில வரிகளைப் பதிவிட்டு விட்டு அலைபேசியை வைத்தேன்.
புலி வெறுப்பு அரசியலை ஒரு சாராரும் புலி ஆதரிப்பு அரசியலை ஒரு சாராருமாக மாய மான் போல போலி முகத்திரைகள் உயர்ந்தோங்கியிருக்க, உண்மையான நேர்மையான பற்றாளர்கள் மௌனம் காக்கிற நிலைமைதான் தற்போது இருந்தது.
யாரை நோவது ....
எங்களை எல்லாம் தன் மன ஆளுமை எனும் ஒற்றைக் குடையின் கீழ் தாங்கிய பெருந்தலைமையை நாங்கள் தொலைத்து விட்டோம்.
மேய்ப்பனற்ற ஆடுகள் போல, தமிழரின் நிலைமை ஆகியிருக்கிறது.
அவரில்லை என்றதும் நரிகளெல்லாம் நாட்டாமை செய்யப் புறப்பட்டிருந்தது.
காலக்கொடுமையை எண்ணியபடி எழுந்து வெளியே வந்தேன். மழை சடசடவெனப் பொழிந்து கொண்டிருந்தது.
மேனியைத் தழுவிய குளிரைப் பொருட்படுத்தாமல் குடையை எடுத்துக்கொணாடு அம்மாவைப் பார்த்தேன்.
புரிந்து கொண்ட அம்மா, வெள்ளை நிற பை ஒன்றை ஒடுத்துவந்து கையில்தர, வெளியே சென்று செங்காந்தள் மலர்களோடு வெள்ளைப்பபூக்களும் சிவப்பு நிற செம்பருத்திப் பூக்களையும் பிடுங்கினேன்.
பூக்களை மேசையில் வைத்துவிட்டு உள்ளே சென்று குளித்துமுடித்து வந்து நேற்றே அம்மா துடைத்து அழகாக வைத்திருந்த அண்ணாவின் வரிச்சீருடை அணிந்த படத்தை மேசையில் வைத்துவிட்டு பையில் இருந்த பூக்களை கைகள் இரண்டால் அள்ளி அள்ளிப் போட்டேன்.
தூரத்தில் நின்ற அம்மா விம்மி அழுகிற ஒலி கேட்டது. அருகில் கதிரையில் அமர்ந்திருந்த அப்பா தொண்டையைக் கனைத்து, தனது குரலைச் சரி செய்து துக்கத்தை சமப்படுத்தினார்.
படலை திறக்கிற ஒலி கேட்டது , நிமிர்ந்து பார்த்தேன்....
திருமணம் செய்து எங்கள் வீட்டில் இருந்து சற்றுத் தள்ளியிருக்கும் தங்கை, பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருவது தெரிந்தது.
வந்ததும் வராததுமாக "அண்ணா....அண்ணாக்குட்டீ...." என்று பெரிதாகவே ஓலமிட்டு அழத்தொடங்கிவிட்டாள்...
நான் சற்றுத் தள்ளியிருந்த என்னுடைய அறைக்குள் வந்து விட்டேன்.
அம்மா ....அண்ணாவைப் போலவே இருக்கும் தங்கையின் மகனை அணைத்தபடி அழுதுகொண்டிருந்தா....
நான் மளமளவென உடுப்பை மாற்றிக்கொண்டு புறப்பட்டேன்...
வழமையாகவே துயிலுமில்லத்திற்கு நான் காலையிலேயே போய்விடுவேன்,
அன்றைய தினம் எல்லாமே சமைத்து, அண்ணாவுக்குப் பிடித்த எல்லாமே அம்மா வைத்துப் படைப்பா.
மற்றவர்கள் என்ன சொன்னாலும் அம்மா கேட்கமாட்டா...
"அந்த ஒரு நாளில் தன்பிள்ளை வந்து சாப்பிடுவான்" என்கிற அம்மாவின் நம்பிக்கையை நாங்கள் அப்படியே விட்டுவிடுவோம்.
வீட்டில் அம்மாவும் தங்கையுமாகச் சமைக்கத் தொடங்க, எனது உந்துருளி துயிலுமில்லம் நோக்கி உருண்டது.
சிவப்பு மஞ்சள் நிற கொடிகளின் அலங்கரிப்பைக் கண்டதும் சொல்ல முடியாத ஒரு உணர்வில் ஓரமாக உந்துருளியை விட்டு விட்டு வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு மெல்ல மெல்ல பாத அடிகளை வைத்து உள்ளே சென்றேன்.
"சத்தம் செய்யாதீர்கள்....
எங்கள் பிள்ளைகள் இங்கேதான் உறங்குகிறார்கள்..." என்ற வரிகள் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருந்தது.
எழுத்தாக்கம் - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை