தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படாத, ‘கடைசி சிந்தனையாளரின் மரணம்’ !


 ழான் போத் ரியாவின் தியரியை முன் வைத்து 2009 இற்குப் பின்னான எமது ஈழப் போராட்ட வரலாற்று நிகழ்வின் பிறழ்வுகளை அடிக்கடி எழுதியிருக்கிறேன். 


அண்மையில் துவாரகா என்ற பெயரில் ஒரு பெண் எமது வரலாற்றில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய போதும் எழுதியிருந்தேன்.


தற்போது மீண்டும் சீமான் தலைவர் சந்திப்பு  விடயத்திலும் இதை எழுத வேண்டியிருப்பது பெரும் துயரம்.


தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படாத, ‘கடைசி சிந்தனையாளரின் மரணம்’ என்று அவர் மறைந்த போது தத்துவ உலகம் வர்ணித்த, சம காலத்து பிரெஞ்சு சிந்தனையாளர் ழான் போத்ரியா (Jean Baudrillard) ஊடகங்களை முன்வைத்து ‘மிகைப் போலி பிம்ப உலகு’ என்று ஒரு கோட்பாட்டை முன் வைத்தார்.


உண்மைக்கும் பொய்க்கும் இடைவெளி அருகி வருவதை அவர் செயற் போலி (Simulations) மற்றும் மீமெய் (Hyperreal) தத்துவங்களினூடாக நுணுக்கக் கோட்பாட்டின் (Critical Theory) வழி மிக ஆழமான கருத்துருவாக்கங்களாக முன் வைத்தார்.


அரசுகளினதும், பெரு முதலாளிகளினதும், நிறுவனங்களினதும் அமைப்பு சார் ஒழுங்கிற்குள் ஊடகங்களின் அரசியலை – தன்னிலை அழிப்பை குறிப்பாக உண்மையின் மரணத்தை ( அசலை போலி முந்துதல் ) அவர் கருத்துருவகப்படுத்தினார்.


அதாவது, உண்மை என்று ஒன்றில்லை- இனி கட்டமைக்கப்படுவதுதான் உண்மை என்றார். அதைச் சமகால உலகம் நிருபித்து வருகிறது.


இதில் என்ன முக்கிய அம்சம் என்றால் இங்கு நாம்தான் அதன் கருவிகளாக/ பாத்திரங்களாக மாறி எம்மை நாமே சுய அரசியல் நீக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.


போத்ரியாவின் தியரிப்படி ‘மிகைப் போலி பிம்ப உலகிற்குள்’  நாம் 'பொக்ஸ்' அடிக்கப்பட்டு விட்டோம்.


குருரமாக தோற்கடிக்கப்பட்ட/படுகொலைக்களத்தில் எல்லோராலும் கைவிடப்பட்டு வீழ்த்தப்பட்ட/ இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனம் நிஜத்திற்கு எதிராகவே போராட முடியாமல் அல்லற்படும் நேரத்தில் புனைவிற்கும்/ பொய்மைக்கும்/ போலிமைகளுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருப்பது மிகப் பெரிய அவலம்.


சமூக வலைத்தளங்களில் இந்த பிம்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறுண்டு கொண்டிருக்கின்றன. ழான் போத்ரியா மிகப்பெரிய தத்துவ மேதைதான். மே 18 இன் பிற்பாடு தமிழ்ச் சூழல் நிஜத்திற்கும் புனைவிற்குமான எல்லைக்கோட்டை முற்றாக அழித்துவிட்டிருக்கிறது.


அதன் இன்னொரு நிகழ்கால  சாட்சியம்தான்   

' சீமான் ஈழ வருகை' 😢.


இதில் புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை.


தமிழினப் படுகொலை நேரத்தில் கள்ள மவுனம் காத்த தமிழக ஊடகங்கள் இந்த வரலாற்று நிகழ்வைப் பொய்யாக்கத் தீயாய் வேலை செய்கின்றன. அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன.


போத்ரியாவின் தியரிப்படி நம் கண் முன்னே 'உண்மை' மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.