எதிர்மறை விஷயங்களை விலக்கி, நேர்மறை சக்தியைத் தரும் எலுமிச்சைக் கனி!
எலுமிச்சை பழத்தை ‘தேவக்கனி’ என்று சொல்வார்கள். மந்திரம், தந்திரம், தாந்திரீகம் போன்றவற்றிற்கு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் அழுக்குகளை நீக்கும் தன்மையைக் கொண்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சைப் பழத்தின் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
எலுமிச்சைப்பழம் அதை சுற்றியுள்ள எதிர்மறையான விஷயங்களை விலக்கியும், நேர்மறையான விஷயங்களை ஈர்த்தும் தரக்கூடியது என்று சொல்கிறார்கள். அதனால்தான் மாந்திரீகம், கண் திருஷ்டி போன்றவற்றிற்கு இதைப் பயன்படுத்துகிறோம்.
கண் திருஷ்டி விலக எலுமிச்சைப் பழத்தை வாங்கி வலப்பக்கம், இடப்பக்கம் சுற்றி காலில் போட்டு நசுக்குவார்கள். இதுவே, ஒரு வீட்டிற்கு கண் திருஷ்டி ஏற்பட்டால், மிகவும் தெளிவாக இருக்கும் எலுமிச்சைப் பழத்தை சரிபாதியாக வெட்டி ஒரு பாதியில் குங்குமமும், மறுபாதியில் மஞ்சளும் தடவி எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் எதிர்மறையான சக்தியை போக்க குங்குமமும், செல்வ செழிப்பு ஏற்பட மஞ்சளும் தடவி செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை தலைவாசலில் வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்வது நல்லதாகும்.
கடைகளில் கண்ணாடி டம்ளரில் எலுமிச்சைப்பழம் போட்டு வைத்திருப்பதைப் பார்க்கலாம். இப்படிச் செய்யும்போது எலுமிச்சைப்பழம் சற்று மேலே இருந்தால், அந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவே, எலுமிச்சைப்பழம் சற்று உள்ளே சென்று இருந்தால், அன்று ஒரு சாதாரண நாளாக அமையும் என்று பொருள்.
எலுமிச்சைப்பழம் எதிர்மறையான ஆற்றலை தடுக்கக்கூடிய வல்லமை பெற்றது என்று சொல்கிறார்கள். எலுமிச்சைப்பழத்தில் உள்ள விதைகள் செல்வத்தை ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இந்த விதைகளை படிக்கும் குழந்தைகள் சேர்த்து வைப்பதன் மூலம் கல்வியில் ஞானமும், ஆர்வமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நமக்குள் வரக்கூடிய கெட்ட எண்ணங்களை கட்டுப்படுத்தி நல்ல நேர்மறையான விஷயங்களை சிந்திக்க வைக்கும் ஆற்றலை கொண்டது எலுமிச்சைப்பழம்.
கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சைப்பழத்தை ஏதாவது நல்ல காரியத்திற்கு செல்லும்போது உடன் எடுத்து சென்றால், காரியத்தடை ஏற்படாது. அந்த செயல் நல்லபடியாக முடியும் என்று சொல்லப்படுகிறது. சிலர் வீடுகளில் தொடர்ந்து பிரச்னை, சண்டை, காரியத்தடை, உடல் சம்பந்தமான நோய்கள், முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கும்.
இதற்கு 11 எலுமிச்சைப் பழத்தை வாங்கிச் சென்று துர்கை அம்மன் அல்லது காளி கோயிலில் வைத்து பூஜித்து அதில் ஒரு எலுமிச்சையை எடுத்து வலப்பக்கம் மூன்று முறை, இடப்பக்கம் மூன்று முறை சுற்றி சூலத்தில் குத்த வேண்டும். இன்னொரு எலுமிச்சையை எடுத்து வலப்பக்கம் மூன்று முறை, இடப்பக்கம் மூன்று முறை சுற்றி இடது குதிக்காலில் போட்டு மிதிக்க வேண்டும்.
இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது இதுபோன்ற பிரச்னைகள் தீரும். இத்தகைய நேர்மறையான ஆற்றலைக் கொண்ட எலுமிச்சை பழத்தை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாக வாழுங்கள்.
கருத்துகள் இல்லை