பனிப்பகல் - சுரேஷ் தர்மா!!

 


யல் வெளியில் இடையிடையே வெள்ளைக் கொக்குகள் அமர்ந்திருந்த அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கதிர்கள் நிமிர்ந்து நின்றபடி தலையசைத்து வரவேற்பது போல இருந்தது எனக்கு.

எத்தனை நாட்களாயிற்று இப்படி வயல் வரம்பில் நடந்து...

நடந்துவிட்ட பெரும் சோகம் என்னை நிலைகுலைய வைத்து விட்டதே...என்ன செய்ய...

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது, பிள்ளைகள்...பிள்ளைகள் என்று அவர்களுக்காகவே வாழ்கிறோம், ஆனால் பிள்ளைகளோ, தங்களுக்கான வாழ்க்கை, வசதி என்று வருகிற போது, அவர்கள் தங்களின் நலனைப் பற்றித்தான் முதலில் பார்க்கிறார்கள்...

அவருக்கும் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். நால்வருமே புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றனர்.

எப்போதாவது தான் வந்து போவார்கள். பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது, வந்து நிற்கும் போது தஸ்புஸ்சென்று கதைப்பார்கள், ஒன்றும் விளங்காது...

பாவம் கண்மணிக்குத்தான் சரியான கவலை. பேரப்பிள்ளைகள் தமிழ் கதைக்குதுகள் இல்லையே, எப்பவாவது வந்து போகேக்க கூட பக்கத்திலை இருத்திவைச்சு மனம் விட்டு கதைக்க முடியேல்லையே என்று.என்று.

கடந்துபோன நாட்களில் நடந்தவை என் நினைவில் வந்தது.

என் மனைவி நோய்வாய்ப்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருந்து இப்போது இறந்து  விட்டாள்.  பிள்ளைகள் நால்வருமே வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வருத்தமாக இருந்தபோது வரவேயில்லை.

தன் பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லை என்கிற தவிப்புடனேயே அந்த ஆத்மா விடைபெற்று விட்டது. 

மனைவி கண்மணியின் நினைவுகள் எனக்குள் ரீங்காரமிடத் தொடங்கின.

சில நாட்களாகவே கண்மணிக்கு ஒருவித தவிப்பு மனதில் இருந்தது. காரணமற்று அழுவதும்  எங்கோ வெறித்தபடி இருப்பதுமாக கண்மணியைப் பார்க்கையில் எனக்கும் மிகுந்த மனவலி உண்டானதென்னவோ உண்மைதான். ஆனால் இவ்வளவு விரைவில் எங்களுக்கு பிரிவு உண்டாகும் என்று நான் நினைக்கவே இல்லை.

சமீப காலங்களாக கண்மணியையும் கூட்டிக்கொண்டு தான் வயலுக்கு வருவதுண்டு.

என் பின்னாலேயே வந்தபடி, இன்னும் சிறு பெண் போல கேள்விகள் கேட்கும் மனைவியை எனக்கு அவ்வளவு பிடிக்கும். கண்மணிக்கும்  அதேதான்.
நாங்கள் இருவரும் அன்றில் பறவைகளாக வாழ்ந்த காலம் கண் முன்னே வந்தது.

கைத் தடியை தட்டியபடி  வரம்பில் நடந்து கொண்டிருந்த எனக்கு  வாழ்க்கை இப்போது சூனியம் போல இருந்தது.

மனைவி கண்மணி இறந்து இன்றோடு நாற்பது நாட்களாகிறது.  இன்று தான் வெளியே வந்திருக்கிறேன்.  அறுபது வருடங்கள் என்னோடு கூடவே வாழ்ந்த சீவன் என்னை  விட்டுப் போனது  தாங்க முடியாத துயரம் தான். அவள் இல்லாத வெறுமை தணல் போல தகிக்கச்செய்தது மனதை.

அந்தப் பிரிவு தந்த வேதனையில்  எனது இயல்பு வாழ்க்கையே தொலைந்து போயிருந்தது.

காலையில் வயலுக்கு வருவதில்லை, ஆற்றுக் குளியல் இல்லை, சூரியத் தொழுகை இல்லை, நாள் தவறாமல் சாப்பிடும் காலை உணவான பழஞ்சோறு இல்லை,  பத்துமணி மோர் இல்லை, டாண் என்று பன்னிரெண்டு பணிக்குச் சாப்பிடும் பத்தியமான மதிய உணவு இல்லை' நான்கு மணிக்கு குடிக்கிற இஞ்சி கலந்த தேநீர் இல்லை, ஏழு மணி இரவு உணவு இல்லை...

வாழ்க்கைப் பாதை ஏனோ தானோவென்று சென்று கொண்டிருந்த்து.

அரைத்த மீன் கறி என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்...
வாரத்தில் மூன்று நாட்கள் அரைத்த கறியோடு தான் சாப்பாடு. என்னைப் பார்த்துப் பார்த்து கவனிப்பதையே தன்னுடைய முழு உலகமாக வாழ்ந்த என் மனைவியின் பிரிவு ஆற்றமுடியாத பெருந்துயரம்.

பிள்ளைகள் இருக்கும்போது கூட, முதல் கவனிப்பு எனக்குத் தான் இருக்கும். நான் என்றால் கண்மணிக்கு உயிர்...அதே போலத்தான் எனக்கும்.

கண்மணியின் கண்ணில் கண்ணீர் வந்தால் எனக்கு உயிரே போவது போல வலிக்கும். பிள்ளைகள் பிறந்த போது பிரசவ வலியில் தவிர வேறு ஒரு பொழுதும் துடித்து அழுகிற நிலையை நான் அவளுக்கு கொடுக்கவில்லை.

பிள்ளைகள் பிறந்த போதும் கூட, நான்தான் அரைத்துச் சமைத்துக் கொடுப்பது. கூட உதவிக்கு ஒரு வயதான அம்மா வந்தாலும் மற்ற அத்தனை தேவைகளையும் நானே தான் கவனிப்பேன். இறக்கிற நாள் வரை என் கை அணைப்பிலேயே தான். உறங்கியவள்  என் மனைவி.

மனைவி கண்மணி என்னுடைய மாமா மகள் . சிறுவயதிலேயே அரும்பிய காதல் இருவரையும் இறுக்கிப் பிணைத்திருந்தது. எனக்கு இருபது வயதும் கண்மணிக்கு பதினேழு வயதும் இருக்கும் போது இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
எங்களின் திருமணமே, உறவுகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தான்


ஒரு கார்த்திகை மாதம் அது...சில நாட்களாக காய்ச்சல் கண்டு படுத்திருந்த கண்மணியின் தாயார் விடிகாலைப் பொழுதொன்றில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு  இறந்து விட, கதறித்துடித்த கண்மணியை யாராலும் தேற்ற முடியவில்லை.
கண்மணி வீட்டுக்கு ஒரே பிள்ளை, கணவனை இழந்து இளம் விதவையாக நின்ற கண்மணியின் தாயார் ,மகளை வளர்ப்பதை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர்.

தாயின் சிறகுக்குள்ளேயே ஒரு பறவை போல் வாழ்ந்த கண்மணி காதல் ததும்ப  அவ்வப்போது பார்க்கிற பார்வைதான் எனக்கான  நம்பிக்கையாக இருந்தது.

தாயை இழந்ததும் கண்மணி துடித்த துடிப்பையும் அதன் பிறகான நாட்களில் உறவினர்கள் யாராலும் தேற்ற முடியாதபடி கண்மணியின் நிலைமை மோசமானதையும்  பார்த்துவிட்டு , வேறு வழியில்லாமல்  எதுவும் சொல்லாமல் அவளை அழைத்துச் சென்று பதிவுத் திருமணம் செய்துவிட்டேன்.

அவளை என் அருகிலேயே வைத்திருந்து தேற்ற வேண்டியதுஅவசியம் என்று எனக்குத்தோன்றியது. அதுதான் அப்படி ஒரு அவசர முடிவை எடுக்க வைத்தது என்னை.

அப்போதுதான் வாத்தியார் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்த எனக்கு மலையகத்துக்கு வேலை வந்தது ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருக்க, கண்மணியுடன் சந்தோசமாகப்  புறப்பட்டு விட்டேன்.

அதன்பிறகு எல்லா இன்ப துன்பங்களிலும் கூடவே இருந்து நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, பார்த்துப் பார்த்து வளர்த்து ,படிக்க வைத்து, பொருத்தமான வாழ்க்கைத்துணயரை ஏற்படுத்தி திருமணம் செய்து கொடுத்து, முதலில் மூத்த மகனும் பிறகு மற்ற மூவருமாகப் புலம்பெயர்ந்த போது எங்களால்  தடுக்க முடியவில்லை.

பிள்ளைகள் பிரிந்த போது, கண்மணி தாங்க முடியாமல் தவித்ததையும் வெறுமையான வாழ்க்கைப் போராட்டத்தில் அல்லாடியதையும்  குமுறிக் குமுறி எழுத்தையும் நான் மட்டுமே அறிவேன்.


ஒரே மகளான சக்தி மீது கண்மணிக்கு கொள்ளைப் பாசம்.
ஆனால், தன் மகளுக்கு பரீட்சைகள் நடப்பதால் வரமுடியவில்லை என்று கூறி, தாயின் நோயுற்ற நேரத்திற்கு கூட வராத அவர்களின் ஒரே மகள், தாய் இறந்த பிறகு அண்ணனுடன் வந்து சடங்குகளை முடித்துக்கொண்டு  ஒருவாரத்தில் வந்த வழியே திரும்பிய போது நான் எதுவுமே கதைக்கவில்லை.

பணம் பெரிதாகி,அந்தஸ்து அகலமாகிப் போன இந்தக் காலத்தில் பெற்றவர்கள் என்ன...பிள்ளைகள் என்ன...எல்லாம் பணம் படுத்தும் பாடு...

எனக்குள்ளே நினைத்தபடி நடந்து கொண்டிருந்த எனக்கு திடீரென என்ன ஆனதென்றே தெரியவில்லை.

எல்லாமே சுத்துவது போல இருந்தது.  கைத்தடியை ஊன்றி ஊன்றிப் பிடிக்கிறேன்...ஆனால் என்னால் நிற்க முடியவில்லை.

நான் கண் விழித்துப் பார்த்த போது என்னுடைய படுக்கையில் இருந்தேன். அருகில் குமரேசன் அமர்ந்திருந்தான்.

குமரேசன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழும் தாழ்த்தப்பட்ட குலத்தவன். எனது வீட்டு வேலைகள் அத்தனையும் அவன்தான் செய்வது. என்னுடைய வீட்டுக்கு மட்டும் வந்து செல்வார்கள் அவனும் அவனுடைய குடும்பமும்.

அவனை வீட்டுக்கு எடுக்கக்கூடாது என்று உறவுகள் கூச்சல் போட்ட காலத்தில்
"நியாய தர்மம் அவருக்குத் தெரியும் ...அவர் பார்த்துக்கொள்ளுவார்" என்று  ஒரே கதையில் அந்தப் பிரச்சனையை முடித்ததும்  மனைவி கண்மணி தான்.

என்னைப் பொறுத்தவரை குலம் கோத்திரம் எதுவும் இல்லை...
மனிதர்களை மனிதர்கள் மதிக்கிற மாண்பு தான் பெரிதென நினைப்பேன்.

என்னையே பார்த்துக்கொண்டிருந்த குமரேசனிடம்...

"தலை சுத்திப்போட்டுதடா..."என்றேன்.

"ஐயா...வயலுக்கு போன உங்களைக் காணேல்ல எண்டு பாக்க வந்தன்...வரம்பில கண்ட காட்சியில என்ர ஈரக்குலையே நடுங்கிப் போட்டுது. அள்ளித்தூக்கிவந்து உடுப்பு மாத்தி படுக்கவைச்சிட்டு, எங்கட வைத்தியர் தாமு  ஐயாவுக்கும் அறிவிச்சுப்போட்டன்...நல்லகாலம்...நான் வராட்டி...என்ன நிலைமை..." படபடத்தவனுக்கு சின்னச் சிரிப்பை மட்டுமே பதிலாக்கினேன்.

கண்மணி படுக்கையில் கிடந்த போதும் குமரேசனின் மனைவிதான் ஒரு தாயைப்போல பார்த்துக்கொண்டவள்.

அம்மா...அம்மா...என்று கூப்பிட்டபடி கண்மணியின் காலடியில் நிற்கும் குமரேசனின் மனைவி நயனா மீது கண்மணிக்கு சரியான பாசம்.

பெற்ற மகள் அருகில் இல்லாத ஏக்கத்தை நயனா மீது காட்டிய பாசத்தில் தரித்துக் கொண்டவள் என்னுடைய மனைவி.

ரெண்டு, மூண்டு நாளா மனதிலை இருந்த போராட்டத்துக்கு இப்ப முடிவு கிடைச்சிட்டுது...
நான் சம்பாதித்த அசையும் அசையாத என்னுடைய சகல சொத்துக்களையும் குமரேசனுக்கு நான் எழுதின விசயத்தை, பிள்ளைகளிடம் சொன்ன போது,

"ஊரிலை இருக்கிற கண்டவனுக்கு காணியெல்லாம் எழுதியிருக்கிறியள்...உங்களுக்கென்ன விசரோ....நீங்கள் படுக்கையில் கிடந்தாலும் நாங்கள் வரமாட்டம்...?" 
தாயின் மரணத்துக்கு கூட வராத மூத்த மகன் என்னிடம் கேட்டான்.
"விசர் இருந்தது ...இப்ப தெளிஞ்சிட்டுது..."
பேச்சை வளர்க்கவில்லை நான்.

வாழுகிற காலத்தில் கூட இருந்து மகிழ்ச்சி தராத, வந்து வந்து பார்த்தேனும்  மன அமைதி தரவிரும்பாத பிள்ளைகளுக்கு எங்கள் சொத்துகளை அனுபவிக்க என்ன இருக்கிறது...

உண்மையான அன்போடு நேசிக்கிற குமரேசனுக்கு என் சொத்துக்களைக் கொடுப்பதே சரி என்று எனக்கு தோன்றியது.

கடைசிக் காலங்களில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு வேதனைப்படுகிற பெற்றோருக்கு இக்கதை சமர்ப்பணம்.



எழுத்து - சுரேஷ் தர்மா


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt













கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.