காதலின் சங்கீதம் - சுரேஷ் தர்மா!!
பாரீஸ் நகரின் பரபரப்பான பொழுதொன்றில் தடதடத்து ஓடும் புகைவண்டியில் இருக்கை ஒன்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தேன். வேலை முடித்து தினமும் இந்தப் புகைவண்டியில்தான் பயணம் செய்வது வழமை. இரண்டு மணித்தியாலங்கள் செல்லும் போவதற்கு.
பிறகு இரண்டு மணித்தியாலங்கள் செலவுசெய்து வரவேண்டும்.
அருகில் பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் தனது கைத்தொலைபேசியில், காணொளி அழைப்பில் உரையாடிக் கொண்டிருந்தான். தமிழ் இளைஞன் என்பது அவனது தோற்றத்தில் தெரிந்தது. ஆனால், பிரெஞ்சு மொழி சரளமாக அவனது உதடுகளில் நர்த்தனமாடியது.
ஒரு சாய்வில் பார்க்கும் போது, சிறு வயதில் நான் இருந்த மாதிரியான தோற்றத்தில் இருந்தான்.
மஞ்சள் வெள்ளை நிறத்தில் மெல்லிய உடல்வாகு. விரிந்திருந்த காதுகள், கைத்தொலைபேசியைப் பற்றியிருந்த நீளமான விரல்கள்...
நானும் ஓரளவு இதே தோற்றத்தில் தான் இருந்தேன்.
எதிர்முனையில் பதின்நான்கு வயதான பெண் அழைப்பில் இரூந்தாள். இருவரும் சொற்களாலும் முத்தங்களாலும் கதைத்தபடி இருந்தனர்.
இளமைத் துடிப்பான வயது, ஆசைகள் பூக்கிற பருவம்.
அப்பப்போ அந்தச் சிறுவனின் முகத்தில் தெரிந்த குறும்பிலும் குதூகலத்திலும் அவர்கள் புதுக்காதலர்கள் என்பது தெரிந்தது.
அந்த வயதுக்கேயுரிய நளினங்களை இருவருமே வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். அமைதியாக பார்த்தும் பார்க்காததுமாக இருந்தேன். நான் ஒருவன் அருகில் இருப்பதே தெரியாமல் தன் பாட்டில் தன் உலகில் இலயித்திருந்தான் அவன்.
நகர்ந்து ஓடிய புகையிரதம் எனக்குள் ஒரு வித ஒலியை எழுப்பியது. அந்த ஒலி, அடி நெஞ்சில் அமிழ்ந்து கிடந்த என் முதல் காதலின் நினைவுக்குதிரையை எழுப்பிவிட்டது
நான் நினைத்துப் பார்க்க விரும்பாத, நினைக்க அஞ்சுகிற, நினைக்கும் போது உடம்பெங்கும் சுரீலென ஒரு வலி பரவுகிற அந்த நினைப்பை உதறி எறியவும் முடியாமல் தூக்கிச் சுமக்கவும் முடியாமல் நான் படுகிற அவஸ்தை.....
நினைவுக்குதிரையின் பாய்ச்சலில் மெலெழும்பிய நினைவுகள் என்னை அசைத்தபடி அலையாடத் தொடங்கின.
அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். வீட்டில் மூத்தவன் என்பதுடன் அம்மாவின் உறவுகள், அப்பாவின் உறவுகள் அனைவருக்குமே நான் செல்லப்பிள்ளை.
சிவந்த நிறத்தில் அப்புவைப் போல கண் மற்றும் உருவ ஜாடையில் பிறந்ததாலும் அப்பப்பாவின் கூர்மூக்கும் அவரைப்போன்ற அழுத்தமான போக்கு எனக்கும் அப்படியே இருந்ததாலும் இரண்டு வீட்டுக்குமே நான் என்றால் காணும்.
இந்த அழகான உறவுப் பிணைப்புக்குள் நானும் எந்தக் கவலைகளும் அற்றவனாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
என் சகோதரர்களுக்கு கூட கிடைக்காத ராஜ வாழ்வு எனக்கு வாய்த்திருந்தது. அந்த வாழ்வில் நான் திழைத்திருந்த போது நான் சந்தித்த கன்னிகை தான் அவள்...
அதுதான் என் மனதில் காதல் அரும்பிய பருவம்.
அப்போது நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தோம். விடுமுறை நேரங்களில் ஊருக்குப் போய் வருவது வழக்கம்.
ஒருமுறை நான் ஊருக்குச் சென்றபோது, என்னுடைய கிளிக்கூட்டுக்குள் யாரோ ஒரு சின்னப்பெண் உணவு போடுவதைக் கண்டதும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"எவா...அவா..." என்பது போன்ற ஒரு கேள்வித்தொனிதான் என் உள்ளத்திலும் தோன்றியது.
என் கோபத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை...
என்னையும் ஆச்சியையும் தவிர கிளிக்கூட்டுக்குள் யாரும் கை வைக்கக்கூடாது என்பது என்னுடைய கட்டளை.
மச்சான்மார், மச்சாள்மாரையே அதற்கு நான் அனுமதிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை, எனக்கானதை நான் இலேசில் யாருக்கும் விட்டுக்கொடுத்துவிட மாட்டேன்.
நான் படலையடியில் போகும்போதே, அந்தப்பெண் வாளைப்பழங்களைக் கிளிக்கூட்டுக்குள் வைப்பதைக் கண்டுவிட்டேன்.
"ஏய்..." வாசலில் நின்றபடியே பெருங்குரலில் கத்தினேன்.
திடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண், அச்சத்தில் கையிலிருந்த கிண்ணத்தைக் கீழே போட்டுவிட்டாள்.
நான் விரைந்து ஓடிச்செல்லவும் அவள் பயத்தில் கிளிக்கூட்டை அடைக்காமலே ஓடி விட்டாள். நல்ல வேளை, சாப்பிடுவதில் முனைந்திருந்த கிளிகள் வெளியே பறக்கவில்லை.
நான் அவசரமாக கிளிக்கூட்டை அடைத்துவிட்டு, தோளில் தொங்கிய பையோடு உள்ளே விரைந்தேன்.
"ஆச்சீ...ஆச்சீ... "எனக் கூப்பாடு போட, என்னவோ ஏதோவெனப் பயந்து வெளியே வந்த ஆச்சி, என்னைக் கண்டதும்
"என்ன மோனை, இப்பவே ராசா வாறாய்...உன்ரை குரல் மாதிரிக்கிடக்கு என்று யோசித்துக்கொண்டுதான் வெளிய வந்தனான்...என்ர குஞ்சு ஏன் இப்ப இப்பிடிச் சத்தம் போடுறார்..."என்றபடி அன்பு ததும்ப கேட்ட போது, ஆச்சியிடம் கோபப்பட முடியவில்லை என்னால்.
"ஆரது...என்ரை கிளிக்கூட்டைத் திறந்து சாப்பாடு போட்டது...?"
குரலைச் சற்று மாற்றியபடி கேட்டேன்.
"ஆர்...அட...எங்கட லீலாவின்ரை மகள் அது...தெரியும்தானே...அம்மாவின்ர சினேகிதி லீலா அன்ரி....அவவின்ரை மகள்தான்..இப்ப வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போனவா..."
ஆச்சி சொல்லி முடிக்க முதல்,
"என்ரை கிளிக்கூட்டடிக்கு உங்களைத்தவிர வேற ஆரும் போகக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறன் தானே...பிறகேன் விட்டனீங்கள்..." குறைந்த கோபத்தில் வார்த்தைகளை வெளிவிட்டேன்....
"அது ராசா....அவவுக்கும் கிளியெண்டால் காணும்...பாவம்...சின்னப்பிள்ளை..." ஆச்சி அவளுக்காகப் பரிந்து பேசியது எனக்குச் சிறிதும் பிடிக்கவேயில்லை.
"அதுக்காக என்ரை கிளிக்கூட்டை...."
ஆச்சியிடம் கோபத்தைக் குறைத்த தொனியில் கூறிவிட்டு நிமிர்ந்தேன்.
"சரிசரி...பையை வைச்சிட்டு வாங்கோ..." ஆச்சி அன்பொழுக கூறியதும் பேசாமல் உள்ளே சென்று நான் எப்போதும் தங்கும் அறையில் இருந்த மேசையில் பையை வைத்தேன்.
அப்போதெல்லாம் கிடுகு அல்லது புல்லால் வேய்ந்த வீடுகள்தான் இருந்தன. அலுமாரிக்குப் பதிலாக அறைகளில் பறண்கள் இருந்தன. தடியால் அடுக்கப்பட்ட மேசைகள்தான் அநேக வீடுகளில் இருந்தன.
அப்பு, என்னுடைய அறையில் மாத்திரம் மேசை கதிரை எல்லாம் வாங்கிப் போட்டிருந்தார். நான் படிப்பதற்கு சகல வசதிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்திருந்த ஏற்பாடு அது.
வெளியே வந்த போது, அந்தப் பெண்ணும் முற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாமல் சமையலறைக்குப்போய் ஆச்சியின் அருகில் நின்றுகொண்டே, வெளியே பார்த்தேன்.
அவளும் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். உடம்பெங்கும் ஏதோ ஒன்று குறுகுறுவென்று ஊர்வது போல உணர்ந்தேன். இதயக்கூட்டுக்குள் சில்லிடுகின்ற ஒரு உணர்வு.
அவளுடைய நெற்றியில் சுருண்டு விழுந்த அந்த சிறு சுருள் முடி அவளுக்கு அதிக அழகைக் கொடுத்தது.
வெண்ணிற தேகமும் சின்ன விழிகளுமாக அவளைப் பார்க்கப் பார்க்கப் பிடித்திருந்தது எனக்கு.
வாலிபப் பருவத்தில் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த நாள் அது.
இரண்டு நாட்கள் அங்கு நின்ற போதும் அவளோடு ஒன்றும் கதைக்கவில்லை...ஆனால் பார்வைகள் பல ஆயிரம் கதைகளைப் பேசியது இருவருக்கும்.
அவளுககும் என்னுடைய வயதுதான் என்பதை, ஆச்சி சொல்லித் தெரிந்து கொண்டேன்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குப் போன பின்பும் நினைவுகள் எல்லாம் அவளாகவே இருந்தாள்.
நாட்கள் நகரநகர 'நான் அவளை நேசிக்கிறேன்' என்கிற உண்மையை உணர்ந்து கொண்டேன். காகிதங்கள் ஒருதலைக்காதலுக்கான கவிதைகளால் நிறைந்தன.
அதே உணர்வு அவளுக்கும் இருக்கிறதா என்பதை அவளிடமிருந்து அறிய வேண்டும் போல ஆவலாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
நாட்கள் கடந்தோட, அவர்களும் நாங்கள் இருந்த இடத்துக்கே வந்து விட்டனர்.
அவளும் நானும் ஒரே கல்வி நிலையத்தில் கல்வி கற்கிற சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவளுடைய அம்மா, 'எந்தக் கல்வி நிலையத்தில் சேர்க்கலாம்' என என் அம்மாவுடன் ஆலோசிக்கும் போது, நான் உடனே, நான் படிக்கிற கல்வி நிலையத்தைச் சொல்லி விட்டேன்.
அவரும் மகிழ்ச்சியோடு, என்னையே அவளுக்கு காவலாக இருக்கச் சொல்லிவிட்டார்.
இதற்கிடையில் கிளியைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை, 'கூண்டுக்கிளி' என்ற தலைப்பில் அவள் எழுதிய கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்ட பிறகு கூட்டைத் திறந்து கிளியைப் பறக்கவிட்டுவிட்டேன்.
அவளும் ஆச்சி வீட்டுக்குத் தன் தாயுடன் வந்த ஒரு நாளில்தான் அதைச் செய்தேன்.
அந்தக் கிளிகள் வெளியே பறப்பதைப் பார்த்து அவள் அடைந்த ஆனந்தம் ..
அந்தக் கணத்தில் அவள் என்னைப் பார்த்த பார்வையில் என்ன இருந்தது...
'அன்பா...காதலா...நேசமா... ' அத்தனையும் சேர்ந்த கலவையா...
எனக்குத் தெரியவில்லை...மயங்கிப்போய் நின்றுகொண்டிருந்தேன்...
அதன் பிறகு, மூன்று வருடங்கள், எங்கள் காதல், பார்வையிலும் சின்னச்சின்ன தொடுதல்களிலும் வளர்ந்து கொண்டிருந்தது.
காலம் எனக்கு பலவிதமான பாதைகளைக் காட்ட, நானும் அவற்றினூடாகப் பயணித்து புவம்பெயர வேண்டிய சூழலில் நின்றேன்.
அவளுடைய நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இனிய கற்பனைகளோடு விமானம் ஏறிய போது அவளுடனான காதல் கனவாகக் கலைந்துபோகும் என்று நான் நினைக்கவேயில்லை.
புலம்பெயர் நாட்டில் இருந்து அவளுக்காக பல கடிதங்களை எழுதிக் குவித்தேன்.
ஆனால் எதற்குமே பதில் வரவில்லை.
'ஏன்தான் பதில் போடாமல் இருக்கிறாளோ ?' என்கிற கேள்வி எனக்குள் இருந்தாலும்
'எனக்காகவே காத்திருப்பாள்' என்கிற நம்பிக்கை அழுத்தமாக இருந்தது.
அவளுடைய நினைவுகளைக் கவிதைகளாக வடித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன்.
எங்கள் நேசம் உறவுகளுக்கும் ஓரளவு தெரிந்தே இருந்தது.
ஆனால், திடீரென்று ஒருநாள் அவளுடைய திருமணச் செய்தி இடி போல வந்து சேர்ந்தது எனக்கு.
அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை. அதுவே என்னைப் பெரும் விபத்து ஒன்றில் தள்ளிவிட்டது.
சில நாட்கள் சுய நினைவற்றும், சில மாதங்கள் படுக்கையிலுமாக கழிந்தன நாட்கள்.
ஒருவாறாக நான் மீண்டு வந்தது மறுபிறப்புத்தான். அம்மாவின் வேண்டுதலும் நேர்த்தியும் தான் மீண்டும் நடமாட வைத்தது. அதன்பிறகு அவளும் புலம்பெயர்ந்திருக்கிறாள் எனவும் அவளுடைய தொடர்பு இலக்கமும் கிடைத்த போது, அவளுக்கு அழைப்பு எடுத்து கண்டபடி பேசவேண்டும் போல இருந்தது.
ஆனால், அது அவளுக்கும் நல்லதில்லை, எனக்கும் நல்லதில்லை என்பதால் அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டேன்.
அப்படியே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது...எப்போதாவது அவளுடைய நினைவுகள் எனக்குள் மேலெழாமல் இல்லை...
என்னுடைய தோற்றுப்போன காதலின் வலி, பல்வேறு கவிதைகளைப் பிரசவித்தது, அந்தக் கவிதைகளில் என் காதலும் அதன் ஏமாற்றமும் உலவியபடிதான் இருந்தன.
ஒரு இடத்தில் புகையிரதம் நின்றபோது, நினைவுகள் அறுபட, பக்கத்து இருக்கைச் சிறுவனைப் பார்த்தேன். அவன் தன்னுடைய காதலியிடம் இருந்து விடைமெற்றுக் கொண்டிருந்தான்.
இறங்க ஆயத்தமான சிறுவனை வரவேற்பதற்காகவோ அழைத்துச்செல்வதற்காகவோ வந்து நின்ற பெண்ணைக் கண்ட நொடியில் என்னுள் மிகப்பெரிய அதிர்வு.
அது....அது...அவளேதான்...
அந்தச் சிறுவனின் அம்மா என்ற அழைப்பில் அவளுடைய முகத்தில் பரவிப்படர்ந்த தாயன்பில் நானும் நேகிழ்ந்துபோய் பார்த்தேன்.
இறங்கிச் சென்று கதைக்க வேண்டும் போலவும் இருந்தது.
ஆனால், ஒரு பக்கம் 'அது சரியில்லை' என்றும் தோன்றியது.
இருதலைக்கொள்ளி எறும்பாக நான் தவித்துக் கொண்டிருக்க, அலைபேசி ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தேன், மனைவி நித்திலாதான்,
'வரும் போது பாடசாலையில் இருந்து மகளையும் அழைத்து வருமாறு' சொல்லவும் சம்மதம் சொல்லிவிட்டு, மகள் சந்தனாவின் நினைவில் முகத்தில் ஒருவித கனிவும் மலர்ச்சியுமாக பாடசாலைக்குச் செல்லும் புகையிரதத்தில் மாறி ஏறினேன்...
என் மகள் சந்தனா தான் என் முழு உலகமும். என் மகளுக்கும் நான் என்றால் காணும்.
'சந்தனா...' அதுதான் அவளுடைய பெயரும்.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை