பாம்பின் கால் ...



ஊரில் தேர்த்திருவிழா, வேற்றூருக்கு மணமுடித்துப் போன முன்னாள் தோழிகள் எல்லாம் திருவிழாவுக்கு வருகை தருவது வாடிக்கை. அப்படி ஒரு தோழியின் கடைசித் தங்கைக்கு நானென்றால் பிரியம், அவளுக்கு நான் சிசிலி என்று பெயர் வைத்திருந்தேன்.

அன்றெல்லாம் அவள் சிறுமியாக இருந்தாள். வளர்ந்த பிறகும் அந்தப் பிரியம் அப்படியே இருக்கவும் என்னிடம் பேச ஆசைப்படுவாள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் அவள் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றியதன் பொருட்டு பள்ளியை விளம்பரப்படுத்தி மாணவ சேர்க்கைக்காக வீடுவீடாக கேன்வாசிங் செய்துகொண்டிருந்தாள். என் வீட்டிற்கும் வந்தவள் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்சி, இவர்கள் வளர்ந்ததும் எங்கள் பள்ளியில் தான் சேர்ப்பிக்க வேண்டும் என்று உறுதிகள் வாங்கி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றாள். அவள் சென்றபிறகு மனைவி சொன்னார், வாழ்க்கைல நீ இவகிட்ட இனி பேசவே கூடாது, "ஏனாம்?" அவ உன்னைப் பார்த்த பார்வை சரியில்ல, இந்தப் பயல(மகன்) தூக்கி வச்சு முத்தம் கொடுத்த விதமும் மகனுக்குக் கொடுத்த மாதிரி தெரியல. - "ஐயோ பாவம் அதுவே ஒரு பச்சக்குழந்த" - எது இருபத்தஞ்சு வயசு குமரி உனக்கு குழந்தையா? பேசாதன்னா பேசாத அவ்வளோதான். / சும்மாவே அவளோடு பேசுவதும் சந்திப்பதும் அரிதுதான் என்பதால் சரி போ பேசவில்லை என்று வாக்கு கொடுத்தாயிற்று. 

தேர் நிலைக்கு சென்று அடைந்த பிறகு ஊரெல்லாம் அலைந்த  அம்மனை துயில் கொள்ள வைக்கும் நிகழ்வும், இரவு உணவும் வழங்கப்படும். அதைக் கண்டு உணவுப் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிடுவதோடு விழா நிறைவடையும், அதற்காக குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருமருங்கிலும் திருவிழாக் கடைகள் விதம் விதமாக தின்பண்டங்கள் விற்றுக்கொண்டிருக்க காலிப்ளவர் பொறித்தது ஆளுக்கு ஒரு கிண்ணம் வாங்கி கொரித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம், எங்களை முந்திச் செல்வதும் பின் பிந்தி வருவதுமாக ஒரு பெண்ணும் அவள் மகளுடன் நடக்கத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, யாரடா எனப் பார்த்தால் சிசிலி.

ஐந்தாறு தேர்த்திருவிழாக்கள் கடந்து இப்போதுதான் ஊருக்கு வர அவளுக்கு வாய்ப்பு கிடைத்திருகிறது போலும். வேகமாக நடந்து என்னைக் கடந்து போகும் போதெல்லாம் அவள் நடையின் வேகம் குறைந்து எனக்கு இணையாக நடந்து வந்தாள். நானாகப் பேசுவேன், அவள் குழந்தையை விசாரிப்பேன் என நினைத்திருப்பாள். இவளிடம் இப்போது பேசினால் வீட்டில் வரப்போகும் பிரச்சனைகளை எண்ணி எதற்கு வம்பு என அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை, அவளைக் கண்டுகொள்ளவும் இல்லை.

கோவிலில் மனைவியும் பிள்ளைகளும் சாமிபார்க்கப் போக, நமக்கு உணவே பிரதாமென பிரசாதச்சாப்பாடு வாங்க வரிசையில் நிற்கப் போய்விட்டேன். வாங்கி வந்து நால்வரும் அமர்ந்திருந்தோம். மனைவியே ஆரம்பித்தார் "நீ போயி அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிட்டு வர்றியா?" எந்த பொண்ணு? "அதான் கூடக்கூட நடந்து வந்தாளே, எல்லாத்தையும் பார்க்கத்தான் செஞ்சோம்" -உனக்குத்தான் பிடிக்காதே! அவ அப்பவே கிளம்பி போயிருப்பா. - "இல்ல கோவில் வாசல்லதான் நிப்பா, எனக்குத் தெரியும், அவ உன்னைப் பார்க்காம பேசாம போக மாட்டா. நீ போயி பார்த்துட்டு வா. பாவம் அவ." -மனைவி சொல்லே மந்திரம் என சொல்லிக் கொண்டு எழுந்தேன் - "நடிக்காதிங்கடா" 

கோவில் வாசலில் ஒரு பலூன் கடையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளுக்காக வந்து நிற்பதை அவள் அறிந்துகொண்டாள் என்பதை உடல்மொழியிலும் பாவனையிலும் என் பக்கம் திரும்பாமலே வெளிப்படுத்தினாள். அருகில் நிற்கும் மகளிடம் அவசியமே இன்றி "சொன்னா கேளு வெண்மதி." என்று கத்திக் கொண்டிருந்தாள்" சற்று நேரம் என் கண்பட நின்றுவிட்டு தாயும் மகளும் ஆளுக்கொரு பலூனைப் பிடித்தபடி அவ்விடம் விட்டு நடக்கத் தொடங்கினார்கள்.

வந்ததும் மனைவி கேட்டார். "அவ உன்னைய திரும்பியே பார்த்து இருக்க மாட்டாளே?" 

ஆமா. எப்படி? 

"எனக்குத் தெரியும்"



பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.