லண்டனில் அந்த மலசலகூடத்துக்குள் கண்ட அந்த காட்சி!
இங்கு மனிதர்கள் மலசலகூடத்தை அந்த வேலைக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதை அன்று நேரில் கண்டபோது பெருங் கவலையும் பலத்த அவமானமும் தான் என்னிடம் தொற்றிக்கொண்டது. அதிலும் அந்த வேலையை செய்தது அல்லது செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது ஒரு ஈழத்து தமிழர் என்பது மேற்குறித்த அந்த கவலையையும் அவமானத்தையும் இரட்டிப்பாக்கியிருந்தது.
போனா போன வேலையை முடிச்சிட்டு விரைவாக
வெளியே நான் வந்திருக்க வேணும். அப்படி ஒரு உரையாடலை அந்த மனிதருடன் நானே தொடங்கியிருக்கக் கூடாது.
தமிழர் மரபுத் திங்கள், இப்போதெல்லாம் மரணத் திங்கள் போலாகி பெப்ரவரி மாத நடுப்பகுதிவரை நீண்டு உருப்பெருத்து நிகழத் தொடங்கியிருக்கிறது. கடந்த வார இறுதியில் அப்படி ஒரு மரபுத் திங்கள் நிகழ்வுக்கு சென்றிருந்தேன். எனது வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவான தூரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் அந்த நிகழ்வு நடந்ததாலும் பயணத்தின் இடையே வேறெங்கும் எனது வாகனத்தை இடை நிறுத்திக் கொள்ளாததாலும் மண்டபத்தை சென்றடைந்ததும் உடனடியாக சிறுநீர் கழிக்க நான் அங்கிருந்த அந்த மலசககூடத்தினுள் செல்லவேண்டியிருந்தது.
அங்குதான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அது தான் அந்தச் சம்பவத்தின் நிகழிடமாகவும் இருந்தது.
தனது உள்ளாடைக்கு மேல் ஒரு சின்னக் காற்சட்டையைப் போட்டுக்கொண்டு தமிழரின் பாரம்பரிய உடை என்று இப்போது நாம் சொல்லிக்கொள்ளும் வேட்டி ஒன்றை தனது இடுப்பில் கட்டி முடிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார் அவர். ஒட்டி ஓட்டி இழுக்கும் போது வந்த அந்த சத்தத்தை வைத்து அவர் கையாண்டுகொண்டிருந்தது, YouTube தளத்தின் Short என்ற வடிவத்தைப் போன்று
“ஒட்டிக்கோ கட்டிக்கோ” என்ற எமது உடைகளின் ஆண் பாரம்பரியத்தின் சுருங்கிய வடிவம் என்று ஊகித்துக் கொண்டேன்.
நின்றபடியே சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கான கழிப்பறையின் அந்தப் பகுதிக்கு மிக அருகில் நின்று ஒட்டுவதும் கழற்றுவதும் மீளவும் ஒட்டி ஒட்டி கழற்றுவதுமாக அவர் முயற்சி விக்கிரமாதித்தனைப் போல தொடர்ந்துகொண்டேயிருந்தது. தரையில் அங்கும் இங்கும் தண்ணீரோ அல்லது சிறுநீரோ பட்டு சற்று ஈரலிப்பாய் இருந்த அந்த இடங்களை வேட்டியின் ஓரங்கள் தடவிக்கொடுத்தபடி இருந்ததை நான் அவதானித்தேன் என்பதை அவர் அவதானித்ததாய் தெரியவில்லை. எப்படியாவது சரியாக இடுப்பில் ஒட்டிக் கட்டி முடித்துவிடவேண்டும் என்பது மட்டுமே
அவருடைய அப்போதைய குறிக்கோளாய் இருந்துருக்கும் போல. எனக்கோ bladder முழுதாக நிரம்பி வெளியேற்றுவதற்கான தயார் நிலையில் இருந்தது.
“என்னண்ணன் இதுக்குள்ள நிண்டு வேட்டியோட போராட்டம் நடத்துறியள்” என்று சிரித்தபடியே கேட்டேன் நான்.
“ஓம் தம்பி. குமரிக் கண்டம் எண்ட பெரியதேசம்
முழுதையும் ஆண்ட இனம் நாங்கள் வேட்டியோட நிக்காட்டில் மரியாதை இல்லை” என்று முழங்கினார் அவர்.
“குமரிக் கண்டம் எண்ட பெரும் தேசத்தை முழுசாய் ஆண்ட இனத்துக்கு கடையில வேட்டி கட்ட பெரிய பிரித்தானியாவின்ர கக்கூஸ் தானே கிடைச்சிருக்கு” என்ற எனக்கு வாயெல்லாம் பல்லாக ஒரு பெரும் சிரிப்பை மட்டும் கொடுத்தார் அவர்.
சரியான இடத்துக்கு வந்து சேர்ந்த பின்னரும் இவன் ஏன் என்னை விடுதலை செய்கிறானில்லை என்பதைப் போல,
அதுவரை பொறுமையாக Bladder இற்குள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த என் சிறு நீர் என் அடிவயிற்றில் சிறிது சிறிதாக வலியைத் தரத் ரொடங்கியிருந்தது. வேறு வழி இல்லாமல், போன விடயத்தை முடிக்காமலே நான்
அந்த இடத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டேன்.
எங்கள் பாரம்பரிய உடைக்கு அங்கு குறைந்தபட்சம் என்னால் செய்ய முடிந்த கெளரவம், அது கட்டி முடிக்கப்படும் வரை அல்லது ஒட்டி முடிக்கப்படும் வரை அந்த இடத்தில் சிறுநீர் கழிக்காமல் தவிர்ப்பது மட்டும்தான்.
கலாசாரத்தைக் காப்பாற்ற கலை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும் ஏற்பாட்டாளர்கள், பாரம்பரிய உடைகளின் கெளரவத்தைக் காப்பாற்ற கக்கூசுக்கு வெளியே ஒரு உடைமாற்றும் இடத்தை கலைஞர்களுக்கும், காரில்லாமல் மண்டபம் வந்து உடைமாற்றும் வழிப்போக்கர்களுக்கும் அமைத்துத் தருவார்களா என்பது இங்கு அவசியமான ஒரு பதிவு. ஆனால் எவ்வளவு நேரம் அந்த உபாதையுடன் அந்த மண்டபத்தில் சுற்றித் திரிந்தேன் என்பது இங்கு அவசியமற்தொரு பதிவு.
-சாம் பிரதீபன்-
கருத்துகள் இல்லை