கவிதை - சாம் பிரதீபன்!!
ஒரு முறை எங்களை மன்னித்து நீங்கள்
மறுபடி உறங்குங்கள்!
திரும்பும் இடமெல்லாம்
பாடிக்கொண்டேயிருக்கிறார்கள்
யாரோ பாடிய
சினிமாச் சங்கீதங்களை.
சிந்தனைக் கிணற்றில்
ஆழம் குறைகின்றபோது
மரபென்ற பொய் சொல்லி
எல்லோரும் எடுக்கிறார்கள்
யாரோ தூக்கி சுமந்த
பறவைக் காவடியை.
சினிமாவைப் பாடுதல் என்பதற்கும்
சிறுகச் சிறுகப் படைத்தல் என்பதற்குமான
இடைவெளி நீட்சியில்
தும்மித் தொலைகிறது
ரசனைப் பட்சி.
வெகுஜன மரபை
வெள்ளைக்காரனுக்கு காட்டி ஓய்வதும்
பாரம்பரியத்தை
பாராளுமன்றச் சுவர்களுக்குள்
பொங்கித் தீர்த்துவிடுவதும்
பட்டினத்தார் பாடலின்
கடைசிச் சேர்க்கை என்ற
அரசியல் சேடம்
இப்போதெல்லாம்
இழுக்கத் தொடங்கியிருக்கின்றது.
எங்கே எங்கே
விழிகளை ஒரு தரம் இங்கே திறவுங்கள்
ஒரு முறை எங்களை மன்னித்து நீங்கள்
மறுபடி உறங்குங்கள்.
-சாம் பிரதீபன்-
கருத்துகள் இல்லை