குமாரபுரம் படுகொலை!
11.02.1996 அன்று மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் நுழைந்த சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவத்தினர் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
26.07.2016 அன்று எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு "சிறிலங்கன் நீதி" நிலைநாட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை