தமிழர் தேசத்தை புறக்கணித்த அனுர அரசின் வரவு செலவுத்திட்டத்தில் எதிர்த்து வாக்களித்தார்!

 


தமிழர் தேசத்தை புறக்கணித்த அனுர அரசின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP


இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற 2025 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எதிர்த்து வாக்களிப்பதற்கான நியாயங்களை வலியுறுத்தி ஆற்றிய உரை  : -


கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே!

நான் அரசாங்கத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்பினேன். அதற்குக் காரணம், கடந்த 77 ஆண்டுகளாக இந்த நாட்டை இரண்டு கட்சிகளே மாறிமாறி ஆட்சிசெய்திருந்தன என்பது உங்களுக்குத் தெரியும். பெயர்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அல்லது தோரணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளே இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளன. எனவே அந்த 77 ஆண்டுகால வரலாற்றில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பது தீவிரமான விலகல் ஆகும்.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்கள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த போது, அதனை கொள்கை அறிக்கை எனவும் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி பற்றி விமர்சனங்கள் உள்ளபோதும் அது சில கொள்கைகளைக் கொண்டுள்ளது. 

இனப்பிரச்சினையை அவர்கள் பார்க்கும் விதம் மற்றும் தமிழ் தேசிய நிலைப்பாடு தொடர்பான அவர்களின்  நிலைப்பாட்டுடன் நாம் உடன்படாமல் இருப்பினும்,  தமது ஆட்சியில் இனவாதத்தை முற்றாக ஒழிப்போம் என்று கூறியுள்ளனர். இன மோதலின் முதுகெலும்பும் இந்த நாட்டிற்கு சாபமாக இருந்ததும் இனவாதமேயாகும். 

இனவாதம் என்பது ஒரு பெரும்பான்மை சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலைக் குறிக்கிறது.. எனவே, இவர்களின் இந்த கருத்தியிலின் பின்னணியில்தான் நானும் எனது கட்சியினரும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு புதிய தொடக்கத்தை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்த்தோம். இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்கும் போது, நாம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளில் கணிசமான முன்னேற்றகரமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பது தான் முக்கிய விடயமாக உள்ளது. இதனை அறிவதற்கு இது ஒன்றும் ரொக்கட் அறிவியல் அல்ல. 

இந்த வகையில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம் என்பதால் தான் உண்மையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்பாத்திருந்தோம் என்று குறிப்பிட்டேன். ஏனெனில், இந்த அரசாங்கத்தில் இடதுசாரி கொள்கையுடைய ஜே.வி.பி கட்சி இருப்பதால், வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளால் அதிகம் கவரப்படாது என்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் மட்டில் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கக்கூடும் என்றும் எதிர்பார்த்தோம். இடதுசாரி சிந்தனையின் முக்கிய அங்கமும் இதுதான். இதுவே இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் நான் தேடிய முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.

நிதியமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி  அவர்கள்  30 ஆண்டுகளுக்கும் மேலான யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் வடக்கு கிழக்கில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முன்பு ஓரிரு முறை குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் இந்த வரவு செலவு பதீட்டில்  எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்குக்கான குறிப்பிடக்கூடிய விதமாக எதுவும் இல்லை. 30 வருடங்களாக நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முன்னேற்றகரமான விடயங்கள் எதுவும் இல்லை. ஜனாதிபதி அவர்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு என்று  சில திட்டங்களை குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக கிராமிய மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக வடக்கிற்கு 5 பில்லியன் ஒதுக்குவதாக அவர் கூறினார். அதாவது 5,000 மில்லியன் ரூபாவாகும். 

அவர் சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது , நானும் கலந்துகொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணத்தின் வீதி அபிவிருத்தி, கிராமிய வீதி அபிவிருத்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் ? என மாகாண சபையின் கீழ் உள்ள குறிப்பிட்ட திணைக்களத்திடம் கேட்டிருந்தார். மற்றும் குறிப்பிட்ட திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரியொருவர், தங்களுக்கு 1,300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை இந்த வருடத்திற்கு செலவிட முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.


இதன்போது, சரி அந்தப் பணத்தைச் செலவழிக்கலாம் என்றால், வட மாகாணத்துக்கு 5000 மில்லியன் அதாவது 5 பில்லியன் ஒதுக்குகிறேன் என்றார். இது ஒரு உதாரணமாகும். ஏனென்றால், 5,000 மில்லியனை வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் சமமாக ஒதுக்குவீர்களாயின், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 1,000 மில்லியனே கிடைக்கும்.  ஆனால் கடந்த பாதீட்டில் யாழ்ப்பாணத்திற்கு 1,300 ஒதுக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணம் சாலைகள் என்று வரும்போது ஒப்பீட்டளவில் பெரியவையாகும். வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்கும் உண்மையில் அதிக நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன. ஜனாதிபதியின்  இந்த 5 பில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் பார்ப்போமானால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 1,000 மில்லியன் கிடைக்கும். அப்படியாயின் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 300 மில்லியன் குறைவாகும். ஆனால் நீங்கள் 5 பில்லியன் வழங்குவதாக அறிக்கையில் கூறுவது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் விரிவாக ஆராய்வோமானால் பாரிய முரண்பாடு உள்ளது. 

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு 100 மில்லியன் ஒதுக்குவது என்பது அவர் குறிப்பிட்ட மற்றுமொரு விடயமாகும். நல்லது. இதனை நாம் வரவேற்கிறோம்.. ஆனால், கொழும்பில் ஒரு வீட்டைக் கட்ட முயற்சிக்கும் செல்வந்தர் ஒருவரால் தனது வீட்டை சுமார் 40 அல்லது 50 மில்லியனுக்கு குறைவாக கட்டி முடிக்க முடியாத நிலை காணப்படும் போது, இன்னும் அதன் அசல் சிறப்பிற்கு மீட்டெடுக்கப்படாமலிருக்கும் ஒரு முழு நூலகத்திற்கும் 100 மில்லியன்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். கடந்த ஒவ்வொரு வரவு செலவுத் திட்டங்களின் போதும், வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் வடகிழக்குக்கு விசேட ஒதுக்கீடு தேவை என நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். அக்காலத்திலேயே நாங்கள் பேசினோம். 2009க்குப் பின்னர், வடகிழக்கைப் போரால் பாதிக்கப்பட்ட பகுதி என்று தொடர்ச்சியாக அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று 2020ல் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்துகூறி வருகிறோம். 

முந்தைய அரசாங்கங்கள் நாங்கள் கூறியதை கேட்கவில்லை. இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பியின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த அரசாங்கம் உண்மையில் அந்தக் கருத்தை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அரசாங்கமும் அதை கருத்தில் எடுக்கவில்லை.

உதாரணமாக - இந்த பாதீட்டில் கச்சேரிகளுக்கான ஒதுக்கீடுகள் இணைப்புகளில் உள்ளன. வடக்கு கிழக்கு கச்சேரிகளுக்கான மூலதனச் செலவீனமாக, யாழ்ப்பாணத்திற்கு 187 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னாருக்கு 189 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா 100 மில்லியன், முல்லைத்தீவு 126 மில்லியன், கிளிநொச்சி 179 மில்லியன், இவை மிகவும் நல்ல ஒதுக்கீடு போன்று புள்ளிவிரங்களில் குறிப்பிடுவீர்கள். குறிப்பாக இவை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்பதால், நாட்டின் மற்ற பகுதிகளை விட மிகவும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த புள்ளிவிவரங்களை அம்பந்தோட்டையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  யாழ்ப்பாணத்திற்கு 187 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அம்பாந்தோட்டைக்கு 548 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத்தறை 473 மில்லியன். காலி 545 மில்லியன். கம்பஹா 432 மில்லியன். களுத்துறை 516 மில்லியன். கொழும்பு 452 மில்லியன். இவை மிகவும் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த பகுதிகளுமாகும். குருநாகல் 256 மில்லியன். அனுராதபுரம் 309 மில்லியன். இரத்னபுரி 566 மில்லியன். கேகாலை 540 மில்லியனுமாகும்.

ஆனால் வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கு 200 மில்லியனுக்கும் மேல் போகவில்லை. 200 மில்லியனுக்கும் கீழேயே உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு செய்திருக்கும் ஒதுக்கீடுகளில் நிச்சயமாக தவறு இருக்கிறது. இத்தகைய உங்களின் நடவடிக்கைகளால் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லவரும் செய்திதான் என்ன?

மேலும், நிதியமைச்சருமான ஜனாதிபதி தனது உரையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும் உண்மையில் அது முற்றிலும் நேர்மாறானதாகவே உள்ளது. 

கல்வித்துறை வாரியாகப் பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சராக இருப்பதால் கல்வி பற்றிய நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வியை நவீனமயமாக்கும் திட்டம், பாலர் பள்ளி ஊட்டச்சத்து திட்டங்கள், மாணவர் உதவித்தொகை, விளையாட்டு வளர்ச்சி, பள்ளித் திட்டங்கள் இவை அனைத்தும் அற்புதமானவை. இவை அனைத்துக்கும் எங்களின் ஆதரவும் இருக்கும். ஆனால், கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமரை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது யாதெனில்,  வடக்கில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6,000 ரூபாவே கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. வெறும் 6,000 ரூபாய்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சும் முன்பள்ளி ஆசிரியர்களை வைத்துள்ளது. சிவில் பாதுகாப்புத் துறையின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.  தப்போது 30,000 அல்லது அதற்கும் அதிகமாகவும் வழங்கப்படுகிறது. இதனை தவறென நான் சொல்லவில்லை. நீங்கள் இதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டிக்காட்டுகின்றேன்.  கல்வி அமைச்சின் கீழ் அதே பணியைச் செய்யும் முன்பள்ளி ஆசிரியருக்கு 6,000 ருபா ஊதியமும், ஆனால் இராணுவ நிறுவனமான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 30,000 க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது என்றால் இதன்மூலம் நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

இது கல்வியை இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தும் விடயம் அல்லவா? இது மிகவும் மோசமானதாகத் தெரியவில்லையா?; இந்த அரசு அதைப்பற்றி எதுவும் இதுவரை குறிப்பிடவில்லை.

முன்பள்ளி பற்றியும், அந்தத் துறையை மேம்படுத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளபோதும்,இந்த அழிவுகரமான கொள்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.  போருக்குப் பின்னரான பதினைந்து, பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட இத்தகைய தீவிர இனவெறி செயற்பாடுகளை மிகவும் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திலும் அது தொடரும் நிலையில் இந்த அரசும் அமைதியாகவே இருக்கிறது.


அடுத்து, கிழக்கு மாகாணம் நிதி மையமாக மாற்றப்பட்டு, முழுமையாக இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா முழுமையாக ஏற்கும். மிகவும் நல்லது. இதனால் இந்தியாவும் முன்னேற்றமடையும். ஆனால் இந்தியா முன்வர வேண்டும் என்று கூறும் நீங்கள்,  அதே பாதீட்டில் திருகோணமலையில் 39 எண்ணெய் குதங்களில்; சர்வதேச அளவில் ஏலம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறீர்கள். அந்த எண்ணெய் குதங்களில், இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் இப்படி செய்கிறீர்கள். 

அந்த 39 எண்ணெய் குதங்களால் வேறுஎவராவது பயனடையப்போகிறார்கள் என்றால், இந்தியா இதில் ஆர்வமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறீர்களா? இந்த கடப்பாடுகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வருவதால் தமக்கு விசேட அக்கறை இருப்பதாக இந்தியா மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. எண்ணெய் குதங்களை முழுமையாக பொறுப்பேற்க அவர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் சர்வதேச அளவில் ஏலத்திற்கு செல்லவதாக நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அது வேறு அரசாங்கமாக இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். ஒருபுறம் இந்தியா வேண்டும் என்று சொல்கிறீர்கள் மறுபுறம் நிலைமையை மோசமாக்குகிறீர்கள். நீங்கள் சந்தேகங்களை உருவாக்கும் சூழ்நிலையையே உருவாக்குகிறீர்கள். இந்த வரவுசெலவுத்திட்டத்தின்படி கிழக்கு மாகாணங்களின் முழு எதிர்காலமும் இந்தியாவையே சார்ந்துள்ளது. எங்களிடம் உறுதியான அர்ப்பணிப்பு இல்லையென்றாலும் உங்களின் சொந்தக் கொள்கைகள் இந்தியாவை எதிர்மறையாக பாதிக்கும்.


அடுத்து, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்தும் பாதீட்டு குறிப்பிடுகிறது.

வடக்கு கிழக்கில் வனவளத்துறையும் உயர் பாதுகாப்பு வலயமும் ஒரு சாபக்கேடாகும். போருக்குப் பின்னர் நீங்கள் இராணுவத்தினருக்கான உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்தீர்கள். மற்றும் வனவளத் திணைக்களம் யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த பாரிய ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியது. அவர்கள் திரும்பி வந்திருந்தும் கூட அவர்களது நிலங்கள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் அதை திரும்பப் பெற முயற்சித்தோம். முடியவில்லை. அத்துடன் எங்கள் மக்களை கைது செய்து வாரக்கணக்கில் பிணையில் வரமுடியாத அளவுக்கு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இந்த பாதீட்டு வரைபில் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

 நீங்கள் வனவளத் திணைக்களத்தைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், வடகிழக்கில் இராணுவமயமாக்கலை நீங்கள் கட்டுப்படுத்தவில்லையென்றால்,  இந்த விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற கருத்து வடக்கு கிழக்கில் முன்னேறமுடியாது. நீங்கள் பால் உற்பத்திகள் பற்றி நன்றாகப் பேசுகிறீர்கள், நாங்கள் அதை அதிகபட்சமாக ஆதரிப்போம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் மைலத்தமடு மாதவனைப் பகுதிகளில் உள்ள 30,000 ஏக்கர் காணிகளுக்கு மேலான  தமிழ் மக்களின் பண்ணை நிலங்கள் இன்று வெளி மாவட்ட மக்களால் பலவந்தமாக சட்டவிரோதமாக அபகரிக்கப்படுகின்றன.. அவர்கள் அங்கு பால் உற்பத்தி நடவடிக்கைகளைத் தடுக்கிறார்கள்.

மயிலத்தமடு மற்றும் மாதவனை விடயத்தில் கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராகவே நின்றிருந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மிகவும் கொந்தளிப்பான இந்த பிரச்சனை குறித்து இந்த அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு வார்த்தையும் இல்லை. 

வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்களுக்கு அடுத்தபடியாக இந்த நாடு கண்டிராத இரண்டாவது மிக நீண்டகால போராட்டம் இதுவாகும். ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்களின் மயிலத்தமடு மாதவனை  விடயத்தில் இந்த அரசாங்கம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது கிழக்கு மாகாண மக்களுக்கு இந்த பாதீடு அர்த்தமற்றதாகி விடுகிறது.

மற்றொன்று நீர்ப்பாசனத் துறையாகும். வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் மாதுறு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டம் என இரண்டு முக்கியமான திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனையில் நாளாந்தம் உழைத்து வாழும் மக்கள் தமது காணிகள் அபகரிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் அவல நிலையை எதிர்கொள்வதற்குக் காரணம் இந்த மாதுறு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டமேயாகும். 

ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் அந்தப் பிரதேசங்களிலிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்து அந்தப் பிரதேசங்களில் வெளி மாவட்ட மக்களைக் குடியேற்ற விரும்பியதால்தான் இந்த மயிலத்தமடு மாதவளை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

இன்று இந்த அரசாங்கமும் இந்தத் திட்டத்தைத் தொடரவும், ஒரு இணைப்புக்குக் கொண்டுவரவும் பேசுகிறது. முந்தைய அரசாங்கங்களின் காலனித்துவ தீய திட்டங்களைத் தொடரப்போகிறதா? அதற்கான நியாயமான பதில்களை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.  மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் 1,500 ஏக்கர் நிலம், அந்தத் திட்டம் நிறைவடையும் போது உண்மையில் 15 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகள் என்பதால் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதியாகும். ஆனால் கடந்த அரசாங்கங்கள் அனுராதபுர மாவட்டத்தில் இருந்து 1,500 குடும்பங்களை குடியமர்த்த முயன்றனர்.

இந்த திட்டங்கள் அனைத்தும் மிகவும் கவலைக்குரியது. அரசு மிகத் தெளிவாக சிந்திக்காத வரை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாம் எழுப்பிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்காதவரை , முந்தைய நிலைமையிலேயே செல்லப்போகிறது. 

நாங்கள் எதிர்த்திருந்த முன்னைய அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்ட கொள்கைகளிலிருந்து இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் வேறுபட்டவையாக இல்லை. இராணுவச் செலவுகளை எதிர்த்தோம். இவ்விடயத்தை நான் பாதுகாப்பு அமைச்சின் கீழ் விரிவாக பேசுவேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவை அனைத்தும் அடிப்படைப் பிரச்சினைகளாகும். 

 கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே!

கடந்த 77 ஆண்டுகளில் ஆட்சிக்கு வராத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அரசாங்கங்களில் இருந்து தீவிரமான மாற்றம் மற்றும் விலகல் இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.   வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 

இந்த அரசாங்கம் தெளிவாகும் வரை, எமது பிரச்சினைகளுக்கு  அரசாங்கம் தெளிவான பதில்களை வழங்கும் வரை,இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதால் இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கிறேன்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.