போர்வீரனின் நினைவுடன்.(மாசி..14)
இன்றுபோல் அன்று
காதலர்தினம் நினைவினில்
வந்ததில்லை
தோட்டாக்களும் எறிகணைகளும்
நினைவுபடுத்த விட்டதுமில்லை
நானும்தான் காதலித்தேன்
ஆனால் எனக்குள்
பட்டாம்பூச்சி பறக்கவில்லை
என் முன்பாக
தோட்டாக்களே பறந்தன
எண்ணிக்கையின்றி
என்னவனை
பார்த்திட வேண்டுமென
காத்திருப்பேன்
ஆனால் அவனோ
முன்னரங்க காவலரணில்
எதிரியின் வரவிற்காக கால்கடுக்க காத்திருப்பான்
அவன்
எனக்காக வரையும்
மடலில்கூட
விடுதலைக் கனவைத்தான்
எழுதி வைப்பான்
அண்ணன் கரங்களுக்கு
பலம் சேர்த்துவிடு என்றுதான்
கூறிநிற்பான்
குப்பி தொங்கும்
என் கழுத்தில்
என்றோ ஒரு நாள்
மஞ்சள்கயிறு தொங்குமென
நினைத்துக்கொள்வேன்
என் குழந்தைகளுக்கு
மாவீரர்களான
என் தோழிகளின் பெயர்களை
சூட்டிட வேண்டுமென
நினைத்துக்கொள்வேன்
என்னைவிட தீராக்காதல்
அவனுக்கு மண்மீது
அதனால்தான் சாய்ந்தான்
மண்ணோடு
வீரனே
உன்னை
சாய்த்த தோட்டாவும்
உன் உறுதிகண்டு
வெட்கித்துத்தானே நின்றிருக்கும்
என்னவனே
எனக்குள்
உன் நினைவுகள்
சுமையான சுகமே
நீ குடியிருந்த
இதயக்கோயில்
அது என்றென்றும்
உனக்கான சிம்மாசனமே.....
#பிரபா அன்பு#
கருத்துகள் இல்லை