மனச்சிதைவு - சுரேஷ் தர்மா!!

 


காவல் நிலையம் என்கிற நீல எழுத்துகளால் ஆன பல கையைத் தாங்கியபடி உயர்ந்து நின்றது. அந்த முகப்பு. 
வாசலில் செவ்ரளிப்பூக்கள் வாடி விழுந்து கிடந்தன. இன்னும் பல பூக்களைச் சுமந்தபடி அழகாகப் படர்ந்து நின்றது அந்தப் பச்சை மரம். சுற்றி நின்ற கடதாசிப் பூமரங்கள் அந்த வாசலுக்கு அழகு சேர்த்தபடி வரிசையில் நின்றன.


அங்கும் இங்குமாக சிறுசிறு மக்கள் கூட்டம் குழுமி நின்று  தங்கள் விவகாரங்களைக் கதைதுக்கொண்டிருந்தனர்.ஓரிருவர் தனித்தனியாக  கவலை தோய்ந்த முகத்துடன் நிற்பதையும் காணமுடிந்தது.
என்னுடைய அறுபத்தியொரு வயதிற்கு இன்று தான் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருக்கிறேன்.

முதலாவது கட்டடத்தின் முன்பக்கமாக போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த எனக்குள்ளே எத்தனையோ யோசனைகள்.
ஒரு பாடசாலை ஆசிரியராக பின்பு பாடசாலை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற எனக்கு என் மகனால் ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தை என்னவென்று. கூறுவது?
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த ஆண்பிள்ளை என்று மனைவி வைதேகி அதிகமாகச் செல்லம் கொடுத்துவிட்டதன் வினை இன்று அவளையும் படுக்கை ஆக்கி என்னையும் இங்கே வந்து இருக்க வைத்திருக்கிறது.

சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் என் மகனுக்கு ஆதவன் என்று பெயர் வைத்தேன். கடைசியில் அவன் நாளாந்தம் என்னையே துயரத்தில் எரிக்கிற நிலைமையைத் தத்து விட்டான்

என்னுடைய பார்வையைத் திருப்பி உள்ளே பார்த்தேன். தூரத்தில் தெரிந்த கம்பிகளுக்குப் பின்னால் மகன் ஆதவனின் முகம் இருண்டு தெரிந்தது. அவனுடைய கண்களில் தெரிந்த யாசிப்பு .மனதில் ஒருவித வலியைக் கொடுத்தது.
நான் ஆரம்பத்தில் கண்டித்த போது மனைவி வைதேகி குறுக்கே புகுந்து குறுக்கே புகுந்து அத்தனையையும் பாழாக்கி விட்டாள். 
பதினாறு. வயதில் சிநேகிதங்களோடு கண்டபடி  உலாத்தத் தொடங்கிய போது நான் சொன்னேன்...
"இதெல்லாம் தேவையில்லாத வேலை, படிக்கிற அலுவலை  மட்டும் பார் " என்று.
அப்போது  அவனுக்கு அது வேப்பங்காயாக கசந்தது. சொன்னதற்கு எல்லாம் எதிர்வாதம் புரிந்தான்.
''மகன் அடம்பிடித்து சாப்பிடாமல் இருக்கிறான்'' என்று அவனுடைய விருப்பத்துக்கு எல்லாம் செய்த மனைவி வைதேகி கடைசியில் தன் மகன் போதைக்கு அடிமையாகி விட்டான் என்பதை அறிந்து துடித்துப் போய், அந்த வேதனையிலேயே நோயாளியாகிவிட்டாள்.
இப்போதைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பிள்ளைகளை அதிகம் கண்டிக்க முடியாத நிலைமை...
இரண்டு மகள்களும் உயர்தரத்தில் உயிரியல் பாடம் படித்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிப் படித்துக் கொண்டிருந்தனர். அப்படி இருக்க ,இவன் மட்டும் எனக்கு இப்படி ஒரு அவமானத்தை தேடித்தந்துவிட்டானே.மனம் ஆற்றாமை யில் அங்கலாய்த்து.  இதயத்தில் அமிலத்தை ஊற்றியது போல வலி நிறைந்து கிடந்தது.
.
''ஆண்பிள்ளை வேணும்'' என்ற தனது  வேண்டுதலுக்காக கடவுள் தந்த பிள்ளை அவன் என்பது மனைவி வைதேகியின் தீராத நம்பிக்கை.  அதுவே அவனுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்க காரணமாகி விட்டது. தாயின் அளவில்லாத பாசத்தை, ஆதவன் தன்னுடைய கொடும் பழக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டு விட்டான்.

மகனென்றால் காணும் வைதேகிக்கு.  இப்போது அவனுக்கு பத்தொன்பது வயது. இன்று வரை தானே சாப்பாடு நீந்துவது தான் வைதேகியின் வழக்கம். அவனுக்கும் அது ஒரு பழக்கம். வீட்டில் சாப்பிடுவது குறைவு. சாப்பிடும் போதெல்லாம் அன்னை தான் தீத்திவிடவேண்டும். 
முன்பு ஒருதடவை, போதைப்பொருள் விற்கிற இடத்தில் இவனும் நின்றான் என்கிற தகவலோடு பொலிசார் இவனைக் கூட்டிச் சென்றபோது ,நானும் ஊரில் இல்லை .வேலை அலுவலாக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது, என்னிடம் அதிகமாக எதையும் கூறாமலே வைதேகி தன்னுடைய அண்ணன் மூலம் யாரையோ பிடித்து கதைத்து உடனேயே மகனை வீட்டுக்கு கூட்டிவந்து விட்டாள். அதற்குப்பிறகு கொஞ்சம் நண்பர்களோடு திரிவதைக் குறைத்துக் கொண்டு நல்லபடியாகத்தான் இருந்தான்.

உயர் தரப் பரீட்சை முடிந்து மறுநாள், நண்பன் யாரோ சிறையில் இருந்து வந்து விட்டான்... பார்த்துவிட்டு வருகிறேன் என்று போன போக்குத்தான்... சிறையில் இருந்து வந்த நண்பன்  அதிகமாகப் போதைப்பொருளைப் பாவித்து இறந்து விட, கூட நின்ற இவர்கள் மூவர் மீதும் விசாரணை.
தகவல் அறிந்து மயங்கி விழுந்த வைதேகி, இப்போது வரை அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறாள்.
நேற்று முழுவதும் நான் வரவே இல்லை. மனைவி வைத்தியசாலையில், மகன் சிறைக் கூடத்தில்...
யாரைப் பார்ப்பது.
'எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது' என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டேன்.
இன்று அதிகாலை,மகள்மார் இருவரும் வந்திறங்கி,
*நாங்கள் அம்மாவைப் பாக்கிறம், நீங்கள் தம்பியைப் பாத்திட்டு வாங்கோ "என்றதும்தான் வந்திருக்கிறேன்.
''சிறையில் இருந்து அனுபவிக்கட்டும், அப்பதான் விளங்கும்' என்பதுதான் என்னுடைய எண்ணமாகவும் இருந்தது.
'எக்கேடாவது கெட்டுத்துலையட்டும்' என்று விடவும் முடியவில்லை.
ஒரே மகன்...
காவலில் இருந்தவர்களை வெளியே கூட்டி வந்தார்கள். 'நீதிமன்றம் கொண்டு செல்லப்போகிறார்கள் போல' என நினைத்துக்கொண்டே எழுந்து நின்றேன். கால்கள் தள்ளாடியது.  இவனால் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப்போகிறேனோ...
'பேசாமல் இவனையும் கொன்று விட்டு நானும் செத்துத் தொலைந்தால் என்ன' என்று தோன்றியது.
வெளியே வந்தவன், என்னைக் கண்டதும் அருகில் ஓடிவந்து
"அப்பா..."என்றான் தழுதழுத்தபடி.
நான் பேசாமலே நின்றேன்.

கைகளை இறுகப் பிடித்தபடி,  அப்பா...இனிமேல் இப்பிடிச் செய்ய மாட்டன்...என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோ...பொலிஸ் ஒராள் சொன்னவர்..அம்மா சீரியசா இருக்கிறா எண்டு.. அப்பா...அம்மாவுக்கு என்ன...அம்மா எனக்கு வேணுப்பா...அம்மா எனக்கு வேணும்...அம்மா இல்லாமல் என்னால் உயிரோடயே இருக்கேலாது... அப்பா... நான் இனி ஒருத்தரோடையும் போக மாட்டேன்...அம்மா வேணும்..." சிறு பையனைப் போல குமுறி அழுதவனைப் பாக்க எனக்கும் மனம் தவித்தது.
என் பிள்ளை...இப்படி அழுகிறானே...நான் எங்கே தவறுவிட்டேன்...இவன் தடம்மாற நானும் தானே காரணமாக இருக்க வேண்டும்...இவனை எப்படியாவது திருத்தி நல்லவனாக வாழவைக்கும் பொறுப்பு என்னுடையது தானே...வரலாற்றையும் வாழ்வியலையும் நான் சரியாக இவனுக்கு சொல்லாமல் விட்டு விட்டேன்... எங்களுக்காக எங்கள் மகிழ்ச்சிக்காக உயிர் கொடுத்த உன்னதர்களைப் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொல்லாமல் விடுவதுதான் நிறைய தவறுகளுக்கு காரணமாகிறது...'
எனக்குள் தோன்றிய எண்ணத்துடன் ஆதவனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்.
என் மார்பில் சாய்ந்து கொண்டு தேம்பி அழுதவனை இறுக அணைத்தபடி,
"அப்பா இருக்கிறன்...இனி நான் பாத்துக்கொள்ளுறன்..."என்றேன்.

மூவரையும் அழைத்துச் சென்ற பொலிசார் விசாரணை செய்தனர். நடுக்கத்துடன் என்னையே பார்த்தபடி இருந்த ஆதவனைப் பார்க்கையில் வயிறு பற்றி எரிந்தது எனக்கு.
'வீட்டில் கண்டிப்பை விரும்பாவிட்டால் ...சட்டம் தண்டிக்கிற நிலைமை ஏற்படும் ....'  ஆதவனிடம் நான் அடிக்கடி சொல்லுவது இதைத்தான்.
இப்போது புரிந்து கொண்டிருப்பான் ...

சிறிது நேரத்தில் இறந்தவனின் தாய் தகப்பன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களே, தங்கள் மகன் அதிகமாக போதைப் பொருளைப் பாவித்து இறந்தான் எனவும் இவர்களுக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறிவிட
புகார் தள்ளுபடி செய்யப்பட்டு மூவரும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நானும் மற்ற எல்லோருமாக வாசலுக்கு வர, ஓடி வந்த இறந்தவனின் தாயார்
"ஐயா...ராசாக்களே...இந்த கண்டறியாத கோதாரியால நீங்களும் போய்த் துலைஞ்சிடாதேங்கோ...வாழுற பிள்ளையளை வாரிக்குடுக்கேக்க எங்கட மனம் படுற பாட்டை நீங்கள் அறியமாட்டியள்...உதை விக்க எவனெல்லாம் காரணமோ அவனெல்லாம்...நாசமாத்தான் போவான்...." என்று கதறி அழ, எங்கள் அத்தனை பேருடைய மனமும் உருகிக் கசிந்தது.

எழுத்து - சுரேஷ் தர்மா




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.