கறுப்பினக் காதலன் - சுரேஷ் தர்மா!!
வெள்ளைச்சாரலென பனி படர்ந்து இருந்த வீதியில் வழுக்கியபடி சென்று கொண்டிருந்தது என்னுடைய சிவப்பு நிற மகிழுந்து. மகிழுந்தினுள்ளே துள்ளிசைப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்க வாகனம் செலுத்திய எனது கைகள் அதற்கேற்றவாறு தாளமிட்டுக் கொண்டிருந்தன. என்னுடைய சிறு தலை அசைப்பும் கூட என்னை உற்சாகப்படுத்தியது. எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. பாடல் ஒலி கேட்டாலே, கைகள் தாளமிடும், தலை அந்த இசைக்கும் லயத்திற்கும் ஏற்ப அசையும். வாய் அந்தப் பாடலோடு சேர்ந்து தானும் சங்கீதம் பாடும்.
மனமெல்லாம் இலேசாக இதயம் மகிழ்ச்சியில் திழைத்துக் கொண்டிருந்தது.
இன்று எமது நண்புக்கான பிறந்த நாள். எனது நண்பனும் நானும் நண்பர்களால் சந்தித்த நாள். இந்த உலகத்தில் ஒரு உன்னதமான நட்பு. மலர்ந்த மகிழ்ச்சியான நாள். அதனுடைய பிறந்த நாள் விருந்துபசார நிகழ்விற்காகத்தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஆம்...நண்பன் மோகாவும் நானும் நட்பால் இணைந்து கொண்ட நன்னாள்.
என்னுடைய புலம்பெயர் வாழ்வில் எத்தனையோ நண்பர்களைக் கண்டு கடந்து விட்டேன். ஆனால் மோகாவைப் போல ஒரு நட்பை இன்னும் சந்திக்கவில்லை. அவனை, நண்பன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவனுடைய நாடி நரம்பு அத்தனையிலும் என் மீதான நட்புத்தான் ஒட்டிக் கொண்டிருந்தது.
மோகா....
அவன் ஒரு கறுப்பினத்தவன். சுருண்ட முடியும் உயர்ந்து வளர்ந்த தோற்றமுமாக கம்பீரமாக இருக்கும் எத்தியோப்பியா நாட்டுக்காரன். அவனுடைய உருவம் கறுப்பே தவிர அவனுடைய மனம் பால் போன்ற வெள்ளை நிறமானது. என்னை முழுவதுமாகப் புரிந்து கொண்டவன். என் சுகதுக்கங்களில் எல்லாம் கூடவே இருந்து எனக்காகவே யோசிக்கிற இனிய தோழன். இஸ்லாமிய நண்பனான அவன், தனது மதத்தை அதிகம் பின்பற்றுகிற அதே நேரம் ஏனைய மதங்களை அதிகம் மதிக்கிற பண்பு கொண்டவன். குர்ரானையும் அதே போல் பைபிளையும் எப்போதும் நேசிக்கிறவன். அந்த வார்த்தைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவன்.
மோகாவுக்கும் எனக்குமான சந்திப்பு எனக்கும் அவனுக்குமான நண்பன் ஒருவன் மூலம் ஏற்பட்டது தான்.
என்னுடைய வியாபாரம் நன்கு செழித்து பரந்து கொண்டிருந்த காலம் அது. வேறு வேறு தொழில்களில் முதலீடு செய்து ஓரளவுக்கு வளமாக என் வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருந்தது.
நண்பன் மூலமாக செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி அன்றுதான் மோகாவைச் சந்திக்க அவனோடு சென்றேன். என்னைக் கண்டதும் முதல் முறை காண்பது போல் அல்லாமல் ஏதோ ஆண்டாண்டு காலமாகப் பழகியவர் போல என்னைக் கட்டித்தழுவி வரவேற்ற விதமே அவன்.மீது எனக்கு ஒரு நல்ல நட்பை உண்டாக்கி விட்டது. என்னுடைய வார்த்தைகளை அவன் கூர்ந்து கேட்ட விதமே அவன் சிறந்த வணிகவியலாளன் என்பதையும் எனக்கு உணர்த்தியது. மூவருமாக பல விசயங்கள் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். அவனுடனான ஒரு கூட்டுத் தொழிலுக்கான அத்திவாரம் அன்று தான் உருவானது. மிகவும் மகிழ்ச்சியாக மூவரும் தொழில் தொடங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்தோம்.
அப்போது தான் நான் இல்லற வாழ்விலும் நுழைந்திருந்தேன். அதற்கும் வாழ்த்துக் கூறியவன், ஊரில் இருக்கிற எனது குடும்பம் பற்றிய விசயங்களையும் ஊர் பற்றிய ஏக்கங்களையும் கூட கேட்டு அறிந்து கொண்டான். என் ஊரின் அழகையும் அதன் தொன்மையையும் நான் சொல்லச்சொல்ல பிரமிப்போடு கேட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் நாங்கள் இனத்தால் வேறானவர்கள் என்ற எண்ணமே எனக்குத் தோன்றவில்லை.
அதன்பிறகு சில ஆண்டுகள் மோகாவோடு சேர்ந்து தொழில் செய்தேன். அந்த நாட்களில் எங்கள் நட்பு இன்னும் இன்னும் இறுகிப் பிணைந்து கொண்டது. அவன் எனக்கு ஒரு பலமாக இருந்தான்.
தொழிலிலும் சரி, ஏனைய விடயங்களிலும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டோம். "இரு தாய் வயிற்றில் பிறந்த ஒரே பிள்ளைகள் நாம்" என்பான். நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அப்படியே பின்பற்றுகிற ஒரு சரியான இஸ்லாமியனாக அவனை நான் கண்டேன்.
காலம் கரைந்த போது , என் வாழ்க்கைப் படகு தடுமாறித் தத்தளிக்கையில் நான் தனித்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மனம் நொறுங்கி இதயம் துடித்து வாழ்வின் மீது எதுவித பற்றும் இல்லாதவனாக என் மீதே எனக்கு கோபம், எரிச்சல் எல்லாம் ஏற்பட்டு பற்றில்லாத ஒருவனாக நின்றேன். வாழ்க்கை மீது நான் பிடிப்பற்று இருந்த காலம் அது.
அப்போது எனக்கு பெருந்துணைமாக நண்பர்கள் ஒரு சிலர்தான் இருந்தனர். அதிலும் மோகா சற்று மேலாக என்னோடு நின்றான். என்னைத் தேற்றி இயல்பு வாழ்க்கை வாழ வைத்தவன் அவன்தான்.
அவன் எனது உற்ற நண்பனாக மாறியது அந்த வறண்ட நாட்களில்தான். அதன் பிறகு எனக்காக அவன் செய்தவை ஏராளம். அதிலும் என்னுடைய குடும்பத்தின் மீது நிறைய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான்.
என் உயிர்த்துடிப்பான என் அப்பு இறந்த போது, அவன் கண்கள் உதிர்த்த கண்ணீரில் அவனுடைய நட்பின் ஆழம் தெரிந்தது. அதன்பிறகு அப்புவின் காரியங்களுக்காக தானும் பணம்தர வேண்டும் என்றும் அது தனக்கு கடமை என்றும் கூறி என் குடும்பத்தில் ஒருவனாக விருப்பப்பட்டு இணைந்து பணத்தை தந்த என் நண்பன்.
என்னோடு மட்டும் என்றில்லை...யாரோடு பழகினாலும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் அன்பாகவும் அக்கறையாகவும் பழகுகிற பாங்கு அவனிடம் இருந்தது.
உயர்ந்த எடுப்பான தோற்றம் கொண்ட மோகா, தனக்காக இல்லாமல் எனக்காகவே அதிகம் சிந்திக்கிறவன். அவன் எனக்கு நண்பனாக கிடைத்தது என் பாக்கியம் என்பேன். சிறந்த ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் ஒரு தத்துவாசிரியனாக ஒரு வரலாற்று மேதையாக வணிகத்துறை விற்பன்னனாக சக உயிர்களை அளவு கடந்து நேசிக்கிற அன்பாளனாக இல்லாதோருக்கு அள்ளிக் கொடுக்கிற அறப்பண்பாளனாக எனப் பல கோணங்களில் அவனைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டதுண்டு. நான் பார்த்த மனிதர்களில் மோகா மிகவும் வித்தியாசமானவன்.
இப்போது தொழில் ரீதியாக நாங்கள் வேறு வேறு வியாபாரம் செய்தாலும் மாதம் ஒருமுறையேனும் என்னை வந்து பார்க்காமல் விடுவதில்லை அவன். மாதம் தோறும் அவனைக் காணாவிட்டால் நானும் ஏதோ இழந்ததைப் போல உணர்வேன். என்னை சகல அழுத்தங்களில் இருந்தும் விடுவித்து மன விடுதலையைத் தருகிற சக்தி அவனுக்கு மட்டுமே இருந்தது. இனிய இல்லறம் ஒன்றின் சதிபதி போலவே எங்கள் நட்பில் நாங்கள் பிணைந்திருந்தோம்.
தன்னோடு ஒட்டிப்பிறக்காத இரட்டையனாக என்னை அவன் நேசித்தான்.
அன்புச் சங்கிலியால் இறுக்கி கட்டப்பட்ட எமது நட்பிற்கு இன்று அகவை பத்து. அதைக் கொண்டாடுவதற்காகவே அவனுடைய அலுவலகத்திற்கு திடீர்ப் பயணமாகச் சென்று கொண்டிருந்தேன். அவனுக்கு இனிய ஆச்சரியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே எனது திட்டம்.
மோகாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இதுவரை அவனுடைய குடும்பத்தை நான் கண்டதில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.
அவனைப் போலவே அதி சிறப்பான குணம் கொண்ட வாரிசுகளாக அவர்கள் இருக்கக்கூடும் என நினைப்பேன்.
சிறு குலுக்கலுடன் என் மகிழுந்து நின்றது. அதோடு கூடவே என்னுடைய நினைவுகளும் தடைப்பட்டு நின்றன.
'ஓ...மோகாவின் அலுவலகம் வந்து விட்டது' என எண்ணியபடி காரை விட்டு இறங்கினேன். என் கையில் அவனுக்காக நான் வாங்கிய பரிசுப் பொருள் இருந்தது.
என் கையில் இருந்தது அவனும் நானும் இணைந்திருந்த ஓவியம்.
நிச்சயமாக அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். என்னோடு உரையாடுகிற அல்லது சேர்ந்திருக்கிற பொழுதுகளை அதிகம் ஆவலோடு எதிர்பார்க்கிற என் தோழனுக்கு இதைவிடச் சிறந்த பரிசு வேறென்ன விருப்பமாக இருக்கப் போகிறது...
நான் உள்ளே போகும் போதே தனது அறையில் இருந்தபடி என்னைக் கண்டு விட்டு, எழுந்து ஓடி வந்துகொண்டிருந்த மோகா...என் கண்களுக்கு ஒரு ஆண் தேவதை போலவே காட்சியளித்தான்.
எழுத்து - சுரேஷ் தர்மா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை