சாமரவுக்கு விளக்கமறியல்; வெளிநாட்டு பயணத் தடை விதிப்பு!📸
2 குற்றசாட்டுகளுக்கு பிணை; மற்றுமொரு குற்றச்சாட்டுக்கு விளக்கமறியல் . கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
3 குற்றச்சாட்டுக்களின் பேரில் இன்று (27) முற்பகல் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் இரண்டு குற்றச்சாட்டுக் களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று காலை ஆஜராகியிருந்தார்.
அதனையடுத்து அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
முற்பகல் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அங்கு முன் வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற் கொண்ட மாஜிஸ்திரேட் நீதவான் தனுஜா லக்மாலி சந்தேக நபரை ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 5 மில்லியன் 2 சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
3 குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் 2 குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ள நீதவான், அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் சிறுவர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக இலங்கை வங்கியில் ரூ. 10 இலட்சம் நிதியை காசோலையாக பெற்றுக் கொண்டு அதனை தமது மனறத்தின் நிதியாக உபயோகப்படுத்தியமைக்காக நிதி மோசடி குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை