இந்தப் பெண் பிள்ளை விடுதலை செய்யப்படவில்லை. அவர் எங்கே?📸

 


இந்தப் படத்தில் இருக்கும் பெண் பிள்ளை 19 மே 2009 அன்று ஒமந்தையில் வைத்து ஸ்ரீ லங்கா படையினரால்

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்று கூறி கைது செய்யப்பட்டவர். அதுவும் அவரது தாய் தந்தையினது கண்முன்னால் கைதுச் செய்யப்பட்டவர். 2011 க்குப் பின் அவரைப் போன்ற பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டபோது இந்தப் பெண் பிள்ளை விடுதலை செய்யப்படவில்லை. அவர் எங்கே இருக்கிறார் அவருக்கு என்ன நடந்தது என்ற எந்தத் தகவலும் அவரது பெற்றோருக்குக் கிடைக்கவில்லை.


அவரது தாய் தன்னுடைய மகளைத் தேடி அலைந்ததோடு, வவுனியாவில் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் 2015 ம் ஆண்டு நடந்த ஸ்ரீ லங்கா அரசுத் தலைவர் தேர்தலின்போது அதில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரச்சார துண்டுபிரசுரத்தில் அவர் பாடசாலை பிள்ளைகள் சிலருடன் நின்று கொண்டிருக்கும் நிழல் படம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.


அந்த நிழல் படத்தில் காணாமல் போன அந்தப் பெண் பிள்ளை பாடசாலை சீருடையில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு அருகில் நிற்கின்றது. 

(அந்தப் படத்தையும் நான் இத்துடன் இணைத்திருக்கிறேன்) அதைப்பார்த்து பேரானந்தப்பட்ட அந்தத்தாய் 

அதன்பின் தனது பிள்ளையை மீட்க மைத்திரியின் ஆட்சியை நல்லாட்சி என்று சான்றிதழ் வழங்கிய ஒரு ஃ தமிழ்க் கட்சியின் தலைவர்களைச் சந்திப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தார். எடுத்தார் ஆனால் அவர்களுக்கு அந்தத் தாயை சந்திக்க நேரம் இருக்கவில்லை. இறுதியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா கஜேந்திரன் எடுத்த முயற்சியினால், பெரும் போராட்டங்களுக்குப் பின் மைத்ரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் வந்தபோது அந்தத் தாயால் அவரைச் சந்திக்க முடிந்தது. அந்தச் சந்திப்பின்போது அந்தத் தாயிடம் இருந்த ஆதாரங்களை எல்லாம் பெற்றுக்கொண்ட மைத்ரிபால சிறிசேனா அலரி மாளிகையில் வந்து ஃ தன்னைசந்திக்குமாறும் அந்தப் படம் எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக  விசாரித்து அறிந்து சொல்வதாகவும் கூறினார்.

அதன் பின்பும் அலரி மாளிகைக்குச் செல்வதற்கு அந்தத் தாய் எடுத்த முயற்சி உடனடியாகச் சாத்தியப்படவில்லை. பின்பு மீண்டும் தொடர் போராட்டங்களை நடத்திய பின், அலரி மாளிகைக்கு வரும்படி அவருக்கு அழைப்பு கிடைத்தது. அவர் நம்பிக்கையோடு அங்குச் சென்றபோது அங்கே தமிழ்த் தேசிய அரசியலை குத்தகைக்கு எடுத்துகொண்ட கட்சியின் அப்புக்காத்து அரசியல்வாதி இருந்தார் அவர் அந்தத் தாயை அழைத்து ‘நீங்கள் எங்களுடன் தான் பேச வேண்டும் ; எங்கள் மூலமாகத்தான் மைத்திரியை சந்திக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டார். அந்தத் தாய் அதற்கு மறுத்தபோது ‘அப்படி என்றால், நீங்கள் மைத்திரியை சந்திக்க முடியாது’ என்று அவர் பயமுறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தத் தாய் கத்தி குரல் வைத்தபோது, அங்கிருந்த இராணுவத்தினர் அவரை இழுத்து வந்து வெளியே தள்ளினர். மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் வவுனியா திரும்பிய அந்தத்தாய் ‘தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துச் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.. அந்த உண்ணா விரதத்தை ‘நீ உன்னுடைய மற்ற பிள்ளைகளை இழப்பாய்’ என்று அச்சுறுத்தி இராணுவ புலனாய்வு துறையினர் நிறுத்தி விட்டனர்.. அதன் பின் இன்று வரை அந்தத்தாய் தன்னுடைய மகள் வருவாள் என்று காத்திருக்கிறார். இன்று வரை தனது மகளின் நிழல் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு வவுனியா நகர வீதிகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மைத்ரி அய்யாவும் இன்று வரை அந்தத் தாய்க்கு பதில் சொல்லவில்லை. ஜனநாயகத்தை மீட்க வந்த மீட்பராகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு  பின் கதவு  அரசியல் நடத்தும் அப்புக்காத்து அய்யாவும் அதை மறந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.