அக்கரைப்பற்று டியூட்டரிகளில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்!
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்கள் 24 ஆம் திகதியன்று வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் தெரிவிக்கபட்டிருப்பதாவது;
அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் சமய நிறுவனங்களின் முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக,
எதிர்வரும் பண்டிகைகள் மற்றும் சமய அனுஸ்டானங்களுக்கு இடம் கொடுக்கும் முகமாக அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்படி குறித்த காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்,
மேலும், இம்முறை கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சா/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் கடந்த காலங்களில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பரீட்சைக்குத் தோற்றியமையால் ஏற்பட்டுள்ள உடல் உள அழுத்தங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும் க.பொ.த உயர்தர கல்விக்கான துறையை அவர்கள் சுயமாக தீர்மானம் எடுப்பதற்கும் இடமளித்து புதிய ஆண்டுக்கான க.பொ.த உயர்தரத்திற்கான கல்விச் செயற்பாடுகளை 2025 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை காலதாமதம் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
கருத்துகள் இல்லை