இலங்கையில் ஆசிய கிண்ணம் செப்டெம்பரில் நடக்க வாய்ப்பு


இந்தியாவில் இந்த மாத கடைசியில் நடத்த ஏற்பாடாகி இருக்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி இந்தியா வராத நிலையில் இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய பொதுவான இடத்தில் நடத்த ஏற்பாடாகி இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கௌன்சில் வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.


ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்த ஏற்பாடாகி இருப்பதோடு 2026 டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் இந்தத் தொடர் டி20 வடிவத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனினும் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில், ஒரு நாடு மற்ற நாட்டில் நடைபெறும் போட்டிகளின்போது பொதுவான மைதானத்தில் ஆட இணக்கம் எட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஏற்படும் சிக்கலை தவிர்க்கும் வகையில் ஆசிய கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றபோதும் அதனை பொதுவான மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் போட்டி அட்டவணையில் கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களை தவிர்ப்பதற்கு ஆசிய கிரிக்கெட் கௌன்சில் முயன்று வருகிறது.


2023 இல் ஒருநாள் வடிவத்தில் பாகிஸ்தானில் ஆசிய கிண்ணத்தை நடத்த ஏற்பாடான நிலையில் இந்திய அணியின் போட்டிகள் கலப்பு முறையில் இலங்கையிலேயே நடத்தப்பட்டது. இதனால் இந்தத் தொடரில் நடந்த 13 போட்டிகளில் நான்கு ஆட்டங்களை மாத்திரமே பாகிஸ்தானில் நடத்த முடியுமானது.


கடந்த ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றபோதும் டி20 வடிவத்தில் நடந்த ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணியே நடப்புச் சம்பியனாக உள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2022 ஆம் ஆண்டு நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை கிண்ணத்தை வென்றது.


இம்முறை ஆசிய கிண்ணத் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் ஹொங்கொங் அணிகள் ஆடவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.