ஈரத்தீ (கோபிகை) - பாகம் 47!!

 



அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு சோகத்துடன் விடிவது போல இருந்தது. விழித்துவிட்ட போதும் தலையணையில் முகத்தைப் புதைத்த படி படுத்திருந்தேன். 
நடு இரவில் ஆந்தை ஒன்று அலறி அலறி கத்துவது போல இருந்ததால் திடுக்கிட்டு விழித்ததில் இருந்து அப்படியே விழிப்பும் உறக்கமுமாகவே அன்றைய இரவுப்பொழுது கழிந்திருந்தது.சரியாக உறங்க முடியவில்லை. மனதில் ஒரு படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. மனம் உறவுகள் எல்லோரையும் ஒருமுறை நினைத்தபடி வலம் வந்தது.


திடீரென கேட்ட அழைப்பொலியில் திடுக்கிட்டு எழுந்து அலைபேசியைக் கையில் எடுத்தபடி திரையில் வந்த பெயரைப் பார்த்தேன்.
"அப்பா"
என்கிற எழுத்துகள் ஒளிர்ந்தன.
தேவமித்திரனைத்தான் அப்பா என்று பதிவு செய்திருந்தோம் .
வண்ணமதியின் கோரிக்கையில் அவ்வாறு பதிவு செய்தேன் என்றாலும் எனக்கும் அது மிகவும் பிடித்தமானதாக வே இருந்தது.
ஓரளவு விபரம் தெரிந்த பராயத்திலேயே அப்பாவை இழந்து விட்ட எனக்கு அப்பா என்கிற வார்த்தைகளில் அதீதமான பிடிப்பு இருந்தது. அப்பாவின் அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்குகிறவள் நான்.
அப்படி இருக்கையில் , தேவமித்திரன் என் மீது காட்டுகிற அக்கறையும் அன்பும் ஒரு தந்தையின் கவனிப்பு க்கு ஒப்பானது தான்.அவருடைய அந்த அக்கறையான அன்பிலும் கனிவிலும் நான் மிகவும் இதமாக உணர்வதை இந்த வார்த்தையின் மூலம கனப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம்.
உதட்டில் தோன்றிய சிறு புன்னகையுடன் அலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தேன்.
"காலை வணக்கம்...."
கம்பீரமாக ஒலித்தது அவருடைய குரல்.
"காலை வணக்கம்" என்றேன் சோம்பலும் சற்றே செல்லமும் கலந்த குரலில்.

"என்ன... என்னுடைய  மகாராணி இன்னும் துயில் கலையவில்லையோ? திருப்பள்ளி எழுச்சி பாடட்டோ?" சிரிப்போடு கேட்டவரிடம்
"முழிச்சாச்சு...எழும்பேல்ல.... நீங்கள் எங்க நிக்கிறீங்கள்?" என்றேன்.
"உங்கட வீட்டில் தான்..." அவர் சொன்னதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்.
"என்..ன"
"படலைக்கு வெளிய நிக்கிறன் ...தாயே..கதவைத் திறந்தால் தான் உள்ள வரலாம்"  என்றார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...அவசரமாக எழுந்து வண்ணமதியை உலுக்கி எழுப்பினேன்.



"வண்ணமதி... அப்பா வந்து நிக்கிறாராம்...எழும்பம்மா..." என்னுடைய அந்தக் குரலில் துள்ளி எழுந்த வண்ணமதி,
"எங்கையம்மா...." என்றாள் பரபரப்புடன்.
"வெளியிலை நிக்கிறாராம் ..பாடலை திறக்க வேணும்..."
நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திறப்பை கையில் எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட வண்ணமதியை சிரிப்போடு பார்த்தேன்.
நீளக்காற்சட்டை கட்டைக் கை வைத்த சின்ன மேற்சட்டை  இரண்டுமான இரவு உடையோடு அப்படியே வரவும் சங்கடமாக இருந்தது.
உடையை மாற்றலாம் என நினைப்பதற்குள்
" எனக்கு நேரம் போகுது... எங்க அம்மா..." என்று கேட்டபடி தேவமித்திரனின் குரல் உள்ளே கேட்கவும்
அவரோடு கதைப்பதே பெரிய விசயமாக இருக்கிறது, வீட்டுக்கு வந்த நேரத்திலாவது,  சற்று நேரம் கதைத்துவிடலாம் என்கிற ஆசை உந்த எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு வெளியே ஓடி வந்தேன்.
கலைந்த தலையும் நித்திரை முறியாத முகமுமாக என்னைப் பார்த்தவரின் விழிகள் ஆழமாக என்னுள் ஊடுருவியது.
நீண்ட நாட்களாக அவரைக் காணவில்லை... திடீரென கண்டதும் எனக்கும் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு உடம்பெங்கும் பரவியது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டோம்.

"அப்பா...இருங்கோ...  ஓவியப் போட்டிக்கு எண்டு நான் வரைஞ்ச ஓவியத்தைப் காட்டுறன்..." என்றுவிட்டு வண்ணமதி உள்ளே ஓட
அவசரமாக என்னருகில் வந்து இழுத்து நெற்றியில் ஒற்றை முத்தம் பதித்துவிட்டு  அவர் என்னையே பார்க்க,
"ஐயோ... இன்னும் குளிக்கேல்ல....எழும்பின மாதிரியே இருக்கிறன்..." என்றேன்.
"ஓ....நான் சமர்க்கனியின்ரை கணவன்தான்...சரியோ.....அதால பிரச்சினை இல்லை" என்று விட்டு,
"என்ரை மகாராணி சின்னப்பிள்ளை மாதிரி இருக்கிறா,  கனநாளா காணேல்லத்தானே...
வரவர அழகு வேறு கூடிக்கொணாடு போகுது என்ர சண்டைக்காரிக்கு ...."  என்றார்.
"சண்டைக்காரியோ? "  சண்டைக்குப் போனேன்.
"சின்ன ஆக்களா இருக்கேக்க எவ்வளவு சண்டை வரும் தெரியும் தானே..."
"அது....அப்ப..."
நான் இழுத்தேன்.
எப்ப எண்டாலும் சண்டைக்காரிதான்..அதுவும் என்ர செல்லச் சண்டைக்காரி"  என்றார்.
"மெலிஞ்ச மாதிரிக் கிடக்கு, ஏன் சாப்பிடுறேல்லையோ?"  என்றேன்.
"காதலியைக் காணாத ஏக்கம் " என்றவர்
என் வெட்கப்புன்னகை கண்டு வாய்விட்டுச் சிரித்தார்.
என் கேள்விக்கான பதில் இது இல்லை என்பது போல நான் நிற்கவும்
"சாப்பிடுறனான்... கொஞ்சம் வேலை கூட,  இதை எல்லாம் முடிச்சிட்டு கெதியில கலியாணம் செய்ய வேணும் எண்டு அப்பா சொல்லிப் போட்டார்." . என்றுவிட்டு கூர்ந்து என்னைப் பார்த்த தேவமித்திரனின் விழிகளின் வீச்சைத் தாங்க முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்.

"சமர்...நீயா இவ்வளவு வெட்கப்படுறாய், அதைத்தான் சொல்லுறது ஒரு பெண் எவ்வளவு தான் படிச்சாலும் என்ன தான் வேலை பார்த்தாலும் நாணம் என்பது அவளோட கூடவே இருக்குமாம்...." என்றார்.
எங்கோ தூரத்தில் அவர் பேசுவது போல் ஒலிக்க, மௌனமாகவே நின்றேன்.
தடதடவென்று ஓடிவந்த வண்ணமதியின் காலடி ஒலியில் இருவரும் விலகி நின்று கொண்டோம்.
வண்ணமதியின் கையில் இருந்த ஓவியம் ஒரு குடை போல் விரிய
ஒற்றைக் குடைக்குள்  மாமாவும் நாங்களும் ஆக ஐவரும் இருக்கும் தோற்றத்தை அழகாக வரைந்திருந்த வண்ணமதியின் திறமை எங்கள் இருவரையுமே ஆச்சரியப்படுத்தியது.

"கெட்டிக்காரி...."
தகப்பனின் பாராட்டில் உள்ளம் குளிர நின்றிருந்த வண்ணமதியை பெருமிதத்தோடு பார்த்தேன்.
"சமர், வர்ணன், பார்கவி எல்லாரும் அங்க பாமதி அக்கா வீட்ட தான் இண்டைக்கு நிப்பினமாம்... அதுதான் எல்லாரும் சேர்ந்து சமைப்பம் என்று கதைச்சனாங்கள் ..
நான் கறிகள் எல்லாம் வாங்கிக்கொண்டு வாறன்...நீ மதியம்மாவையும் கூட்டிக்கொண்டு வாம்மா...என்ன..." என்றார்.
நான் தலையை ஆட்டியபடி ஓடிச் சென்று இஞ்சி கலந்த தேநீரோடு வர, சிரித்தபடியே அதை வாங்கிப் பருகிவிட்டு
சரி... நான் வெளிக்கிடுறன்...வாங்கோ என்ன...
என்று கூறிவிட்டு நடக்க ஏதோ ஒரு மன ஏக்கத்தோடு பார்த்தபடியே நின்றேன்.






Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt













கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.