ஈரத்தீ (கோபிகை) - பாகம் 46!!
மந்திகையில் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் தான் மேகவர்ணன் அண்ணாவும் பார்கவியும் வசித்தனர்.
சீலன் அண்ணாவும் சற்று அருகிலேயே பருத்தித்துறையில் இருந்தார். அதிகாலையில் பார்கவி சமைத்துவிட்டுப் போவதால் இடைக்கிடை சீலன் அண்ணா வந்து சாப்பாடு எடுத்துச் செல்வார்.
சில நேரங்களில் அவரே வீட்டில் சமைப்பதும் உண்டு.
எப்போதாவது நானே எல்லோருக்குமாகச் சமைத்துக் கொடுப்பேன். சில நேரங்களில் மாமா தானே சமைத்து எனக்கும் வண்ணமதிக்கும் தேவமித்திரனிடம் கொடுத்துவிடுவார். இப்படியாக அமைதியாகவே எங்கள் வாழ்க்கைச் சாரல் நகர்ந்து கொண்டிருந்தது.
பெரும்பாலான நாட்களில் இரவு உணவை நாங்கள் அனைவருமே கமநல உணவகத்தில் பாமதி அக்காவிடம் தான் வாங்குவோம்.
தள்ளித் தள்ளி இருந்தோமே தவிர நானோ தேவமித்திரனோ மனதால் வேறுபட்டிருக்கவில்லை. இதயங்கள் ஒன்று பட்டிருந்தது எங்களுக்கு.
சில நாட்களாகவே தேவமித்திரன் மிகவும் தீவிரமான வேலைகளில் இருந்தார். என்னோடு கதைப்பதும் மிகவும் குறைவுதான்.
*சமர் நான் கொஞ்சம் வேலைகளோட இருக்கிறன். ஆறுதலாக கதைக்கிறனடா" என்று சொல்லியிருந்தார். நானும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.அவர் சாதாரணமானவர்களைப் போல இல்லை. எமது மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தன்னால் இயன்ற வரை செய்து கொண்டே இருப்பார் என்பது எனக்கு தெரியும்.
நானும் வண்ணமதியும் இடையிடையே மாமாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுண்டு. எங்களைப் பார்க்கும் போது மாமாவின் முகத்தில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
எங்கள் திருமணம் தள்ளிப்போவதில் மாமாவுக்குத்தான் மிகவும் கவலை.
"இவன் தேவா சொல்லுறதைக் கேக்கிறானே இல்லைம்மா... கொஞ்ச நாள் போகட்டும்.... கொஞ்ச நாள் போகட்டும்..என்று திரும்பத்திரும்பச் சொல்லுறான், நீயாவது சொல்லம்மா..." என்றார் கடைசியாகப் போன போது.
"மாமா...அவர் ஏதோ முக்கியமான வேலையாக இருக்கிறாராம்...அது முடியட்டும், நான் கதைக்கிறன்" என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன்.
மாமாவுக்கு எங்கள் திருமணத்தை விரைவில் நடத்தி விட வேண்டும் என்கிற ஆசைதான். மகனை மணக்கோலத்தில் காணவேண்டும் என்கிற பேராவல் அவருடைய வார்த்தைகளில் தெரிந்தது.
அன்று வெள்ளிக்கிழமை. தனியார் வகுப்பு இல்லை.
நேரம் நான்கு மணி இருக்கும், வைத்தியசாலையில் இருந்து வந்த எனக்கு முகத்தை சோகமாக வைத்திருந்த வண்ணமதியைக் காணுகையில் மனதில் கேள்வி தோன்றியது.
'வண்ணமதிக்குப் பெற்றவர்களின் நினைப்பு வந்து விட்டதோ' என்ற யோசனை ஓடியது
அருகில் சென்று அமர்ந்தபடி,
"என்ன டா...." என்றேன் மெதுவாக.
"அம்மா...இனியன் அண்ணா இண்டைக்கு வகுப்புக்கு வெளியில் நிண்டவர்.... " என்ற வண்ணமதியிடம்
"ஏன்....?" என்றேன் சிறு பதறலுடன்.
"அது...ஏதோ. . ..வீட்டுப்பாடம் செய்த கொப்பியைக் கொண்டு வரேல்லையாம்..." என்றாள்.
"ஓ.... "
என்றேன்...சிறிதாகிப்போன குரலில்.
'தேவமித்திரன் அப்படி கவனமில்லாமல் விட மாட்டாரே' என்ற எண்ணம் தோன்றியது.
'உடனே அழைப்பு எடுத்து கேட்போம்' என் நினைத்து விட்டு உடனடியாக அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன்.
வேலையாக இருப்பதாக அவரே சொல்லியிருந்த காரணத்தால் அழைப்பு எடுத்து கரைச்சல் கொடுக்க வேண்டாம், நாளைக்கு அங்கு போய் என்ன ஏதென்று கேட்போம் என நினைத்தேன். மறுநாள் எனக்கு இரவுக் கடமை, அதனால் வண்ணமதி காலையில் வகுப்பு முடித்து வந்ததும் உடனேயே போய்வந்துவிடலாம் என எண்ணினேன்.
"என்னம்மா....யோசிச்சு கண்கொண்டு நிக்கிறியள்....?" என்ற வண்ணமதியிடம்
"இல்லை... நாளைக்குச் சனிக்கிழமை, லீவுநாள்தானே...விடியக்காலமை நீங்கள் வகுப்புக்குப் போய் வந்த உடனே நீயும் நானும் சமைச்சு எடுத்துக் கொண்டு போய் குடுத்திட்டு இனியனட்டையும் கதைச்சுப் போட்டு வருவம்...." என்றேன்.
தலையை "ஆட்டி ஆமோதித்த வண்ணமதியின் முகத்தில் இன்னும் தெளிவு வரவில்லை...
"என்னம்மா...யோசிக்கிறாய் ?" என்றேன்.
"அப்பா ஏன் அண்ணாவைக் கவனிக்காமல் விட்டவர்..."
பெரிய மனுஷி போன்ற தோரணையில் அவள் கேட்ட போது எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
"அப்பா...ஏதோ வேலையாக இருக்கிறன் என்று சொன்னவர் தானே, அவர் கவனிக்காமல் இருக்க மாட்டார், அண்ணா தான், ஏதோ மறந்திட்டான் போல" என்றேன்.
தலையை ஆட்டியபடி உள்ளே சென்று விட்ட வண்ணமதியின் யோசனை இப்போது எனக்குத் தொற்றிக் கொண்டது.
"அப்பிடி என்னதான் வேலையில் இருக்கிறார் தேவமித்திரன்....?"
உள்ளத்தில் உலாப்போன கேள்வியோடு அப்படியே அமர்ந்திருந்தேன்.
ஏனோ... அந்த நேரத்தில் அவருக்கு ஏதும் பிரச்சினைகள் வந்து விடக்கூடாதே என்று மனம் பதைபதைத்தது.
எங்கள் இடங்களில் போதைப் பாவனை இப்போது பெருகி விட்டிருக்கிறது. அது சார்ந்த வழக்குகள் தினமும் வருவதாக ஒருமுறை தேவமித்திரன் சொல்லியிருந்தார்.
அதோட
திட்டமிட்டு எங்கட இடங்களில் போதைப் பொருட்களைப் பரப்புவதாக வரும் அதுக்கு எங்கட ஆக்கள் சிலபேர் ஒத்துளைக்கினம் எண்டும் பணத்துக்கு ஆசைப்பட்டு எங்கட சனமே விக்கிதுகள் எண்டும் போதைப் பாவனையை அழிக்கிறது தான் தன்னுடைய மிக முக்கியமான ஒரே நோக்கம் எண்டும் சொல்லிக்கொண்டு இருந்தவர்.
அந்த வேலைகளில் மும்முரமாக இருக்கிறாரோ...
பல்வேறு சிந்தனைகள் என்னைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்க, ஆழ்ந்த யோசனையோடு விறாந்தையில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்தேன்.
உள்ளே சென்று விட்டு வந்த வண்ணமதி,
"என்னம்மா.... இன்னும் குளிக்கப் போகாமல் இருக்கிறீங்கள்?" என்றதும் தான்
தலையை ஆட்டியபடியே எழுந்து குளிக்கச் சென்றேன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை