புதிய உறுப்பினர்களாக யாழ் பல்கலைக்கழக பேரவை!


யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவையின் உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிமுதல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படக்கூடிய வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்), இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் – நிதி), ஏந்திரி திருமதி எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்), ஏந்திரி ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்), மருத்துவ நிபுணர் என்.சரவணபவ (மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்), ஷெரீன் அப்துல் சரூர் (எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளரும்), கலாநிதி எம்.அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்), ஏந்திரி அ.குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்), என்.செல்வகுமாரன் (முன்னாள் சட்டப் பீடாதிபதி, கொழும்பு), திருமதி வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வடமாகாண தொழிற்றுறை திணைக்களம்), டி.கே.பி.யூ. குணதிலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை), எம்.ஜே.ஆர்.புவிராஜ் (முன்னாள் பணிப்பாளர், திறைசேரி), பேராசிரியர் சி.சிவயோகநாதன் (வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்), பி.ஏ.சரத்சந்திர (வவுனியா மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலர்) க.பிரபாகரன் (சட்டத்தரணி), ஏ.எம்.பி.என்.அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்) ஆகியோரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும். பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

எனினும், ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபாரிசின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்று வந்திருந்தது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சராக இருந்த ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங்கப்பட்டதால் அந்த நியமனங்கள் குறித்த அதிருப்தி பல்கலை வட்டாரங்களில் நிலவி வந்தன.


இந்தநிலையில் இந்தமுறையும் தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபார்சிலேயே , நியமனங்கள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சாரார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.