தமிழ்மொழி அதன் சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.!
பிரெஞ்சு உயர் கல்விக்கான அடிப்படை இளங்கலைத் தேர்வில் (BAC, Baccalauréat) மீண்டும் தமிழ்மொழியை இணைக்குமாறு பிரெஞ்சு உயர் கல்வி அமைச்சுக்கு மனு கொடுத்து வலியுறுத்தும் முகமாக கையெழுத்து இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்விக்கான இளங்கலைத் தேர்வில் வெளிநாட்டு மொழிகளின் பட்டியலிலிருந்த தமிழ்மொழி 2022ம் ஆண்டு அதிபர் மக்ரோன் அவர்களின் காலத்தில் விலக்கப்பட்டது. தாய்மொழியான நம் தமிழ்மொழி விலக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சமூகத்தின் கலாச்சார அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக தமிழ்மொழி உள்ளது. யுனெஸ்கோவால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு வளமான மொழியியல் பாரம்பரியத்தைக் கொண்டது தமிழ்.
பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு கற்பித்தல் செயல்பாட்டில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரெஞ்சு மண்ணில் தமிழ்மொழியை ஆர்வத்தோடு பயின்று வருகின்றனர். அதன் மூலம் தம் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் முயல்கின்றனர்.
இளங்கலைப் பட்டப்படிப்பில் வெளிநாட்டு மொழிகளின் பட்டியலிலிருந்து தமிழ்மொழி விலக்கப்பட்டிருப்பது நமது சமூகத்திற்குள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவு தமிழ் மாணவர்களுக்கு அங்கீகாரத்தையும், தாய்மொழி மூலமான அவர்களின் கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இழக்கச் செய்துள்ளது.
இளங்கலைப் பட்டப்படிப்பில் வழங்கப்படும் வெளிநாட்டு மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியை மீண்டும் சேர்க்குமாறு கல்வி அமைச்சரை இக்கையெழுத்து இயக்கம் மூலம் நாமனைவரும் வலியுறுத்துவோம். இதன் மூலம் தமிழ் மாணவர்களின் மொழியியல் அறிவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பிரான்சில் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஊக்குவிக்க முடியும்.
நேற்றைய தினம் பாரிஸ் பத்தில் அமைந்துள்ள தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் சென்ற போது இக்கையெழுத்து இயக்க அறிவிப்பை என்னால் பார்க்க முடிந்தது. கடந்த வருடம் மே மாதத்திலிருந்து இக்கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வருவதாக அறியமுடிந்தது. அறிவிப்பில் காட்டப்படும் QR இணைப்பைப் பயன்படுத்தி கோரிக்கை மனுவில் ஒப்பமிட்டு பிரெஞ்சு மண்ணில் நம் பிள்ளைகள் தாய்மொழியை கற்கும் உரிமையை மீட்டெடுப்போம்.
கையெழுத்து இயக்கம் தன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் இந்நேரத்தில், கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம் அனைவரையும் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இம்மனுவில் கையெழுத்திடுவதன் மூலம், தமிழ்மொழி அதன் சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
தகவலை உங்கள் உறவுகள், நண்பர்களுக்குத் தெரியப்படுத்திப் பகிர்ந்து கொள்வோம். முழுமையடையச் செய்வோம்.
நன்றி:
Association Tamoulcholai,
165 boulevard de la villette
75010 Paris.
Luxman Vithyah நன்றி
கருத்துகள் இல்லை