தமிழரின் தலைநகரில் தொடரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு!📸
திருகோணமலை குச்சவெளியில் தொடரும் நில ஆக்கிரமிப்பு -34க்கு மேற்பட்ட விகாரைகள், பல ஆலயங்களை உடைத்து பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளது.
திருகோணமலையில்
பௌத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் நிர்மாணிப்பு! 486 பௌத்த மக்களுக்காக 34க்கு மேற்பட்ட விகாரைகள்
விகாரைகளுக்காக பூஜாபூமி எனும் பெயரில் பௌத்த பிக்குகளால் 3820 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் ஆக்கிரமிப்பு
திருகோணமலை ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்ததன் காரணமாக 1955ஆம் ஆண்டின் நிர்வாக மாவட்ட சட்டம் 22இன் அடிப்படையில் கொட்டியார் பற்று, தம்பலகாமம் பற்று, கட்டுக்குளம் பற்று, திருகோணமலை பட்டிணமும் சூழலும் ஆகிய நான்கு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
இங்கு பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்து வந்ததாக புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 1881ஆம் ஆண்டு காலப்பகுதியில் 64.85 வீதமான தமிழ் மக்களும், 25.89 வீதமான முஸ்லிம் மக்களும், 4.21 வீதமான சிங்கள மக்களும் வாழ்ந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகூடிய நிலப்பரப்பைக் கொண்டதும் ஒப்பீட்டளவில் சனத்தொகை குறைந்த பிரதேச செயலாளர் பிரிவாகவும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. இதனால் இங்கு அதிகளவான நில ஆக்கிரமிப்பும், இதன் மூலம் இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கின்ற நடவடிக்கைகளும் திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே இனப் பிரச்சினைக்கான அடிப்படை எனவும் தெரிவிக்கின்றனர்.
பௌத்த ஆக்கிரமிப்பு
இந்நிலையில், 486 பௌத்த மக்களுக்காக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 28 விகாரைகள் உட்பட 32க்கு மேற்பட்ட விகாரைகள் பௌத்த மக்களே இல்லாத இடங்களில் காணப்படுகின்றன. இவற்றுக்காக “பூஜாபூமி” என்ற பெயரில் அளிப்பு என்ற வகையிலும் 3750 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையிலும், கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் ஆரம்பிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன. இந்த விகாரைகள் 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.
சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து, அவற்றுக்காக பெருமளவான நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடியேற்றி தமிழ் மக்களுடைய விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கையாக தமிழ் பேசும் மக்கள் இதனை பார்க்கின்றனர். குறிப்பாக “பூஜாபூமி” எனும் பெயரில் பௌத்த பிக்குகளால் 3820 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள கண்டல்காடு புராண ரஜமகா விகாரைக்காக 2.0234 ஹெக்டேயர் காணியும், கும்புறுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கொக்கரடி மலை புத்தராய வன செனசுன விகாரைக்காக 400 ஏக்கர் காணியும், கொத்திக்குளம் சங்கராய வன செனசுன விகாரைக்காக 400 ஏக்கர் காணியும், மடுவக்குளம் தர்மாய வன செனசுன விகாரைக்காக 400 ஏக்கர் காணியும், கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள பம்பரகல புராண ரஜ மகா விகாரைக்காக 108.4523 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02), (வர்த்தமானி 2284/53 – 2022.06.17), பாஹிய பபத வன செனசுந்த விகாரைக்காக 16.8417 ஹெக்டேயர் காணியும், மஹாபோதி விகாரைக்காக 0.8094 ஹெக்டேயர் காணியும், (வர்த்தமானி 2327 – 2023.04.06), டெபரகல புராண ரஜ மகா விகாரைக்காக 20.0809 ஹெக்டேயர் காணியும், தியான மண்டபத்துக்காக 5 ஏக்கர் காணியும், வித்தியாலோக ரஜ மகா விகாரைக்காக 0.1064 ஹெக்டேயர் காணியும், அத்பொகுன புராண ரஜ மகா விகாரைக்காக ஒரு தொகை காணியும், குச்சவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள சமுத்திரகிரி பிச்சமல் புராண ரஜ மகா விகாரைக்காக 0.9315 ஹெக்டேயர் காணியும், சைத்தியகிரி புராண ரஜ மகா விகாரைக்காக 24.1341 ஹெக்டேயர் காணியும், ஜாயாநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள சாகரபுர சமுத்திரகிரி வனசெனசுன விகாரைக்காக 36.0596 ஹெக்டேயர் காணியும், புராண கலன ரஜ மகா விகாரைக்காக ஒரு தொகை காணியும், (வர்த்தமானி 2284/53 – 2022.06.17),
காசிம்நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள மசங்கவெவ பிங்கத்துகம ரஜமகா விகாரைக்காக 152.6785 ஹெக்டேயர் காணியும், கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் உள்ள ஸ்ரீ கீதாராம விகாரைக்காக ஒரு தொகை காணியும், கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கிரிகண்டுசாய நீது பபன ரஜமகா விகாரைக்காக 102.5766 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2272ஃ32 – 2022.03.22), திரியாய் கிராம சேவகர் பிரிவில் உள்ள பத்மராஜ பபத வனசுனகன விகாரைக்காக 44.325 ஹெக்டேயர் காணியும்,
தபசுபல்லுக வனசுனகன விகாரைக்காக 2.4598 ஹெக்டேயர் காணியும், சப்தநாக பபத வனசெனசுன விகாரைக்காக 20.2343 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02), புல்மோட்டை 01 கிராம சேவகர் பிரிவில் உள்ள அத்தனங்கி கந்த புராண ரஜ மகா விகாரைக்காக 88.6966 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02), (வர்த்தமானி 2284/53 – 2022.06.17), ஸ்ரீ சத்தர்ம யுத்திக்க வனசெனசுன விகாரைக்காக 20.2343 ஹெக்டேயர் காணியும், (வர்த்தமானி 2196 – 2020.10.02), (வர்த்தமானி 2345/38 – 2023.08.15), மிஹின்டுலேனா புராண ரஜ மகா விகாரைக்காக 20.2343 ஹெக்டேயர் காணியும், மைமுனி ரஜமகா விகாரைக்காக ஒருதொகை காணியும், யான்ஓயா புராண ரஜ மகா விகாரைக்காக 147.3184 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02),
(வர்த்தமானி 2345/53 – 2023.08.17), புல்மோட்டை 02 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆசிரிகந்த புராண ரஜ மகா விகாரைக்காக 109.9858 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2272/32 – 2022.03.22), புல்மோட்டை 03 கிராம சேவகர் பிரிவில் உள்ள நாகலென ரஜ மகா விகாரைக்காக 59.0255 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02), (வர்த்தமானி 2272/32 – 2022.03.22),
புல்மோட்டை 04 கிராம சேவகர் பிரிவில் உள்ள சாந்தி புராண ரஜ மகா விகாரைக்காக 40.4216 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2345/52 – 2023.08.17), ஸ்ரீ தர்மோதய தகம் பன்சலைக்காக ஒரு தொகை காணியும், தென்னைமரபடி கிராம சேவகர் பிரிவில் உள்ள சங்கமலே புராண ரஜ மகா விகாரைக்காக 65.9322 ஹெக்டேயர் காணியும் (வர்த்தமானி 2196 – 2020.10.02), (வர்த்தமானி 2284/53 – 2022.06.17), மீகஸ்வெவ விகாரைக்காக ஒருதொகை காணியும் பூஜாபூமி அடிப்படையில் காணி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் அதற்கு மேலதிகமாகவும் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
நீலப்பனிக்கன் குளம் விகாரை, கட்டுக்குளம் மகா ஆலங்குளம் விகாரைக்காகவும் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விகாரைகள் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் குச்சவெளி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்து வந்த நிலங்கள் விகாரைகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
பௌத்த விகாரைகளாக குறிப்பிடப்படும் ஒருசில இடங்கள் பழமையான கட்டுமானங்களை கொண்டுள்ளன. இவை தமிழ் பௌத்தம் சார்ந்தவை எனவும் சொல்லப்பட்டு வருகின்ற நிலையில் சில விகாரைகள் புதிய கட்டுமானங்களுடனும் மேலும் சில வெற்றுக் காணிகளாகவும் காணப்படுகின்றன.
இதை விட அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவங்ச நாயக்க தேரரினால் 2018.07.02 திகதியிடப்பட்டு 6 விகாரைகளுக்காக 500 ஏக்கர் காணி வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கிரிகண்டுசாய விகாராதிபதி திரியாயில் பரவிபாஞ்சான் என்ற இடத்திலுள்ள தமிழ் மக்களின் ஒப்பக் காணிகளை துப்புரவாக்கி நெற்பயிர்ச்செய்கை செய்து வருகின்றார். இதற்காக தனக்கு வேண்டிய சிங்கள மக்களுடைய பெயரில் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் பதிவுகள் வைக்கப்பட்டு, அவர்கள் விவசாயம் செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பல வருடகாலமாக இருந்த இந்து ஆலயங்களை உடைத்து பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக குச்சவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள சமுத்திரகிரி பிச்சமல் புரான ரஜ மகா விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கரடிமலை பிள்ளையார் கோவில் இருந்ததாகவும் அது தற்போது முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றார்கள். அதை விட 1982ஆம் ஆண்டு பண்டிதர் இ.வடிவேலினால் வெளியிடப்பட்டுள்ள “திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்” என்ற நூலில் கரடிமலை பிள்ளையார் ஆலயம் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதை விட செம்பிமலையில் அமைந்துள்ள செம்பீஸ்வரர் ஆலய பகுதியானது தொல்லியலுக்குரிய இடமாக குறிப்பிட்டு அதன் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் திரியாய் வளத்தாமலைப் பகுதியில் திரியாய் மக்கள் காலாகாலமாக வழிபட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை ஆக்கிரமித்து சப்த நாக விகாரையாக பதிவு செய்து தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு சில பௌத்த பிக்குகள் தடை விதித்து வருகின்றார்கள்.
வயல் நிலங்கள் ஆக்கிரமிப்பு
வனவளத் திணைக்களத்தினால் 29,430 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வனவளத் திணைக்களம் முயற்சி செய்தும் வருகின்றது. அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களம் 7330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 10,432 ஏக்கர் விவசாயக் காணியை விடுவிக்குமாறு பிரதேச செயலகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை அக்காணிகள் இன்றும் விடுவிக்கப்படவில்லை.
குறிப்பாக, நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் - 2553 ஏக்கரும், கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 1396 ஏக்கரும், கும்புறுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் 287 ஏக்கரும், கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் 389 ஏக்கரும், இரணைக்கேணி கிராம சேவகர் பிரிவில் 177 ஏக்கரும், வீரஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் 67 ஏக்கரும், குச்சவெளி கிராம சேவகர் பிரிவில் 1558 ஏக்கரும், காசிம்நகர் கிராம சேவகர் பிரிவில் 589 ஏக்கரும், ஜாயாநகர் கிராம சேவகர் பிரிவில் 149 ஏக்கரும், செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும், கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும், கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும், திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கரும், புல்மோட்டை 01 கிராம சேவகர் பிரிவில் 166 ஏக்கரும், புல்மோட்டை 03 கிராம சேவகர் பிரிவில் 125 ஏக்கரும், புல்மோட்டை 04 கிராம சேவகர் பிரிவில் 259 ஏக்கருமாக கையகப்படுத்தப்பட்டுள்ள 10432 ஏக்கர் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் தொல்பொருள் திணைக்களமும் 1087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்துக்கு 140000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகிறது.
இதை விட முப்படைகளும் 320 ஏக்கர் காணிகளையும் கையகப்படுத்தியுள்ளன. இதில் மக்களுடைய பூர்வீக காணிகள் மற்றும் மயானங்கள் அடங்குகின்றன.
இதனுடன் தொடர்புடைய கட்டுரைக்கு
கருத்துகள் இல்லை