கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 8
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கடுகு – 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். காய்ந்த மிளகாய் சிவந்த பிறகு அதில் தனியா, மிளகு, சீரகம், அரை டீஸ்பூன் கடுகு, வெந்தயம் இவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு இதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் அரைபட்ட பிறகு இதில் பொடித்த வெல்லத்தையும், இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையும் சேர்த்து இதை அரைப்படுவதற்கு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் அனைத்தையும் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் தோல் உரிக்கப்பட்ட பூண்டு ஒரு கைப்பிடி அளவு சேர்த்து பூண்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு இதில் பெருங்காயத்தூள், மஞ்சள், நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து இதை திறந்து பார்க்கும் பொழுது எண்ணெய் அனைத்தும் மேலே வந்து தொக்கு தயாராகி இருக்கும். அவ்வளவுதான் பூண்டு கருவேப்பிலை தொக்கு தயாராகிவிட்டது. இதில் சேர்க்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்கள். அவை அனைத்தையும் சேர்த்து நாம் செய்யக்கூடிய இந்த கருவேப்பிலை தொக்கு என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கருத்துகள் இல்லை