ஈரத்தீ (கோபிகை) - பாகம் 48!!
தான் தேவமித்திரன் பார்கவி மேகவர்ணன் அண்ணா பாlமதி அக்கா என்று எல்லோரும் ஒன்றாகக் குழுமி நின்றபடி சமைத்துக் கொண்டிருந்தோம்.
குழம்புக்கு ஆட்டு இறைச்சியும் பொரிப்பதற்கு இறாலும் அதோடு முட்டையும் வாங்கி வந்திருந்தார் தேவமித்திரன்.
கீரை, கத்தரிக்காய் இரண்டையும் பால்கறி வைத்து விட்டு கறிவேப்பிலை சம்பலும் செய்வோம் என்று எடுத்து வைத்தேன்.
"சமையல் என்பது ஒரு கலை...என்ன சமர்" என்ற பார்கவியிடம்
"ஓமோம்...அது சரிதான் பார்கவி, பார்த்துப் பார்த்து சமைச்சு மற்றவர்களுக்கு பரிமாறுவதில் இருக்கும் ஆனந்தமே தனிதான்" என்று நான் கூறவும்
"அப்பாடா... நான் குடுத்து வைச்சனான்..." என்றார் தேவமித்திரன் சிரித்தபடி.
"அது சரிதானம்மா சமர்... ஆனால் என்ர தங்கச்சிக்கு அது அவ்வளவு பிடித்தமான விசயபில்லை ....தெரியுமோ....." என்றா பாமதி அக்கா.
சின்ன வெங்காயத்தை உரித்தபடி கண்களையும் கசக்கிக் கொண்டிருந்த மேகவர்ணன் அண்ணாவிடம் இருந்து உடனே வெடிச்சிரிப்பொன்று வெளிப்பட்டது
"அக்கா...." பாமதி அக்காவை கெஞ்சலோடு அழைத்த பார்கவி, மேகவர்ணன் அண்ணாவை கோபத்தோடு பார்க்க,
"செத்தாண்டா... இண்டைக்கு சேகர்" என்றார் தேவமித்திரன்.
நான் தேவமித்திரனை பொய்க்கோபத்தோடு முறைக்க, "மச்சான் மாட்டினான்ரா..." என்றார் மேகவர்ணன் அண்ணா..
எங்கள் கதைகளைக் கேட்டு பாமதி அக்கா கலகலவென்று சிரிக்க அவவை வியப்போடு பார்த்தோம் நாங்கள் நால்வரும்.
பாமதி அக்கா அப்படிச் சிரித்து இதுவரை நாங்கள் கண்டதே இல்லை.
முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப்போனதோடு தன் சிரிப்பையே மறந்து விட்ட பாமதி அக்காவின் சிரிப்பு எங்களுக்குள் புதிதாக பூத்தூவியது.
மெல்லிய புன்னகை முகத்தில் உறைந்திருக்க நாங்கள் சமையலில் மும்முரமாகினோம்.
அகரனும் இனியனும் வண்ணமதியும் வெளியே இருந்து சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களோடு மாமாவும் சேர்ந்து கொண்டார்.
பாமதி அக்கா கீரையைத் துப்பரவாக்கியபடியே,
"அந்தக் காலத்திலை குடும்பங்கள் இப்பிடி ஒன்றாகத்தானே சமைச்சு சாப்பிட்ட வை ....இப்பதானே ஆளாளுக்கு அங்கயும் இஞ்சையுமா வாழுறம்...அது ஒரு வாழ்க்கை தான்"
என்றா ஆதங்கத்துடன்.
உடனே ,
*அது சரிதான் அண்ணி... முதல் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன...இப்ப வாழுற வாழ்க்கை என்ன...அவசர யுகத்திலை சுடுது மடியைப்பிடி என்று வாழுறம்...
...ஏதோ விடிய எழும்பினமா...வேலைக்கு ஓடினமா...கையில் கிடைச்சதைச் சாப்பிட்டமா....நிம்மதியே இல்லாமல் நித்திரை கொண்டு எழும்பினமா என்று வாழுறம்...".
என்ற மேகவர்ணன் அண்ணாவிடம்
"அது சரிதான் மச்சான்...எல்லாமே மாறிப்போச்சு..." எனப் பெருமூச்சு விட்ட
தேவமித்திரன் மும்முரமாக இறைச்சி வெட்டுகிற வேலையைச் செய்து கொண்டிருந்தார். நானும் பார்கவியும் சமையலைக் கவனித்தோம்.
அப்போது அடுப்புத்தட்டின் ஒரு ஓரமாக குப்பி விளக்கு இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது.
நான் சினனவளாக இருந்த காலத்தில் நானும் அம்மாவும் மட்டுமாக வாழ்ந்த போது இப்படி ஒரு குப்பி விளக்குத்தான் எங்கள் வீட்டில் இருந்தது. பல நாட்கள் அநதச் சிக்கன விளக்கிற்கு மண்ணெண்ணெய் இருக்காது.
அம்மா மறுக்க மறுக்க மாமிதான் எண்ணெய் தருவா..
"பிள்ளை படிக்கவேணும்...கொண்டு போங்கோ அண்ணி" என்று கூறி எப்படியாவது அம்மாவை வாங்க வைத்துவிடும் மாமி மீது எனக்கு அவ்வளவு அன்பு சுரக்கும்.
இனறு மாமியும் இல்லை, அம்மாவும் இல்லை...
கண்கள கரித்துக்கொண்டு வந்தது எனக்கு.
விறகு அடுப்பில்தான் சமைத்துக் கொண்டிருந்தோம என்பதால் புகை பட்டது போல கண்களைக் கசக்கினேன்.
என்னை நன்றாகப் பார்த்த தேவமித்திரனுக்கு என் மனநிலைமை புரிந்திருக்க வேணடும்.
இறைச்சியும் வெட்டி முடிந்து விட்டது.
"சமர்...குடத்தையும் வாளியையும் கொண்டு வா... கிணத்திலை தண்ணி எடுத்துககொண்டு வருவம்...நானும் கை கழுவ வேணும் " எனறு அழைக்கவும் நானும் இரண்டையும் எடுத்துக்கொணடு விரைந்து கிணற்றடிக்குச் சென்றுவிட்டேன்.
பின்னாலேயே வந்தவர்
"சமர்... என்னம்மா... அம்மாவையும் மாமியையும் நினைச்சனியா...?" என்றார் கனிந்த குரலில்.
அவரது கேள்வி ஆறுதலையும் ஆச்சரியத்தையும் ஒன்றாகத் தந்தது.
எதையுமே சொல்லாது தலையை மட்டுமே ஆடடியபடியே கீழே குனிந்து நின்று கொண்டிருந்தேன்.
நீ இப்பிடி கண் கலங்கினால் அவை ரெண்டு பேருமே தாங்கமாட்டினம் தெரியும் தானேடா " என்றார்.
நான் எதுவுமே கூறவில்லை. அழுகை இன்னும் அதிகமானது எனக்கு.
மெதுவாக என்னுடைய தாடையை நிமிர்த்திவிட்டு,
"என்னைப் பெத்த உயிரும் உன்னைப் பெற்றெடுத்த உயிரும் இந்த உலகத்தில் இல்லை என்றது வலிதான்...
அதுக்கு என்ன செய்யிறது...காலம் அவையளைப் பறிச்சுப் போட்டுது.. அவையின்ரை ஆசைப்படி இப்ப நாங்கள் சேர்ந்திட்டம் தானே.. ரெண்டு பேருமே எங்களுக்கு பிள்ளைகளா வந்து பிறப்பினம்... சரியோ" என்றார்.
வெட்கச்சிரிப்பு என்னை ஆட்கொண்டது.
நிறைந்த விழிகளோடு சிரித்தபடி நிமிர்ந்து பார்த்தேன்.
"ஏற்கனவே எங்கட தேவதையாக மதியம்மா இருக்கிறா... இன்னும் ரெண்டு தேவைதைகள் என்றால் சொல்லவே வேணும்...என்னை கையிலயே பிடிக்க ஏலாது சரியே..."
எனக்கு ஒரு சின்ன கஷ்டம் என்றாலும் முப்பெரும் தேவிகளும் வந்திடுவினம்... தெரியும் தானே...கண்களைச் சிமிட்டியபடி அவர் கூறவும் வெட்க நண்டுகள் என் உடம்பெங்கும் ஊர்ந்தன.
.
கருத்துகள் இல்லை