இலக்கணம் - சுரேஷ் தர்மா!!
அன்புள்ள அம்மா...
கொட்டும் பனியில் உறைந்தபடி உங்கள் அன்பு மகன் எழுதும் மடல் இது.
அம்மா நீங்கள் நலமா?
ஊரில் அப்பு ,ஆச்சி, தங்கச்சியாக்கள் சந்தனா, சாதனா, தம்பி வியாசன், மாமாக்கள்,மாமிமார் , மச்சான் கதிர், குருபரன் மச்சான் , மச்சாள்மார் எல்லாரும் சுகமா இருக்கினமா?
அம்மா...
நான் இங்கு நலமாக இருக்கிறன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு விசராக்கிடக்கு.
நான் இந்த லண்டன் நாட்டில் கால் பதிச்சு இன்றோடு பத்து நாட்கள் ஆச்சுது.
. எனக்கு இது எல்லாம் விசித்திரமாகத்தெரியுது. என்ன இருந்தாலும் எங்கட ஊரைப் போல வராதம்மா.
என்னோடு வந்த மற்ற நாலுபேரும் நல்ல மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாங்கள். எனக்குத்தான் இந்த பனி உறைந்த நிலத்தை,யும் பரபரப்பான பொழுதுகளையும் ஏற்க முடியவில்லை.
ஊருக்கு ஓடி வரவேணும் போல இருக்கிறது.
சிவலையன் எப்பிடி அம்மா இருக்கிறான்? தவிடு புண்ணாக்கு வைக்க நான் தான் வேணும் அவனுக்கு.இப்ப நீங்கள் வைக்க சாப்பிடுறானோ?
வகுப்பு முடிஞ்சு எப்ப வருவன் எண்டு வாசலைப் பார்த்துக்கொண்டு இருக்கிறவன்.
என்னைக் காணாமல் ஒரு பொழுதும் இருக்கமாட்டானே... எப்பிடியும் என்னைத் தேடி இருப்பான்.
லட்சுமி குட்டி போட்டவளே? அம்மா லச்சுமியின்ரை குட்டிக்கு மணி எண்டும் மயிலு எண்டும் தான் பெயர் வையுங்கோ. வடிவா பாருங்கோ குட்டியளை. குருபரன் மச்சான் தான் கொண்டு போறன் எண்டு கேட்பான்...
லட்சுமியையும் குட்டியளையும் குடுத்திடாதேங்கோ..
அடைவைச்ச ரெண்டு கோழியும் குஞ்சுகளும் இறக்கியாச்சே. பருந்து வட்டமடிச்சுக்கொண்டே இருக்கும். கவனம்...
ஆச்சி என்ன செய்யிறா...ஓயாமல் கதை சொல்ல என்னைத்தான் கூப்பிடுவா, இனி வியாசனைக் கூப்பிடட்டும்..
அப்பு வுக்கு இடைக்கிடை சந்தனாவை வெத்திலை இடிச்சு குடுக்கச் சொல்லுங்கோ. இரவில திண்ணையில இருந்து கதைக்காட்டி அவைக்கு பத்தியப்படாது...
அம்மா...
இஞ்ச குத்தரிசிச்சோறு இல்லையணை, இஞ்சத்தைய சாப்பாடுகளைப் பாக்க எனக்குத் தலையைச் சுத்துது. விதம் விதமா கடைகளில் கிடக்கு. சாப்பிடத் தான் எனக்கு மனமில்லை.
ஆச்சியின்ரை மடியில் படுத்துக்கொண்டு பெடியள் எல்லாம் சுத்தி இருக்க ஊர்க்கதை கதைக்கிற சந்தோசம் கோடி கொடுத்தாலும் கிடையாதணை.
ஏதோ வந்திட்டன் எண்டு பல்லைக் கடிச்சுக்கொண்டு இருக்கிறன். அப்பா மட்டும் உந்த புக்காரா அடிச்சு சாகாமல் இருந்திருந்தால் இந்தப் பக்கம் தலை வைச்சும் படுத்திருக்க மாட்டன்...
மாணிக்கப் பிள்ளையாருக்கு பொங்கல் வைச்சனீங்களே, ஆச்சி நேத்தி வைச்சவா தானே, அங்கால திருவிழாவும் வரும். எனக்கெண்டால் சரியான கவலையாக் கிடக்கு ஊரை நினைக்க. ஒரு திருவிழாவுக்கும் போகாமல் விட்டதே இல்லை நான்.
இப்பதான் நாலு நாளா வேலைக்குப் போறனான். ஒவ்வொரு நாளும் சம்பளத்திலை கொஞ்சக்காசை எடுத்து வைக்கிறனான். ஊரிலை எவ்வளவு வேலையள் கிடக்கு.
அம்மா...
இஞ்ச ஆக்கள் காலமை பெரிசா சாப்பிடுறேல்லை , உழைப்புக்கு ஓடுறதிலைதான் சிந்தனை இருக்கும். என்ன செய்யிறது. கண்டம் கடந்து வந்திட்டம்..இதிலை நேரம் காலம் பார்த்துச் சாப்பிட ஏலுமே எண்டு நினைக்கிறவை போல.
எனக்கு இது புதுசு தானே, விடிய வெள்ளண மரவள்ளிக்கிழங்கும் சம்பலும் சோளமாவிலை அவிச்ச புட்டும் கத்தரிக்காய் பிரட்டலும் பழச்சோறும் பழைய மீன் குழம்பும் எண்டு சாப்பிட்டுப் பழகி, விடியவே வயிறு அழத்தொடங்கிவிடும். அதை இதைப் போட்டு அடக்கிப் போடுவேன்.
தங்கச்சியாக்களுக்கு வடிவு வடிவான நிறத்திலை கிளிப்பு குத்த சரியான விருப்பம். நான் காசு அனுப்பின உடனே வாங்கிக் குடுங்கோ. திருவிழாவிலை செலவளிக்க வியாசனுக்கு காசு குடண.
போன முறை திருவிழாவுக்குள்ள ஆரோ ஐஸ்கிறீம் குடிக்க கேட்டு வாங்கினவன் எண்டு மாமா அடிச்சவரெல்லே...
அம்மா...
பின் வீட்டுப் பார்வதி ஆச்சிக்கும் சீனி தேயிலை வாங்கிக் குடுங்கோ . பாவம் ஆச்சி
,
அம்மா...
இந்த உடுப்புகளும் சப்பாத்துகளும் ...ஏதோ எனக்கு என்னைப் பாக்கவே ஒரு மாதிரிக்கிடக்கணை.
பெடியள் சொன்னவங்கள்...
வடிவா இருக்கிறன் எண்டு. அதுதான் இந்தக் கடிதத்தோட ஒரு படமும் வைச்சு அனுப்புறன்.
எல்லாரையும் கேட்டனானெண்டு சொல்லுங்கோ.
அம்மா..சத்தியமா சொல்லுறன் என்னதான் இருந்தாலும் எங்கட ஊரைப் போல வராதணை...
இத்துடன் எனது கடிதத்தை நிறைவு செய்கிறேன் ..
இப்படிக்கு
அன்பு மகன்.
கருத்துகள் இல்லை