மன உறுதி வல்லமையை மனதில் வைத்தோம்.!!
சண்டை தொடங்குதென்றால்
சட்டிபானையைக் கட்டிவைப்போம்.
சமைக்கத் தேவையானதை
தெரிந்த வீட்டில் கொண்டேவைப்போம்.
எங்கே போவதறியாமல்
எல்லோரோடும் சேர்ந்து நடப்போம்.
தங்க ஒரிடம் கிடைத்தால்
அங்கே இடம் பிடிப்போம்.
அண்டை அயல்களோடு
ஐக்கியமா ஒட்டியிருப்போம்.
தொண்டை காயுதென்றால்
தேத்தண்ணியத் தொட்டுக்குடிப்போம்.
சென்ற இடங்களில்
சேர்ந்தே உறங்கிக்கொள்வோம்.
சொந்த ஊர்போகும்வரை
சோகத்தைப் பரிமாறிக்கொள்வோம்.
உண்பதில் கொஞ்சமெடுத்து
உற்றாருக்குக் கிள்ளிக்கொடுப்போம்.
காண்பது எவராயிருந்தாலும்
கவனமென்று சொல்லிக்கொடுப்போம்.
மரநிழல் வாழ்க்கையையும்
மாளிகையாய் அதை நினைத்தோம்.
வருவது வரட்டும் என்ற
வல்லமையை மனதில் வைத்தோம்.
எவர் எம்மை அழித்தபோதும்
அவர் ஒருவராலே உருப்பட்டோம்.
பலர் பதவிக்கு வந்தபோதும் இப்போ
பவர்க்கட்டுக்கும் வருத்தப்படுறோம்.
-பிறேமா(எழில்)-
29.04.2025
கருத்துகள் இல்லை