தேசத்தின் அடித்தளம் என்ன?


இனம் (ethnie) வேறு தேசியம் வேறு. இனம் என்பது தனித்த மொழி பண்பாடு மூலம் தொன்று தொட்டு வரும் அடையாளம்.   ஆனால் தேசம் என்பது நவீன கட்டமைப்பு. ஒரு தேசத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு கொண்ட ஒரு பெரிய கற்பனை சமூகம் (Imagined community).  இது  கட்டமைக்கப்படுவது. ஓர் இனம் தானாக தேசிய உணர்வு பெறுவதில்லை. இந்தியாவில் பல்வேறு இனங்கள் உள்ளன, ஆனால் அவை தங்களை தனித்த தேசமாக உணர்வதில்லை. தமிழினமும் வெள்ளையர்கள் வெளியேறும் காலத்தில் தேசிய உணர்வு கொள்ளவில்லை.


While the ethnie may come into existence by its birth, the nation only comes into being through sacrifice [1]


ஓர் இனம் தன்னை தேசியமாக உணரவேண்டுமானால், அதற்கு ஒரு தியாகக்   கட்டுக்கதை அல்லது வரலாறு வேண்டும். தேசத்தின் அடித்தளம் என்பதே இரத்த தியாகம்.  தியாகம் இல்லாத இனம் தேசிய உணர்வு பெறாது.  இதை நமது வரலாற்றில் பார்த்தாலே தெளிவாகும். தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கும் தவிபு களின் தியாகத்திற்கும் நேரடித் தொடர்பு கொண்டது.  தவிபு கள் இரத்தம் சிந்த ஆரம்பித்தபின்னர் தான் தமிழ்த்தேசிய உணர்வுகள் வீறுகொண்டு எழுந்தது. இன்று தமிழகத்தின் தமிழ்த்தேசிய எழுச்சியின் ஆதாரமாக இருப்பது தவிபு கள் சிந்திய இரத்தம்தான்.


இங்கு முக்கியமான கேள்வி என்பது ஏன் தியாகம் தேசியத்திற்கு அடித்தளமாக இருக்கவேண்டும்.  இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய உளவியல், மனிதன் காட்டுவாசியாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது. கடவுளுக்கு இரத்த பலிகொடுத்து, படையல் வைத்து, சடங்குகள் செய்வது உலகில் அனைத்து காட்டுவாசி சமூகங்களிலும் பொதுவானது. அது இன்றும் பல இடங்களில் தொடர்கிறது. இதற்கான அடிப்படை உளவியல் காரணம் என்பது அதுதான் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.   பலி இல்லாவிட்டால் சமூகம் என்பது இல்லை. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர், இன்று காணும் பெரும் மதங்கள் தோன்றின. அவற்றின் அடித்தளத்தை பார்த்தால், அதிலும் பலி, தியாகம், சடங்குகள், அவற்றை சார்ந்த கட்டுக்கதைகள் நிரம்பி இருக்கும்.   அவற்றைக் கொண்டே மத அடிப்படையிலான சமூகங்கள் தோன்றின.  உதாரணமாக கிறித்தவ சமூகத்தின் அடிப்படை என்பது ஏசுவின் இரத்த தியாகம். ஏசு உயிரோடிருந்த பொழுது, கிறித்துவ சமூகம் உருவாக்கவில்லை, தியாகத்தின் பின்னர்தான் உருவானது.  நவீன உலகு உருவாகிய பின்னர், மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக தோன்றியதுதான் தேசம் என்ற கட்டமைப்பு. அந்த தேசிய கட்டமைப்பின் அடித்தளம் என்பது வீரர்களின் இரத்த பலி, அவர்களைப் போற்றும் சடங்குகள், மற்றும் தேசிய வரலாற்றுக்கதைகள்.  தேசம் என்பது மதசார்பற்ற மதம் என்று சமூக அறிவியலாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.  அடிப்படையில் எந்த ஒரு சமூகத்தையும் தியாகம் இல்லாமல் உருவாக்க முடியாது. இது மனிதனின் அடிப்படை உளவியல் தன்மை.


a national society is a political community based on the principle of common culture, enabled by a foundational memory of generative sacrifice.[1]


தவிபு கள் இரத்தம் சிந்தி, மாவீரர்களுக்கு நடுகல் கோயிலைக்கட்டி, மாவீரர்நாள் முதற்கொண்டு பல சடங்குகள் ஏற்படுத்தி, வீர வரலாற்றை உருவாக்கி, மக்களின் மனதில் அந்த தியாகத்தை உணரவைத்துதான் தேசியம் வளர்த்தார்கள். அந்த தியாகம் இல்லாமல் தேசியம் என்பதே இல்லை.   அனைவரும் இரத்தம் சிந்தினால், அனைவரும் உறவினர் ஆவார்கள் என்கிறார்கள் சமூக அறிவியலாளர்கள். சமூக ஒற்றுமைக்கு போரில் வெற்றிதோல்வி முக்கிய அல்ல, இரத்தம் சிந்துவதுதான் முக்கியம்.  


Wars, whose unifying effect endure, must be costly. Not winning or losing, but serious bloodletting is the important factor in ritual success. WHEN ALL BLEED, EVERYONE IS KIN.[3]


அடிப்படையில் தமிழ்த்தேசியத்தின் அடித்தளம் என்பது தலைவரும் மாவீரர்களும் தான். அவர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் என்று ஒன்றில்லை, தமிழின ஒற்றுமையும் இல்லை. தலைவருக்கு முன் பலர் தமிழ்த்தேசியம் பேசியிருக்கலாம், ஆனால் தமிழ்த் தேசிய உணர்வுகள் மக்களிடம் இல்லை.


இன்றும் இரத்தபலி கொடுத்துதான் பெரும்பான்மையான தமிழர்கள் வீடு கட்டுகிறார்கள். அது வீட்டுக்கு பொருந்துமோ இல்லையோ, ஆனால் நாட்டுக்குப் பொருந்தும். முந்தைய தமிழ்த்தேசிய அரசியல் அமைப்புகள் கட்டியவுடன் சில காலத்தில் இடிந்து விழுந்தன அல்லது பெரிதாக வளரவில்லை. ஏனெனில் அவற்றிற்கு தியாக வரலாறு இல்லை. ஆனால் இன்று அப்படியில்லை. இன்றைய தமிழ்த் தேசியத்திற்கு யாருக்கும் இல்லாத அளவு இரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.  


தியாகம் பகுத்தறிவற்றது, அது சமூகத்தின் அடிப்படையாக இருக்க முடியாது என்று சிலர் வாதிடலாம். உண்மை என்னவென்றால் மக்களை பகுத்தறிவின் மூலம் ஒரு தேசியமாக ஒன்று திரட்ட முடியாது என்பது சமூக அறிவியலாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை. சமூகத்தின் அடித்தளம் என்பது பகுத்தறிவற்றதன் மூலமே கட்டியமைக்கப் படுகிறது.  இதற்கான காரணங்கள் ஆழமானவை என்பதால் இப்பொழுது இதை விவாதிக்கவில்லை.  


society itself is ultimately based not upon reasoning or rational agreement but upon a non-rational foundation. If people acted purely on a rational basis, they would never be able to get together to form a society at all. [4]


தமிழ்த்தேசியத்திற்கு தவிபு களின் தியாகம் தவிர வேறு  எந்த மாற்றும் கிடையாது.  அவ்வாறான மாற்று ஒன்று இருந்தால், அது தவிபு களின் தியாகத்தைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். அது எக்காலத்திலும் கிடைக்கப்போவதில்லை.


தமிழின ஒற்றுமையையும், தமிழ்த்தேசியத்தையும் வளர்க்கவேண்டுமானால்,   மக்கள் அனைவரும் மாவீரர்களின் தியாகங்களை தொடர்ந்து நினைவுகூருவதன் மூலமே முடியும். 


- தியாக தேசம் 🔥

- தமிழீழ எழுச்சி மாதம் 🔥

- நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி ❤️

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.