நெடுந்தீவின் வரலாற்று தொன்மையும் சுற்றுலாத்துறையும்!📸


இலங்கையின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவெனும் நெடுந்தீவாகும். 


இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும், குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 7 KM தூரத்திலும், தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்து 38KM தூரத்திலும் அமைந்துள்ளது. இத் தீவானது கிழக்கு மேற்காக 8KM நீளமும், வடக்குத் தெற்காக 6KM அகலமும் உடையதாய் சுமார் 48 KM சதுர பரப்பளவைக் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளது. 


யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள இத்தீவு பசுத்தீவு, அபிஷேகத் தீவு, மருத்துவ மாவனம், புட்கரம், நெடுந்தீவு, டெல்வ்ற் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவை யாவும் காரணப் பெயர்களாகும். ஆதிகாலத்தில் பசுக்கள் நிறைந்து காணப்பட்டமையாலும், பாற்பண்ணைத் தொழில் நன்கு விருத்தியுற்றிருந்தமையாலும், இத்தீவு பசுத்தீவென்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசர் ஆட்சிக்காலம் வரை இப்பெயராலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது.


போர்த்துக்கீசரும், தமது மொழியில் -இல்காஸ் டாஸ் வாகாஸ்-என அழைத்தனர். பசுத்தீவு என்னும் பெயர் இப்பகுதியின் தரைத் தன்மையையும், மக்களின் பொருண்மிய நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பெற்றதாகும். இத்தீவின் கிழக்குப் பகுதியும், தென் பகுதியும் பரந்த புல்நிலங்களாக அமைந்தமையாலும், மந்தைகள் மேய்வதற்குப் பெரிதும் பயன்பட்டமையாலும் இத்தீவுக்குப் பசுத்தீவு என்ற பெயர் ஏற்பட்டதென இடப்பெயர் ஆய்வாளர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் கூறுவது பொருத்தமாகிறது. இங்கிருந்து பால், தயிர், இளநீர் ஆகிய அபிஷேகத் திரவியங்கள் தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரர் ஆலயத்திற்கு லிங்கேஸ்வரப் பெருமானின் அபிஷேகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டு வந்தமையால், அபிஷேகத் தீவு அழைக்கப்பட்டு வந்தது. 


இராம இராவண யுத்தகாலத்தில் மயக்க முற்றிருந்த தமது வீரர்களைக் காப்பாற்றுவதற்காக, அனுமன் இந்தியாவிலுள்ள சஞ்சீவி மலையொன்றினைப் பெயர்த்தெடுத்து தோழில் சுமந்து கொண்டு ஆகாய மார்க்கமாகப் பாக்குத் தொடுகடலைக் கடந்து இலங்கைக்கு வரும் பொழுது அம்மலையின் சிறு பகுதி உடைந்து பாக்குத் தொடுகடலில் வீழ்ந்து விட்டதென்றும், மூலிகைகள் நிறைந்து காணப்படும் அப்பகுதியே நெடுந்தீவென்றும் கூறப்படுகிறது.


இங்கு அனேக நோய் தீர்க்கும் மூலிகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இங்கு பொற்சீந்தில், சாறணை, மிசிட்டை, பிரண்டை, வீணாலை போன்ற பல மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் வைத்தியத் தொழிலில் புகழ்பெற்ற வைத்திய இராஜசிங்கன் என்ற பட்டப்பெயரைப் பெற்றவனான செகராசசேகரன் என்னும் யாழ்ப்பாண மன்னன் பசுத்தீவை மருத்துவ மாவனம் எனக் குறிப்பிட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சிங்கள மக்கள் இக்கருத்தில் அவுசத லோகய என்று அழைத்தார்கள். இதன் கருத்து சஞ்சீவி உலகமென்பதாகும். இங்கு மூலிகைள் நிறைந்து காணப்பட்டதாலும், அவற்றை அங்கு வாழ்ந்த மக்கள் முற்காலங்களில் உண்டு வந்ததாலுமே நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும், வயோதிப காலங்களிலும், தலைமயிர் நரை விழாமலும், உதிராமலும், பற்கள் விழாமலும் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாகவும், நூறு தொடக்கம் நூற்றி இருபத்தைந்து வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளார்கள் எனவும் அறியக்கிடக்கின்றது. இங்குள்ள மக்கள் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்தார்களென்பதற்கான ஒரு கதையுண்டு.


நெடுந்தீவு மந்தை வளர்ப்புக்கேற்ற இயற்கை வளம் கொண்டது இங்கு சில மக்கள் பட்டி பட்டியாக ஆடு வளர்ப்பதை ஒரு பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள், இங்கு காலத்திற்குக் காலம் வருவார்கள். மேய்ச்சல் நிலங்களில் மந்தைகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்ட வியாபாரிகள் மேய்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை அணுகி, விற்க ஆடு உண்டா எனக் கேட்டால் இளைஞன் மறு மொழியாக ஆம் உண்டு, ஆனால் அப்புவிடம் கேட்கவேண்டும் எனக் கூறி அப்புவிடம் அழைத்துச் செல்வான். அப்பு துாரத்தே வேப்பமர நிழலில் உட்கார்ந்திருப்பார். அப்புவிடம் வியாபாரி ஆடு விற்க உண்டா எனக் கேட்பார். அவரும் மறுமொழியாக ஆடு விற்க உண்டு எனக்கூறி, எழுந்து அப்புவிடம் கேட்போம் என வீட்டிற்குள் போவார். அப்பு வெளியில் சாய்வு நாற்காலியில் படுத்திருப்பார். அவரும் அப்புவிடம் கேட்போம் என உள்ளே செல்வார். அங்கே அப்பு உறிபோன்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார். அவரிடம் போய் அனுமதி பெற்று வருவார். இவ்வாறு அநேக குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வாழ்ந்ததாகவும் சில குடும்பங்கள் ஐந்து தலைமுறையாக வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது.


புராண காவியங்களிலும், இலக்கியங்களிலும் இத்தீவு அதிக தொடர்புடையதாக விளங்கியதென்றும் புட்கரம் என்பது நெடுந்தீவையே குறிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இத்தீவானது யாழ்க்குடா நாட்டிலிருந்து நெடுந் தொலைவில் இருப்பதால் நெடுந்தீவு என்று அழைக்கப்பட்டது. இன்றும் தமிழில் இத்தீவு நெடுந்தீவு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. டெல்வ்ற் என்ற பெயர் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் அவர்களாலே பசுத்தீவிற்குச் சூட்டப்பட்ட பெயராகும்.


ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் எல்லாத் தீவுகளுக்கும், தங்கள் நாட்டில் காணப்பட்ட இடங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். நெடுந்தீவிற்கும் தங்கள் நாட்டிலுள்ள ஒரு பாற்பண்ணை நகரின் பெயரான டெல்வ்ற் என்ற பெயரைச் சூட்டினார்கள். டெல்வ்ற் என்ற இப் பெயராலேயே இன்றும் இத்தீவு அழைக்கப்பட்டு வருகிறது.


மக்கள் குடியேற்றம்


நெடுந்தீவில் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், மக்கள் வாழக்கூடிய வசதிகள் இங்கு இருந்தன என்பதும் அங்கு கண்டெடுக்கப்பட்ட 2000 ஆண்டு பழைய கறுப்பு சிவப்பு மட்பாண்ட பாத்திரங்கள், உரோமர் கால நாணயங்கள், கல்லாலான கருவிகள், இடிந்த பண்டைக்கால வீட்டுச் சுவர்கள் என்பவற்றாலும், இங்கு பண்டைக்காலம் முதலாக மக்கள் வாழ்ந்து வந்தமையை அறியக் கூடியதாகவுள்ளது. 


மக்கள் குறைந்த இடங்களில், தென் இந்தியாவிலிருந்து மக்களைக் கொணர்ந்து யாழ்ப்பாண அரசர்கள் குடியேறச் செய்த பொழுது, நெடுந்தீவிலும் குடியேற்றினார்கள் என அறிய முடிகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வெடியரசன் நெடுந்தீவையே இராசதானியாகக் கொண்டு, கோட்டை கட்டி, பிரதானிகள் சகிதம் ஆட்சி செய்தமையும் நெடுந்தீவில் மக்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.


சிங்கை ஆரியன் என்னும் மன்னன், புவனேகபாகு என்னும் மந்திரியுடனும், பரிவாரங்களுடனும் யாழ்ப்பாணம் வந்து நல்லுாரை தலைநகராகக் கொண்டு கி.பி. 950 வரையில் ஆட்சி செய்தான். முதல் ஆரியச் சக்கரவர்த்தியான இவன் மனுநீதி வழுவாது ஆட்சி செய்து வருங்காலத்தில் குடிசனம் குறைந்த இந்நாட்டிலே அனேக பிரசைகள் வாசம் செய்ய வேண்டுமென்று ஓர் நாள் மந்திரியாகிய புவனேகபாகுவுடன் ஆலோசனை செய்து இங்கும் சில தமிழ்க் குடிகளைக் குடியேற்ற வேண்டுமென்று, இந்தியத் தமிழ் அரசர்களுக்கு கடிதம் அனுப்பினான். அத்தமிழ் அரசர்கள் இவனது வேண்டுகோளுக்கிசைந்து சிற்சில இடங்களிலிருந்து தமிழ்க் குடிகளை அனுப்பி வைத்தனர் அவர்கள் தங்கள் அடிமை, குடிமைகளுடன் யாழ்ப்பாணம் வந்தனர். இவர்களில் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அவரவர் அடிமை குடிமைகளுடன் திருநெல்வேலி, மயிலிட்டி, தெல்லிப்பழை,இணுவில், பச்சிலைப்பள்ளி, புலோலி, தொல்புரம் கோயிலாக்கண்டி, இருபாலை போன்ற இடங்களுக்கு அதிபதிகளாக்கிக் குடியமர்த்தினான். 


இவர்களுடன் வந்த பிரபுவான சேயூர் வேளாளனும், இந்திரனைப்போன்ற செல்வனும், நீதி, பொறுமை ஆகிய நற்குணங்களை யுடையவனும், வாசனை பரிமளிக்கும் குவளை மாலை தரித்த மார்பனும் மிகுந்த கீர்த்திப்பிரதாபனும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனும் ஆகிய தனிநாயக முதலியை அவரது பரிவாரங்களுடன் நெடுந்தீவிற்கு அதிபதியாக்கினான்.


இவ்வரலாறு பற்றி யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிலும், யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிநாயக முதலியின் பரம்பரையினரே ஏனைய தீவுகளுக்கும் அதிபதியாக்கப்பட்டனர் என்றும் இங்கிருந்தே ஏனைய தீவுகளுக்கும் மக்கள் சென்று குடியேறினர் என்றும் அறியக்கிடக்கின்றது. இதனால் தான் இன்றும் நெடுந்தீவு மக்களுக்கும் ஏனைய தீவு மக்களுக்கும் இடையே மொழி, சமயம், கலை, கலாச்சாரப் பண்புகள் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. இவை மட்டும் அன்றி, மக்களுக்கு இடையே பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே குடும்ப உறவுகள், 'நிலைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமய ரீதியாகவும் நெடுந்தீவு மக்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம், அனலைதீவு ஐயனார் ஆலயம், வேலணை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் உற்சவங்களிலும் பெருந்தொகையாகக் கலந்து கொள்வர்.இவ்வாறாகப் பண்டைக்காலத்தில் வந்து குடியேறிய மக்களே நெடுந்தீவின் பரம்பரை மக்களாவர்.


வரலாற்றுச் சின்னங்களும், அடையாளங்களும்

* வெடியரசன் கோட்டை 

* பெரியதுறை

* மாவிலித்துறைமுகம்

* போர்த்துக்கீசர் கோட்டை

* ஒல்லாந்தர் கோட்டை

* குதிரைகள் குதிரை லாயங்கள்

* குவிந்தா

* பூதம் வெட்டிய கிணறுகள்

* 40 அடி மனிதனின் காலடி

* பழமை வாய்ந்த ஆலமரம்

* அரசனை அரசு

* பெருக்கு மரம்

* மணல் கடற்கரை

* வெல்லைக் கடற்கரை

* புறாக்கூடு

* கல்வேலி

*வளரும் கல்

போன்றன காணப்படுகின்றது


நெடுந்தீவின் பிரதான துறைமுகங்களும் வரலாற்றுச் சின்னங்களும்


நெடுந்தீவின் துறைமுகங்கள்


பெரியதுறை

நெடுந்தீவிலிருந்து மக்கள் பண்டைக் காலத்தில் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். தென் இந்தியாவிலுள்ள நாகபட்டினம், இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. அக்காலத்தில் மக்கள் பட்டினம் போய் வருவதாகக் கூறுவது இந்தியாவிலுள்ள நாகபட்டினம் போய் வருவதையே குறிக்கும். இதற்காகப் பாவிக்கப்பட்ட துறைமுகம் பெரியதுறை என அழைக்கப்பட்டது. 


இங்கிருந்து மக்கள் பாய் வள்ளங்களிலும், வத்தைகளிலும் யாழ்ப்பாணக் கிட்டங்கிக்கும், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கும் பிரயாணஞ் செய்தனர். வெளி நாடுகளிலிருந்து போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் பாய்க்கப்பல்கள் மூலம் பொருட்களை இத்துறை மூலமே இறக்கினர். இவற்றை விட வேறு சிறிய துறைகளுமிருந்திருக்கின்றன. அவையாவன: கிழக்கே கிழக்குத்துறை, வடக்காக தாளைத்துறை, குடவிலித்துறை, தெற்காக குவிந்தாத்துறை, வெல்லைத்துறை என்பனவாகும். எனினும் பெரிய துறை என்ற பெயரைக் கொண்ட இத்துறையே மிகவும் பெரிய துறையாக அக்காலத்தில் விளங்கியது என்பதனை அறியமுடிகின்றது. இத்துறை நெடுந்தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. மன்னராட்சிக் காலங்களிலும் இத்துறைமுகமே வழக்கிலிருந்திருக்கிறது. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் எவரும் இத்துறையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லாதபடி தடை விதிக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடக்கின்றது. இத் துறைமுகத்தையண்டியே வெடியரசனுக்கும் மீகாமனுக்கும்

சண்டை நடந்ததாக வரலாறு கூறுகின்றது. 


மாவிலித்துறைமுகம்


மாவிலித்துறைமுகத்திற்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்குப் பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என்ற பெயர் வரக்காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன், இத்தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத்துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதையுண்டு. இதற்கான சரித்திரச் சான்றுகளில்லை. 


ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத்துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். மா என்ற சொல்லுக்கு குதிரை, பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குதிரைகள் ஏற்றி, இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் கடல்மூலம் பிரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. பிரயாணிகள் இறங்கவும், பொருட்களை இறக்கவும் கொங்கிறீற்றினால் கட்டப்பட்ட துறை ஒன்று உள்ளது. இது கடலினுள் 15 அடி நீளமமும், 10 அடி அகலமுமமாகக் கட்டப்பட்டுள்ளது. முற்காலத்தில் வத்தைகள் மூலமும், பாய்வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி தொடக்கம் இன்றுவரை இயந்திரப் படகுகள் மூலமும் இயந்திரமிணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் குறுகிய நேரத்திலும் வசதியாகவும் இத்துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்கின்றார்கள். இதற்காகச் சில்வஸ்பிறே, இராசேஸ்வரி, குமுதினி, வடதாரகை, எலாரா எனப் பல இயந்திரப் படகுகள் காலத்திற்குக் காலம் சேவையிலீடுபடுத்தப்பட்டன. இவற்றுடன் பல தனியார் வள்ளங்களும், இயந்திரப் படகுகளும், வத்தைகளும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாவிலித்துறையுடன் பேரூந்து செல்லும், பிரதான வீதி இணைக்கப் பட்டுள்ளது. 


வெடியரசன் கோட்டை


2000 ஆண்டு பழமையான பெருங்கற்கால மையம் இதுவாகும் என்பதற்காக ஆதாரமாக அங்கு கண்டெடுக்கப்பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டம் சிறந்த எடுத்துக் காட்டாகும் நெடுந்தீவின் மேற்கே கோட்டைக்காடு என்னும் பகுதியில் அமைந்திருந்தது. இங்கிருந்தே வெடியரசன் என்னும் மன்னன் தனது ஆட்சியைச் செலுத்தினான். இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டி ருந்திருக்கலாமென அதன் சிதைந்த பகுதிகளைக் கொண்டு புதை பொருள் ஆராட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது. இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


போர்த்துக்கீசர் கோட்டை


போர்த்துக்கீசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுந்தீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறைமுகத்திற்கண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தனர். இக்கோட்டை இடிந்த நிலையில் மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இக்கோட்டை பற்றி பாசெற் என்னும் பாதிரியார், இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்தது. இதன் சுவர்கள் மிகவும் அகலமாகவிருந்தன. மேலே இரண்டு அறைகளும், கீழே இரண்டு அறைகளுமிருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. அதற்குக் கதவுகள் போடப்படவில்லை. அவ்வறையிலிருந்து மேலறைக்குச் செல்லக்கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தட்டையாகவிருந்தது எனவும் கூறியுள்ளார்.


ஒல்லாந்தர் கோட்டை


ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக் கண்மையில் கடற்கரைப் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. இதனுள் சுரங்க அறை ஒன்றும் காணப்படுகிறது. இதுவும் இன்று அழிந்த நிலையிலேயே உள்ளது. இதன் சுவர்கள் மிக அகலமானவை. இதன் உள்ளும் புறமும் பல உடைந்த ஒல்லாந்தர் பாவித்த பொருட்களும், செப்பு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதன் சுவர்கள் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.


குதிரைகள்


ஓல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அவர்கள் தங்களின் தேவைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் பல நூற்றுக்கணக்கான குதிரைகளை அரேபியா, பேர்சியா, முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இவை யாவும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த குதிரைகளாகும். இவற்றுக்காக ஒல்லாந்தர் பல கிணறுகளையும், கேணிகளையும் கட்டியிருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள். இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந்தீவின் மேற்கே காணப்படுகின்றன. 


இக்குதிரைகள், ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும், போதிய பராமரிப்பின்மையாலும், அவற்றைத் தேடுவாரின்மையாலும், அவை சுயேச்சையாகத் தீவின் தெற்கேயுள்ள புல்வெளிகளில் சுதந்திரமாகத் திரிவதைக் காணலாம். இவை இன்று காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இவற்றின் வாரிசுகள் வெல்லையென அழைக்கப்படும் புல்வெளிப் பிரதேசத்தில் கூட்டம், கூட்டமாகத் திரியும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு நல் விருந்தாகும். இன்று இவற்றின் தொகை குறைந்துகொண்டே செல்கின்றது.


குவிந்தா


இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்பட்ட உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. 


குவீன்ரவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக்கோபுரத்தைப் பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதியபோதிலும், இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும், அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு, காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தரேயென அறியப்பட்டுள்ளது. இன்று இக்கோபுரம் அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம்.


பூதம் வெட்டிய கிணறுகள்


சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் பொழியப்பட்ட சில நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. சுமார் முப்பது கிணறுகள் வரை ஒன்றுக்கொன்று மிக அண்மையில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் பத்தடி ஆழமுடையன. சில கிணறுகளை இணைத்துக் கட்டிய வடிகால்களும் நீர்த்தொட்டிகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.


குதிரைகளுக்காகவே இக்கிணறுகள் வெட்டப்பட்டன என அறியப்படுகிறது. இவை இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பொழியப்பட்டிருப்பதால் இவை மனித வலுவுக்கப்பாற்பட்ட ஒரு சக்தியினால்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டுமென மக்கள் கருதுவதால் இவற்றைப் பூதம் வெட்டிய கிணறுகள் அழைக்கின்றார்கள். இவற்றில் சில என கிணறுகளிலிருந்தே தீவிற்கான குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.


குதிரை லாயங்கள்


ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காகக் கட்டப்பட்ட பலதூண்கள் இன்றும் சாறாப்பிட்டிப் பகுதியில் காணப்படுகின்றன. இவை பலநூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்துவிடாமல் இன்றும் நிமிர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன.


நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடி 


நெடுந்தீவு மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற்பாறைகளின் மத்தியில் ஒரு பெரிய மனிதனின் பாதம் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரிதாகக் காணப்படுவதால் நாற்பதடி மனிதனின் கால் பாதம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இப்பாதத்தை இராமபிரானின் கால்பாதமெனவும் சிலர் கூறுகிறார்கள்.


‘நெடுந்தீவில் 40 அடி மனிதனின் பாதச் சுவடு’ என்ற செய்தி வெளிவந்தது. அது பற்றிய விஞ்ஞான, ஐதீக அனுமானங்களை இப்படி இப்படிப் பேசிக்கொள்கிறார்கள் என்று தப்பித்துக் கொண்டீர்கள் என்றாலும். திடமான அறிவியற் பார்வையைத் தொலைக்க உதவும் செய்திகளைப் பிரசுரிக்காதிருப்பீர்களா என்ற பணிவானதொரு வேண்டுதல்.குவேனியும்-சிங்கமும்(மகாவம்சம்) கூழைக்கடாவும்-கொக்கும் (வாடைக்காற்று) புணருவதால் புதிய தலைமுறை உருவாக முடியும் என நம்பவைத்த அறிவற்ற எழுத்துச் செயற்பாடுகள் ஏற்படுத்திய தொல்லைகளைக் கடந்துவர முடியாது திணறும் மக்களை ஐதீகக் கருத்துக்களை தவிர்த்து வடிக்கும் ஆக்கங்கள் ஊடகங்களுக்கு உவப்பானது.


பழமைவாய்ந்த ஆலமரம்


நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூறாண்டுகளுக்கு மேல், பழமைவாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்தீரணத்திற்குக் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து காணப்படுகிறது. இதன் இலைகளை ஆடுமாடுகள் உண்பதில்லை. இதன் அருகே ஓர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமரத்தின் அருகே இருப்பதால் ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகிறது.


அரசனைய அரசு


நெடுந்தீவின் மேற்கிலுள்ள புக்காட்டு வயிரவர் கோவிலின் அருகே பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இது மூன்று ஏக்கர் நிலம் வரை வியாபித்துள்ளது. கிளைகள் நீண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளருகின்றது. மகாவித்தியாலயத்தின் ஐந்தாண்டு நிறைவு மலரில் இணுவிலைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு. ஆனந்தர் பி.ஓ.எல் அவர்கள் இதனைப் பார்த்து அரசனைய அரசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.


பெருக்கு மரம்


இம்மரம் நெடுந்தீவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பலநூறு வருடங்களுக்கு மேற்பட்டதெனக் கூறப்படுகிறது. இதன் அடிமரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும், காய்கள் வட்டமான பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையிலே மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகிறது. இம்மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அறியப்படுகிறது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களால் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகிறது.


மணல் கடற்கரை


இது நெடுந்தீவின் மத்தியில் வடகடற்கரையில் அமைந்துள்ளது. மணல் வெள்ளையாகக் கடற்கரை நீளத்துக்குப் பரந்து காணப்படுகிறது. இதனருகேயுள்ள கடல், கற்பார்கள் அற்றதாகவும், குளிப்பதற்கும், நீந்துவதற்கும் இதமானதாகவும் அமைந்துள்ளது. இதனருகே பல நன்நீர்க் கிணறுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனருகேதான் ஒல்லாந்தர் கோட்டையும் அமைந்திருந்தது. இக்கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் ஒரு இடமாகும்.


வெல்லைக் கடற்கரை


நெடுந்தீவின் தெற்கே வெல்லைக் கடற்கரை அமைந்துள்ளது. இதன் கரைகள் பெரிய பாரைக்கற்களின்றியும், மணற்பாங்காகவும் உள்ளது. வெளியூர்களிலிருந்து காலத்திற்குக் காலம் மீன் பிடிப்பதற்காக வரும் மீனவர்கள் இக்கரை நீளத்திற்குத் தங்கள் வாடிகளை அமைத்திருப்பதைக் காணலாம். வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் இப்பகுதிக் கடல் மிக அமைதியாகவிருக்கும். இக்காலங்களில் கட்டுமரங்களிலும், மோட்டார் வள்ளங்களிலும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பிவரும் காட்சிகளும், மீன்கள் வாங்கப் பணத்துடனும், பண்டமாற்றுப் பொருட்களுடனும் மக்கள் கூடும் காட்சிகளும், ஒரு தனி அழகாகவிருக்கும். இக்கடற்கரையை அண்டிய புல்வெளிகளிலேயே குதிரைகளையும் கூட்டம், கூட்டமாகக் காணலாம்.


இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.


நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.


தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.


வடமாகாணத்தின் ஓர் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் 'நெடுந்தீவு' இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும் 


தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலிலிருந்து புறப்பட்ட 'ஹீர்த் டீ போலோ' (Hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும் வளங்களையும் மனதில்கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல, இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்றானாம் அத்தகைய வரலாற்று சிறப்புடையது நெடுந்தீவுவாகும்


தொகுப்பு 

Kanthasamy

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.