ஈரானுக்கு ஈரான் மட்டும் தான் துணை.!
ஈரான் இந்த யுத்தத்திற்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் விலை ரொம்ப அதிகம்.ஒன்பது விஞ்ஞானிகளையும் சில ராணுவத் தளபதிகளையும் தொலைத்து நிற்கிறது ஈரான்.
பிராந்தியத்தில் என்னைத் தவிர எவனுமே அணு ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது என்ற இஸ்ரேலின் அகங்காரமே இந்த யுத்தத்தின் ஆதாரக் காரணம்
அணு குண்டை உருவாக்க யுரேனியத்தைத் தொண்ணூறு சதவீதம் செறிவூட்ட வேண்டும்.ஈரான் அறுபது சதவீதம் செறிவூட்டி இருப்பதாகவும் முழுமையாகச் செறிவூட்ட சில வாரங்களே போதும் என்று சர்வதேச அணு ஆராய்ச்சி மையம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்த போதுதான் தலை வீங்கிப் போய் இருந்த அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கே வந்தது.
இதுவரை ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடை பெற்று முடிந்துவிட்டன. 'நாங்கள் அணு ஆயுதத்தை யுத்தத்திற்குப் பாவிக்கமாட்டோம். அதன் மூலம் மனித உயிர்களைக் கொல்வது பாவம், ஹறாம் ' என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி கொமெய்னியின் அறிவிப்பு ஒன்றே போதும் ஈரான் என்றைக்கும் அணுகுண்டைப் பாவிக்கப் போவதில்லை என்ற தாராள உறுதியை வழங்குவதற்கு..
ஈரானில் அரசாங்கம் என்ற ஒன்று இருந்தாலும் கொமேனி தான் எல்லாமே. யுத்தத்தையும் சமதானத்தையும் பிரகடனப்படுத்தும் அதிகாரம் அவருக்கே இருக்கிறது.
அணுகுண்டை விட அடுத்த வேளை சோறு தான் முக்கியம் என்று ஈரான் கருதியதால் தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்தது. முதுகை உடைக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்க ஆர்வத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுவார்த்தைகள் எந்தவித தீர்வுமின்றித்தான் இதுவரை நடந்து முடிந்து இருக்கின்றன.
அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டொலர்களில் கொட்டித் தீர்த்த சவூதி கட்டார் அமீரக முட்டாள் ஷேக்குகள் போல ஈரானின் நிர்வாகமும் இருந்து இருந்தால் நீ எதை வேண்டும் என்றாலும் செய்து கொள் என்று அமெரிக்கா இருந்து இருக்கும்.
ஆனால் ஈரானோ லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் முட்டாள் தேசமல்ல. அப்படி லஞ்சம் கொடுத்த லட்சணத்திற்குத்தான் ஐ நா சபை பாதுகாப்புக் கவுன்சிலில் காஸா படுகொலைகளை நிறுத்தக் கூடாது என்று குருதி படிந்த கரங்களுடன் எந்த மனசாட்சியுமில்லாமல் கை உயர்த்தியது அமெரிக்கா.
மொத்தமாய் எல்லாவற்றையும் உதறிவிட்டு அம்மணமாய்க் குந்த வேண்டும் என்று நினைக்கிறது அமெரிக்கா. அதனால் தான் தன் வளர்ப்பு நாயைப் போட்டு அடிக்கிறது. அதாவது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுவது..
இஸ்ரேல் ஈரானின் கேந்திர முக்கிய நிலையங்களையும் தலைவர்களையும் இவ்வளவு இலகுவாய்க் கொன்றதன் பின்புலத்தில் நிச்சயம் ஈரானின் ராணுவ மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த சிலர் விலை போய் இருப்பதையே உணர்த்துகிறது. இஸ்ரேல் அதன் வெப் சீரிஸ்களில் காட்டுவதைப் போல எத்தனையோ கறுப்பாடுகள் இஸ்ரேலிற்கு உதவிக் கொண்டு இருக்கின்றன.
ஈரான் இந்த அவலத்திலும் இப்படிப் போட்டுத் திருப்பி அடித்தது சாதனைதான். ஈரானுக்கு அடிப்பதற்கு இஸ்ரேலிற்கு அரபு நாடுகளின் வான் பரப்பு பற்றி எந்தவிதப் பிரக்ஞையுமில்லை.ஆனால் ஈரானுக்கு அப்படி அல்ல.ஈரானுக்கு ஈரான் மட்டும் தான் துணை.
கருத்துகள் இல்லை