யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட சில எரிபொருள் நிலையங்கள்!📸
யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 16) மீண்டும் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்திருப்பதாகத் தெரிகிறது. மத்திய கிழக்கின் யுத்தச் சூழ்நிலையால் எரிபொருளுக்கு தட்டுப்பாடுன் ஏற்படும் என ஒரு சிலர் எரிபொருள் நிலையங்களில் முண்டியடித்ததால், நகரத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'எரிபொருள் இல்லை' என்ற அறிவிப்புடன் மூடப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் ஒரு பதற்றம் ஏற்பட்டது.
திறந்திருந்த ஒரு சில நிரப்பு நிலையங்களிலும், எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தன. இதனால், வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், ஒருசில இடங்களில் பொதுமக்கள் தங்கள் அன்றாட நடவடிகக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த திடீர் நெருக்கடிக்குக் காரணம் ஈரான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என தேவையற்ற பதற்ற நிலையை ஒரு சிலர் உருவாக்கியதே எனக் கூறப்படுகிறது.
இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்களே பதற்றத்தில் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில் - வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமைபோன்று செயற்பட்டு எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று போதியளவு எரிபொருள் இருப்பதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்க அதிபரும் அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை