கொரியாவில் இலங்கை தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!
தென் கொரியாவின் நஜு நகரிலுள்ள செங்கல் தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளி ஒருவர் சக ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க, தென் கொரிய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி, "ஃபோர்க்லிஃப்டில் கட்டிவைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது," என்று கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை பிளாஸ்டிக் ஷீட்டுகளால் தொழிலாளியின் உடல் ஃபோர்க்லிஃப்ட்டில் கட்டப்பட்டிருந்தது. அப்போது சக தொழிலாளர்கள் சிலர் அதனைச் சுற்றி நின்று கேலி செய்து காணொளி எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காணொளியில், ஒரு கொரியர், "நீ ஏதாவது தவறு செய்தாயா? தவறு செய்தாய் என்று சொல்!" என்று அந்தத் தொழிலாளியை மிரட்டுவது கேட்கிறது. சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோர்க்லிஃப்டில் கட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பிறகு அவருக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 2024-ல் E-9 விசா மூலம் கொரியாவுக்கு வந்த அவர், மூன்று மாதங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். மனித உரிமை அமைப்பின்படி, வேலை சம்பந்தமாக எந்தத் தவறும் செய்யாத போதிலும், ஒரு சக இலங்கையருக்கு செங்கற்களை எப்படிச் சரியாக பேக் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கத் தவறியதாக ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்குத் தொடர் தொல்லைகள் ஏற்பட்டதால், மனித உரிமைக் குழுவின் உதவியை நாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மனித உரிமை அமைப்பினர், "இந்தக் கொடூரமான மனித உரிமை மீறல் ஒரு கேலி அல்லது தண்டனை அல்ல. கொரியச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பாகுபாடு மற்றும் வன்முறையின் விளைவுதான் இது," என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை அதிபர் லீ ஜே மியங் கடுமையாகக் கண்டித்துள்ளார். "இத்தகைய துஷ்பிரயோகம் ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு மன்னிக்க முடியாத வன்முறை செயல். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் தடுப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை