இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தரும் நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரிட்டன், மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று இரவு 7.30 மணிக்கு மாலத்தீவில் இருந்து புறப்பட்டு, தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரை தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்கின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மூத்த தலைவர்களும் வரவேற்க உள்ளனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை இரவு 8 மணிக்கு மோடி திறந்து வைக்கிறார். பின்னர், ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். இதில், ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அலகின் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.
இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் இரவு தங்கும் அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் செல்கிறார்.
அங்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்வான, ஆடித் திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்புப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார் மற்றும் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்.பி.ஜி. குழுவினர் என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, பரப்புரை, ரோடு ஷோ, சுற்றுப் பயணம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் வருகையும் தேர்தல்ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
கருத்துகள் இல்லை