அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என டிஜிபி உத்தரவு!
"அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் வடமாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்" என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
தமிழக மக்கள் உரிமை
மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணி இடையேயான அதிகார மோதல் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது பாமகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமதாஸ் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25), ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சார நடைபயணத்தை தொடங்குவதாக அன்புமணி அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்த நடைபயணத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “அன்புமணி நடைபயணம் செல்ல என்னிடம் அனுமதி வாங்கவில்லை. எனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரச்சாரம் மேற்கொள்வது என அன்புமணியின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சுற்றுப் பயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே போலீசார் அதற்கு தடை விதிக்க வேண்டும்" என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயத்தில், அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில் நேற்று தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்நிலையில், அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும் என அவரது ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட அவசியம் இல்லை என்றும், நடை பயணத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை