முருங்கைக் கீரை குழம்பு செய்வது எப்படி!


தேவையான பொருட்கள்.

முருங்கைக்கீரை – ஒரு கப்

நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம்

துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் – ஒரு மூடி

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

கடுகு – ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 20

பூண்டு பொடியாக நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

புளி – 25 கிராம்

தண்ணீர் – 350 எம்எல்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை.

முதலில் புளியை 100 எம்எல் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளுங்கள். 100 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைய வேகவைத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பையும், ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசியையும் போட்டு ஐந்து நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


அடுத்ததாக தேங்காய், மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய் எட்டு இவை நான்கையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மீதம் இருக்கும் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டும் நன்றாக வதங்கியதும் அதில் கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து புளி கரைசலை அதில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். புளியின் பச்சை வாடை போன பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் கீரையை சேர்த்து ஐந்து நிமிடம் கீரையை வேக விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும் இதில் 250 எம்எல் தண்ணீரை ஊற்றி வேக வைத்திருக்கும் பருப்பையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் இதில் கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் துளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி இறக்க வேண்டும். சுவையான முருங்கைக் கீரை குழம்பு தயாராகிவிட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.